கோயிலில் கிரிக்கெட் விளையாடினால் என்ன தப்பு.. கர்ப்பகிரகத்திலா விளையாடினார்கள் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் H. ராஜா பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம் பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி காவல் நிலையில் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, தீட்சிதர்கள் சிலர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த இளையராஜா அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளையராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோயில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தீட்சிதர்கள் 5 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் H. ராஜா செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஏன் கிரிக்கெட் விளையாடினா என்ன தப்பு. கர்ப்பக்கிரகத்தில் விளையாடினாங்களா. கிரவுண்டுல விளையாடலாம் இல்லையா.
நான் உடற்கல்வி பேராசிரியரின் மகன். என் தகப்பானரின் மூன்று ஆராய்ச்சி சப்ஜக்ட் லெஸிம், லாட்டி, மால்கம். மால்கம் என்பது தூண் வைத்து உடற்பயிற்சி செய்வது, லாட்டி சிலம்பம், லெஸிம் சலங்கை வைத்து செய்வது. இதெல்லாம் கற்றுக்கொண்டது தவறு என்று கூறுவீர்களா. உடற்பயிற்சி, விளையாட்டு என்பது எல்லோரும் செய்ய வேண்டும். இதில் எந்தவொரு தப்பும் இல்லை என H. ராஜா கேள்வி எழுப்பி மேலும் இந்த விஷயத்தை பரப்பாக்கியுள்ளார்.