சஞ்சய் ராவத் கடும் விமர்சனம்: தமிழ்நாடு, கேரளா பக்கம் போங்க..! மகாராஷ்டிராவில் இந்தி திணிக்க தேவையில்லை..!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் இந்தியை போதியுங்கள். மகாராஷ்டிராவில் பள்ளிப் பாடங்களில் திணிக்க வேண்டிய அவசியமில்லை” என சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நிலவுகிறது.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி இம்மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறும்போது, “அரசு அலுவல் மொழியாக மராத்தி இருக்கையில் இந்தி போதிக்கத் தேவையில்லை. முதலில் மராத்தியை முழுமையாக கட்டாயமாக்குங்கள்.

பணி, தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலில் மராத்திக்கு மதிப்பு கிடைப்பது அவசியம். இந்தி மொழியின் பாலிவுட் பட உலகம் இங்குதான் உள்ளது. இந்தி மொழிப் பாடல்களை நாம் ஏற்கெனவே பாடுகிறோம். இதன் பிறகுமா எங்களுக்கு இந்தி போதிக்கிறீர்கள்?

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் இந்தியை போதியுங்கள். மகாராஷ்டிராவில் மராத்திதான் முதல் தேவை. இந்தி மீதான காதல் நாடு முழுவதிலும் உள்ளபோது அதை பள்ளிப் பாடங்களில் திணிக்க வேண்டிய அவசியமில்லை” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.