கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்..!

கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, உள்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி.

அதேநேரம் பொதுமக்கள் யாரிடமாவது லஞ்சம் வாங்கியது அவர்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியவந்தால், அந்த ஊழியர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையை உயர் அதிகாரிகளால் எடுக்க முடியும். அதேபோல் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு உள்ளது. காவலர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். காவலர்கள் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய முடியும்.

குறைந்தபட்ச தண்டனையாக ஆயுத படைக்கும் மாற்ற முடியும்… இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முடியும். அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்கள் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கன்னிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கன்னிவாக்கம் பகுதியில் கால் டாக்சியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டிரைவரிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் விசாரித்த போது அவர் மது குடித்த நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து 2 காவலர்களும், உன் மீது வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ.1,500 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு கால் டாக்சி டிரைவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினாராம்.. ஆனால் 2 காவலர்கள் டிரைவரிடம் ‘கூகுள் பே’ வில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர் ரூ.2 ஆயிரம் இருக்கும் என்று கூறினாராம். அந்த 2 காவலர்களும் உடனடியாக நாங்கள் சொல்லும் ‘கூகுள் பே’ எண்ணுக்கு ரூ.1,500 அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவலர்கள் கூறிய எண்ணுக்கு ரூ.1,500-ஐ ‘கூகுள் பே’ மூலம் அனுப்பி இருக்கிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து 2 காவலர்களும் சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவங்கள் பற்றி கூறினாராம். இந்த விவரம் தாம்பரம் மாநகர ஆணையர் கமிஷனர் அபின் தினேஷ் மோதக்கின் கவனத்திற்கு வந்தது. அவர் சம்பந்தப்பட்ட 2 காவலர்களை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். உயர் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கால் டாக்சி டிரைவரிடம் இருந்து மற்றொரு நபரின் ‘கூகுள் பே’ எண் மூலம் 2 காவலர்களும் ரூ.1,500 லஞ்சமாக பெற்றது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து ‘கூகுள் பே’ மூலம் ரூ.1,500 பெற்ற செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் அதிரடியாக உத்தரவிட்டார்.

மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணித்த பயணிக்கு ரூ.200 அபராதம் Gpay செய்த பெண்..!

மகளிர் கட்டணமில்லா பேருந்தில் பயணித்த பயணிக்கு ரூ.200 அபராதம் Gpay செய்த பெண்..!

ஜிபேயில் ரூ 200 செலுத்தினால் பிறப்பு, ஜாதி சான்றிதழ் கிடைக்கும்..!

ரூ.200 ஜிபே செலுத்தினால் பிறப்பு, சாதி சான்றிதழ் கிடைக்கும் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பகுதியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கையூட்டு பெறப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலக காம்பவுண்ட் சுவரில் மர்மநபர்கள் திடீரென போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலை பட்டியல் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெற ரூ.200 ஜிபே செலுத்தவும். 20 நாட்களில் சான்றிதழ் கிடைக்கும்.

ஜிபே ஏற்றுக் கொள்ளப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு கட்டணம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திடீர் போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதல் ஜோடியை மிரட்டி ரூ.3000 வாங்கிய காவலர்..!

காரைக்கால் கடற்கரைக்கு வந்த காதல் ஜோடியை மிரட்டி ஆன்லைன் மூலம் காவலர் ஒருவர் ரூ.3 ஆயிரம் வாங்கிய வீடியோ வைரலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் காண்போரை முகம் சுளிக்க வைக்கும். அதிகளவில் கூட்டம் இல்லாமல் இருக்கும் நேரங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில், காரைக்கால் கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பகல் நேரத்தில் அதிகளவில் கூட்டம் இல்லாமல் இருக்கும் நேரங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதை பயன்படுத்தி காரைக்கால் கடலோர காவல் படையில் பணிபுரியும் காவலர் ராஜ்குமார், காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

நேற்று முன்தினம் காரைக்கால் கடற்கரைக்கு ஒரு காதல் ஜோடி வந்தது. அந்த காதல் ஜோடியை புறநகர் காவல் நிலையத்துக்கு காவலர் ராஜ்குமார் வரவழைத்தார். இதையடுத்து காதல் ஜோடியை மிரட்டி ரூ.3000 ஜிபேயில் வாங்கினார். மேலும் அந்த பெண்ணை மிரட்டி தாலி இருக்குதா என்று கழுத்தில் கை வைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் நண்பர்கள் சிலர் அங்கு வந்து எப்படி பணம் வாங்குவீர்கள்? அந்த பெண்ணை ஏன் மிரட்டினீர்கள்?, அவரை தனிமையில் எதற்காக வர சொன்னீர்கள்…? என்று கேட்டதுடன், இதை வாலிபர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

காவலர் ராஜ்குமார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை தொலைபேசியில் தொடர்ந்து பேசி, உல்லாசத்துக்கு அழைத்து டார்ச்சர் கொடுத்தார் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போதைய வீடியோ வைரலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை நடக்கும் GST கூட்டத்தில் 2000 க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க முடிவா…!?

ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திடமிருந்து மற்றொருவருக்கு சர்வதேச எல்லைகள் வழியாக மின்னணு முறையில் நிதி பரிமாற்றம் செய்வது டிஜிட்டல் பரிவர்த்தனை எனப்படும். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊக்கப்படுத்தியதன் மூலம் இன்றைய மக்கள் யுபிஐ, ஜி பே, போன் பே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.