ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள தொகுதிகளுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.
இதற்கிடையே நேற்று தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 32 இடங்களில் போட்டியிடுகிறது. ஐந்து இடங்களில் தனித்தனியாக களம் இறங்குகின்றன. அதேவேளையில் பாஜக நேற்று காலை 44 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. உடனடியாக அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. பின்னர் முதற்கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இது தொடர்பாக உமர் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில், பாஜக அலுவலகத்தில் நேற்று பர்னிச்சர்கள் உடைக்கப்பட்டன. அங்கு அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவியது.
ஆனால், இதில் ஆச்சர்யம் படுவதற்கு ஏதுமில்லை. நீங்கள் திடீரென மூத்த வீரர்கள் அனைவரையும் நீக்கும்போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். பாஜக கட்சி மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. இதனால் சங்கடத்தை பாருங்கள். ஒரு கட்சி பட்டியலை வெளியிட்டு 10 நிமிடத்திற்குள் அதை திரும்பப்பெற்ற பின், மீண்டும் அதில் இருந்து குறைந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட பட்டியலை வெளியிட்டதை இதுவரை நான் பார்த்ததே இல்லை என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.