அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்காததால் சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் 15 கி.மீ வரை குழந்தைகளின் சடலங்களை தூக்கி சென்ற அவலம். பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் அகேறி என்ற பகுதியை அடுத்துள்ள பட்டிக்கான் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளன. இந்த சூழலில் இந்த குழந்தைகளுக்கு மிகவும் காய்ச்சல் அடிக்கிறது என்பதால் கடந்த 4-ஆம் தேதி ஜமீல்கட்டா ஆரம்ப சுகாதார நிலையம் த்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அங்கே மருத்துவர் இல்லாத காரணத்தினால், சுமார் 2 மணி நேரம் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரம் கழித்து வந்த மருத்துவர் சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.
பின்னர் குழந்தைகளின் உடலை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முனைந்த பெற்றோர், அதற்காக ஆம்புலன்ஸை எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் ஆம்புலன்சும் இல்லாத காரணத்தினால் வேறு வழியின்றி சேறும், சகதியுமாய் இருந்த பாதையில் சுமார் 15 கி.மீ வரை தங்கள் தோள்களில் தங்கள் குழந்தைகளின் சடலங்களை கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.