உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.
நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறை ராமர் சிலை வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். கருவறையில் வைக்கப்படும் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வந்து பூஜை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்ய பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சாமி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ராமர் ஏறக்குறைய 15 ஆண்டுகள் போராடி தனது மனைவி சீதையை மீட்டார். இப்படியான சூழலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடியை பிரதிஷ்டை பூஜை செய்ய ராமர் பக்தர்களான நாம் எப்படி அனுமதிக்க முடியும்? ஏனென்றால் மோடி தனது மனைவியை கைவிட்டவராக அறியப்படுகிறார். இப்படி இருக்கும்போது அவர் தான் பூஜை செய்வாரா?” எனக்கேட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.