கீதா ஜீவன்: விஜய் முதலில் மக்கள் வீதிக்கு வந்து பார்க்கட்டும்..!

விஜய், சினிமாவில் இருந்து இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். வீதிக்கு வந்து மக்கள் பிரச்னையை பார்க்கட்டும் என அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு 22 வகையான சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்துக்கு கட்சித் தலைவர் விஜய் தலைமை வகித்தார். உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், கதறல் சத்தமெல்லாம் எப்படியிருக்கு? இன்றைக்கு தமிழ்நாடு இருக்கின்ற சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதற்கு, தயாராக வேண்டிய அவசியத்தை, நீங்கள் அனைவருமே நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ்வது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடப்பதுதானே அரசியல். அதுதான் நம்ம அரசியலும். கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு, தினம் தினம் மக்கள் பிரச்சினைகளை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னராட்சிப் போல நடத்தும் இவர்கள், நமக்கு எதிராக செய்யும் செயல்கள் ஒன்றா, இரண்டா?

மாநாடு தொடங்கி, நான் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் நிகழ்ச்சி, தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, அன்றைய தினம் நகருக்குள் எந்த திருமண மண்டபமும், அரங்கமும் நமக்கு கொடுத்துவிடக் கூடாது என்று, மாமல்லபுரம் சென்று அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஏன் இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் வரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள் வந்தன? அத்தனை தடைகளையும் தாண்டி தவெக தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும்.அது தொடர்ந்து நடக்கும்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது, செயலிலும் ஆட்சியிலும் அதைக்காட்ட வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை ஒரு பாசிச ஆட்சி என்று அடிக்கடி அறிக்கைகள் கொடுத்துவிட்டு, இங்கு நீங்கள் செய்யும் ஆட்சி மட்டும் என்னவாம்? அதற்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே.

ஒரு கட்சித் தலைவனாக எனது கட்சித் தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கும், பேசுவதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க வேண்டும் என்றால் சென்றே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன்.நேற்று வந்தவன் எல்லாம் முதல்வராக கனவு காண்கிறேன் என்று கூறுகிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன், மற்ற எந்த கட்சிகளுக்கும் இல்லாத தடைகளை விதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றைத் தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரணமாக இருக்கும் காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்திமிக்க புயலாக கூட மாறும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது மன உளைச்சலையும், மன வேதனையையும் தருகிறது. சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதற்கு எல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரி கவர்மென்ட்தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும்.

மேலும், தொடர்ந்து பேசுகையில், இந்த பொதுக்குழு வழியாக, தமிழக மக்களுக்கு ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கப் போகிறோம்.தவெக ஆட்சி உண்மையான மக்கள் ஆட்சி. தவெக தலைமையில் அருதிப்பெரும்பான்மை பெற்ற ஆட்சி.அதிகாரப்பகிர்வுடன் கூடிய ஆட்சி. அப்படியாக இந்த ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கை முறையாக கண்டிப்பாக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவத்தில் கவனம் செலுத்துவோம். அதுவும், அனைவருக்கும் எளிதாக, சமமாக கிடைப்பதை உறுதி செய்வதுதான் தவெகவின் இலக்கு. 2026-ல் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் விமர்சனம் குறித்து கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்தார். அப்போது, ” சினிமாவில் இருந்து இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். வீதிக்கு வந்து மக்கள் பிரச்னையை பார்க்கட்டும், அதன் பிறகு அவர் குறித்து பதில் அளிக்கிறேன்” என அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் செய்தார்.

கீதா ஜீவன்: சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை..!? குஷ்புவின் சிலம்பு காணாமல் போய்விட்டதா…!?

கண்ணகி நீதி கேட்ட மதுரையில் போராடிய குஷ்பு, அதே மதுரையில் பாஜக பிரமுகரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை? அந்த சிலம்பு காணாமல் போய்விட்டதா? என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மக்களைக் குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன அதிமுகவும் பாஜகவும். திராவிட மாடல் ஆட்சிக்கு பெண்கள் அளிக்கும் அபரிமிதமான ஆதரவு கண்டு வயிறெரியும் பாஜக – அதிமுக கள்ளக் கூட்டணி ‘தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ எனக் கதை கட்டி விஷமத்தனமானப் பிரசாரத்தை நடத்தி வந்த நிலையில் அவர்களின் லட்சணம், சென்னை அண்ணா நகரிலும் மதுரையிலும் அவலட்சணமாக அம்பலப்பட்டு இருக்கிறது.

