உயர்நீதிமன்றம் கேள்வி: மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா..!?

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்றம் கேள்வி: முதலமைச்சர் ஒப்புதல் அளித்தது ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்..!

ஆயுள் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்?” முன்கூட்டியே விடுவிக்கக் கோரி கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள 10 கைதிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி வழக்கு: ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை பறிக்காதது ஏன்..!?

கடந்த 2019-ல் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் கடிதம் அளித்த நிலையில், ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், பிரிட்டனில் 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பேக்காப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக ராகுல் காந்தி இருந்துள்ளார். 2005 அக்டோபர் 10 மற்றும் 2006 அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் அந்த நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர அறிக்கையில், ராகுல் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு அந்நிறுவனம் தொடர்பான விவரங்கள் 2009-ல் வெளியிடப்பட்டபோதும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக ராகுல் காந்தியின் பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அயல்நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் இந்திய குடிமகனாக கருதப்படமாட்டார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் பேரில் உள்துறை அமைச்சகம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அப்போது ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில், ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதியிலும் வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். எனவே உச்ச நீதிமன்றம் இதில் தலையிட கோரி இரு தனி நபர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏதோ ஒரு நிறுவனம் ஒருவர் பிரிட்டன் குடிமகன் என்று கூறினால் அதற்காக அவரை பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக கருத முடியாது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த குற்றச்சாட்டு செல்லாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி சார்பில் அவரது உதவியாளரும் வழக்கறிஞருமான சத்ய சபர்வால் வழக்கு தொடுத்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.

கிளப்கள் மற்றும் சொசைட்டிகளில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் உள்ள பாண்டியன் பொழுதுபோக்கு கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும், ஆனால், காவல்துறையினர், சோதனை என்ற பெயரில் தங்களைத் துன்புறுத்துவதாகவும்,காவல்துறையினரின் அத்துமீறல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், இந்த கிளப் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும், சட்டவிரோதமாகப் பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கிளப்கள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கிறதா என்பதை ஆய்வு செய்வது காவல்துறை அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும், தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.யைச் சேர்த்த நீதிபதி, தமிழகம் முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவா?, சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் நடைபெறுகின்றனவா? என ஆய்வு செய்ய பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி காவல் நிலையங்களிலும் கிளப்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். கிளப்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த கிளப்களின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இதுகுறித்து 12 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.