நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உத்தவ் தாக்கரே தலைமையிலான போலி-சிவசேனா, சரத் பவாரின் போலி-என்சிபி மற்றும் மகாராஷ்டிராவில் எஞ்சியிருக்கும் காங்கிரஸ் உள்ளது. இந்த மூன்று கட்சிகளும் பொருந்தாத உதிரி பாகங்களைக் கொண்ட ஆட்டோரிக்ஷாவைப் போன்றது. அது எப்படி மகாராஷ்டிராவுக்கு நல்லது செய்யும், எப்படிச் செய்யும்” கூறி இருந்தார். அமித் ஷாவின் இந்த கருத்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமித் ஷாவின் கருத்திற்கு, சரத் பவார் தலைமையிலான என்சிபியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் சாங்லி, “கட்சியை இரண்டாகப் பிளந்தவர் ஒரு பகுதியைப் போலி என்கிறார். யார் போலி, யார் உண்மையானவர் என்பதை மகாராஷ்டிர மக்கள் முடிவு செய்யட்டும். மகாராஷ்டிரா மக்கள் முடிவு செய்துவிட்டனர், வாக்கெடுப்பு மூலம் முடிவை நீங்கள் காண்பீர்கள் என ஜெயந்த் பாட்டீல் சாங்லி பதிலடி கொடுத்துள்ளார்.