10 வயது சிறுவன் நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்..!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் 10 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேஹா பிஸ்வால் என்ற பெண் பெங்களூரு நகர சாலையில் நடந்தபடியே வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவ்வழியே வந்த சிறுவன் ஒருவன் அப்பெண்ணை தகாத முறையில் தொட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார். இந்த சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில் பேசிய நேஹா பிஸ்வால், “எனக்கு இந்த மாதிரி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை. நான் சாலையில் நடந்து கொண்டே வீடியோ பதிவு செய்து கொண்டு இருக்கும்போது எனக்கு பின்னால் இருந்து சைக்கிளில் வந்த சிறுவன் ஒருவன் என்னை கடந்து சென்றவுடன் சைக்கிளை திருப்பி கொண்டு என்னை நோக்கி வந்தான். என அருகில் வந்த சிறுவன் என்னை கிண்டலடித்தான். என்னை போலவே பேசி மிமிக்ரி செய்தான். பின்னர் தகாத முறையில் என்னை சீண்டினான்.

உடனே நான் சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை பிடித்தனர். அவர்களிடம் நான் நடந்ததை கூற, அவர்களோ இவன் சிறுவன் வேண்டுமென்றே இவ்வாறு செய்திருக்க மாட்டான் என்று அவன் மீது கருணை காட்டினார்கள். நான் எனக்கு நடந்த பாலியல் சீண்டல் தொடர்பான வீடியோவை அவர்களிடம் காட்டிய பிறகு தான் அவர்கள் அதை நம்பினார்கள். ஆனாலும் கூட சிலர் சிறுவன் மீது இரக்கம் காட்டினார்கள். நான் அந்த சிறுவனை அடித்தேன். என்னுடைய நிலையை உணர்ந்து அங்கிருந்த சிலரும் அந்த சிறுவனை அடித்தார்கள். ஆனால் அந்த இடத்தில் நான் பாதுகாப்பாக உணரவில்லை.

அந்த சிறுவனின் மீது காவல்துறையில் புகார் கொடுத்து அவனது எதிர்காலத்தை அழிக்க விரும்பவில்லை. ஆனால் அந்த சிறுவனை இது தொடர்பாக கண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். இந்த வீடியோ தொடர்பாக தானாக முன்வந்து பெங்களூரு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்டாள் நாகராஜ் திட்டவட்டம்: கர்நாடகத்துடன் ஓசூரை இணைத்த பிறகு தான் மெட்ரோ திட்டம்..!

கர்நாடகா பெங்களூருவிலிருந்து சந்தாபுரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் வழித்தடத்தை அத்திப்பள்ளி வழியாக தமிழகத்தின் ஓசூர் வரையிலும் நீட்டிக்க கர்நாடகா அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழக அரசும் இத்திட்டத்தை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு மெட்ரோ ரயிலை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து ஓசூர் அருகே கர்நாடகா-தமிழக எல்லையான அத்திப்பள்ளி – ஜூஜூவாடி இடையே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கன்னட சலுவளி, கன்னட ரக்சன வேதிகே ஆகிய அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். ஓசூரிலிருந்து கர்நாடகா சென்ற வாகனங்களை தடுத்து மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஓசூரை கர்நாடக மாநிலத்துடன் இணைக்க வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஊட்டி, ஓசூர் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. ஓசூரை இணைத்த பிறகு தான் மெட்ரோ திட்டம் ஓசூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு அங்குலம் கூட நீட்டிக்க அனுமதிக்க மாட்டோம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட விழா…. பசு கோமியம் தெளித்த … மாணவர் அமைப்பு

நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து பொது வெளி மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் சில முற்போக்கு சங்கங்கள் இணைந்து ‘திரையரங்கு சினிமா சமுதாயம்’ என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

பிரகாஷ்ராஜ் கலந்து கொள்வது குறித்து தெரியவந்ததும் விழா நடந்து கொண்டிருந்த கல்லூரி முன்பு பா.ஜ.க. சேர்ந்தவர்கள் தனியார் அமைப்புகளுக்கு கல்லூரி நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கல்லூரி வளாகத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து பலத்த காவலர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் விழா முடிந்து பிரகாஷ்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற பின்னர் நிகழ்ச்சி நடந்த அறையில் பா.ஜ.க. மாணவர் அமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் பசு கோமியத்தை கொண்டு சுத்தம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக புதையல் இருப்பதாக கருதி 4 வயது சிறுமி நரபலி கொடுக்க முயற்சி

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்திலுள்ள பூஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி ஒருவர் நரபலி கொடுக்கப்படப் போவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது பூசாரி ஒருவர் தனது 12 கூட்டாளிகளுடன் சூனியம் செய்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பூசாரி உட்பட 12 பேரை காவல்துறை கைது செய்து மட்டுமின்றி நரபலி கொடுப்பதற்காக அழைத்து வரப்பட்ட நான்கு வயது சிறுமியை காவல்துறை மீட்டனர்.

மேகதாது அணை விவகாரம்: தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு மாநிலமானது தனது திட்டங்களுக்கு மற்றொரு மாநிலத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளது. ஆகவே, கர்நாடக முதல் மந்திரி , தமிழக முதல் அமைச்சரிடம் அனுமதி கோருவது அரசியல் விருப்பமின்மை” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது,மேகதாது திட்டத்திற்கான டெண்டர்கள் விடும் பணிகளை தொடங்கினோம் என்று தெரிவித்த சிவக்குமார், “ஏன் அதே செயல்முறையைத் தொடரவும், டெண்டர்களை வழங்கவும் முடியவில்லை?” எனவும் கர்நாடக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.