கல்பனா சோரன்: தோல்வி பயத்தில் பாஜக தலைவர்கள் உளறி வருகின்றனர்..!

கல்பனா சோரன்: தோல்வி பயத்தில் பாஜக தலைவர்கள் உளறி வருகின்றனர்..!

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகலில் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளும், பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த 13 ஆம் தேதி 43 தொகுதிகளுக்கு நிறைவடைந்த நிலையில் 2-ம் வாக்கு பதிவு மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆகையால் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்றுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைகின்றன. இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்கு பதிவுகாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி நேற்று முன்தினம் தியோகர் மாவட்டம் மதுப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கலந்துகொண்டு ஜேஎம்எம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அப்போது, ஜேஎம்எம் அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஜேஎம்எம் அரசின் சர்வஜன் பென்ஷன் திட்டம், மைன்யா சம்மான் திட்டம் ஆகியவை மக்களிடையே பிரபலமான திட்டங்களாக உள்ளன. மைன்யா சம்மான் திட்டம் மூலம் 55 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் மேலும் பெண்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்தத் திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ரொக்கம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

அதைப் போலவே சர்வஜன் பென்ஷன் திட்டத்தின் கீழ் 40 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதேபோல் புலோ ஜனோ திட்டம் மூலம் 9 லட்சம் சிறுமிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும், அரசு சார்பில் 25 லட்சம் குடும்பத்தாருக்கு அபுவா ஆவாஸ் திட்டம் மூலம் வீடு கட்டித் தரப்படவுள்ளது. மேலும் 20 லட்சம் குடும்பத்தாருக்கு பச்சை நிற ரேஷன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களைப் பார்த்துத்தான் பாஜக தலைவர்கள் தோல்வி பயத்தில் உளறி வருகின்றனர் என கல்பனா சோரன் தெரிவித்தார்.

3 மாஜி பாஜக MLA -க்கள் JMM கட்சியில் இணைந்தனர்..!

ஜார்க்கண்டில் பாஜக முன்னாள் MLA -க்கள் 3 பேர் உட்பட ஏராளமான பாஜக தலைவர்கள் திடீரென ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜகவை சேர்ந்த மூன்று முன்னாள் MLA -க்களான லூயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் துடு ஆகியோர் திடீரென முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று முறை பாஜக MLA -வாக இருந்த கேதர் ஹஸ்ரா, ஏஜேஎஸ்யூ கட்சித் தலைவர் உமாகாந்த் ரஜக் ஆகியோரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்தனர்.

 

பாஜக முன்னாள் MLA லூயிஸ் மராண்டி, கடந்த 2014-ல் நடந்த தேர்தலின் போது தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனை 5,262 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் பதிவில், ‘‘முன்னாள் பாஜக துணை தலைவர் மற்றும் மூத்த தலைவர் மரியாதைக்குரிய லூயிஸ் மராண்டியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குடும்பத்துக்கு வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

Champai Soren: ராஞ்சியில் ஆகஸ்ட் 30-ல் பாஜகவில் சம்பாய் சோரன் இணைகிறார்..!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் சம்பாய் சோரன் முகாமிட்டிருந்தார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும் இது குறித்து பேசிய அவர், “என்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக இங்கு வந்துள்ளேன். வதந்திகள் பரப்பப்படுவது குறித்து எதுவும் தெரியவில்லை” என்றார்.

ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் அவர் பாஜகவில் இணைவார் என்ற ஊகங்களை வலுப்படுத்தியது. இந்நிலையில், வரும் 30-ஆம் தேதி அன்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைய உள்ளதாக ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

“ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தேசத்தின் ஆதிவாசி தலைவர்களில் ஒருவருமான சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிகாரபூர்வமாக பாஜகவில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அன்று அவர் இணைய உள்ளார். இது ராஞ்சியில் நடைபெற உள்ளது” என அந்த ட்வீட்டில் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு: குடும்பங்களையும் காட்சிகளையும் உடைக்கும் வேலையை பாஜக செய்கிறது..!

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான சம்பாய் சோரன் சில எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. இந்த யூகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நேற்று டெல்லி சென்ற சம்பய் சோரன், கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தொடர்ச்சியான அவமதிப்பு காரணமாக தான் வேறு பாதையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமது வாழ்க்கையில் புதிய பாதை தொடங்க உள்ளதாக கூறியுள்ள சம்பாய் சோரன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுதல் அல்லது தனிக்கட்சி தொடங்குதல் அல்லது இந்த பாதையில் ஒரு கூட்டாளியை கண்டுபிடித்தல் ஆகிய 3 தேர்வுகள் தமக்கு முன்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சம்பாய் சோரனை வரவேற்பதாக நேற்று ஜிதன் ராம் மஞ்சி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சம்பாய் சோரனின் இந்த முடிவுக்கு பின்னால் பாஜக உள்ளதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார். குடும்பங்களையும் காட்சிகளையும் உடைக்கும் வேலையை பாஜகவினர் பார்க்கின்றனர் என ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹேமந்த் சோரன் கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்: “ஜார்க்கண்ட்டின் உறுதி மிக்க மக்கள் நிச்சம் பதிலடிகொடுப்பார்கள்”

ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தார். இவர் மீது நில சுரங்க முறைகேடு புகார் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை நிராகரித்தார்.

அதன்பிறகு கடந்த மாதம் 20-ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் ராஞ்சியில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் 30 மணிநேரம் மாயமானார். இதையடுத்து மீண்டும் ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 7 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “சக்திவாய்ந்த ஒரு பழங்குடியினத் தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல், வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பைக் குறைக்கும் திட்டமிட்ட சதி.

ஹேமந்த் சோரன் எனது நெருங்கிய நண்பர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் அவர் பக்கம் உறுதியாக நிற்பேன் என்று நான் சபதம் செய்கிறேன். இந்த முக்கியமான போரில் ஜார்க்கண்ட்டின் உறுதி மிக்க மக்கள் நிச்சம் பதிலடிகொடுப்பார்கள், வெற்றி பெறுவார்கள்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த இண்டியா கூட்டணி தீர்மானம்…! ஒரே அணியாக போட்டி…!

2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. பாட்னா, பெங்களூருவில் இதன் முதல் 2 கூட்டங்கள் நடந்த நிலையில், 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த 3-வது ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பிஹார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி, மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற சூழலிலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியங்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், பாஜகவை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், மக்களவை தேர்தலில், முடிந்தவரை தொகுதி பங்கீட்டுக்கான இடங்களை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பெற்று, ஒரே அணியாக போட்டியிடுவோம் என கூட்டணி தலைவர்கள் தீர்மானமாக அறிவித்து குறிப்பிடத்தக்கது.