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்க அதிமுக நடத்திய நாடகம்தான் ‘யார் அந்த சார்?’ என்பது வெட்டவெளிச்சமானது. அதிமுகவை அடியொற்றி, அதன் கள்ளக் கூட்டாளி பாஜகவும் அடுத்து பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறது. பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த தனது பேத்தி வயதுடைய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் எம்.எஸ்.ஷா கைதாகி இருக்கிறார்.

அதிமுகவின் வட்ட செயலாளர் சுதாகரும் பாஜக பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷாவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தி போக்சோ குற்றவாளிகளாக இருப்பது பேரவலம். இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ‘அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, தன் கட்சிக்காரர் எம்.எஸ்.ஷாவின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா?

‘தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என வானத்துக்கும் பூமிக்கும் குதித்த தமிழிசை சவுந்தரராஜனும், குஷ்புவும் அமைதி நிலைக்குச் சென்றுவிட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதி காக்கிறார்கள். மதுரையில் நின்று கண்ணகியைப் போலச் சிலம்பு ஏந்தி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்ட குஷ்பு, பாஜகவின் எம்.எஸ்.ஷா கைதுக்கு என்ன செய்ய போகிறார்? கண்ணகி நீதி கேட்ட மதுரையில் போராடிய குஷ்பு, அதே மதுரையில் பாஜக பிரமுகரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை? அந்த சிலம்பு காணாமல் போய்விட்டதா?

திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளுக்கு எல்லாம் எட்டிப்பார்த்து வீராவேச நடிப்பைக் காட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எஸ்.ஷா பாலியல் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை? எம்.எஸ்.ஷா பின்னால் இருப்பவர் எந்த சார் எனக் கேட்டு பழனிசாமி போஸ்டர் அடிப்பாரா? தனது கள்ளக் கூட்டாளி பாஜகவின் பாலியல் குற்றம் என்றதும் ஓடி ஒளிந்து விட்டாரா கோழை பழனிசாமி? கள்ள கூட்டணிக்காக பழனிசாமி நடத்தும் கள்ள மவுனமா இது?

10 வயது குழந்தையை பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்படும் போது பாஜக அமைதி காத்தது. பாஜக நிர்வாகி 15 வயது பெண் குழந்தையை பாலியல் தொல்லைக்கு கைதாகும் போது அதிமுக அமைதி காக்கிறது. இவ்வளவுதான் அதிமுக – பாஜக கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியல். இதைத்தான் கள்ளக் கூட்டணி என்கிறார்கள் தமிழக மக்கள்.

திமுக அரசாங்கம் ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்த பிறகும் பிரச்சினை பெரிதாகிவிடாதா, அதில் குளிர்காய முடியாதா என ஏங்குவதுதான் இவர்களின் அரசியலாக இருக்கிறதே தவிர பெண்களின் பாதுகாப்பு குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற கொடூர குற்றவாளிகளை ஒடுக்கத்தான் தமிழக முதல்வர் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கியுள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றவாளிகள் ஒரு நாளும் திமுக ஆட்சியில் தப்ப முடியாது.

பாலியல் குற்றவாளிகளை, அதிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்தும் கொடூர மனநிலைக் கொண்டவர்களைத் தனது கட்சியின் பொறுப்பாளர்களாக வைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பெண்கள் மீது கொஞ்சம் கூட கவலையில்லை. அப்படி கவலை இருந்தால் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கூட்டணியினர் என்பதால் மூடி மறைக்கின்றனர். இப்படி தங்களுடைய அசிங்கமான அரசியலை எல்லாம் மூடி மறைக்கத்தான் கள்ளக்கூட்டணி நடத்தும் அரசியல் நாடகம் எல்லாம் மக்கள் அறிவர். அதனால் இந்த நாடகங்கள் இனி ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது” என கீதா ஜீவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு கீதா ஜீவன் பதிலடி: திமுகவிற்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை..!

தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை என சீமானுக்கு, அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவ தமிழக அரசு அமைக்கும் உதவி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்று திமுக அரசு கூறுவது அப்பட்டமான இந்தி திணிப்பாகும்’’ என சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

சீமான் அறிக்கைக்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவ பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், “மகளிர் உதவி எண். 181” சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் “அழைப்பு ஏற்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, அய்யன் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திமுக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்டது திராவிட மாடல் அரசு.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது. இவ்வாறாக தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை என அந்த அறிக்கையில் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீதாஜீவன்: போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு..! 1098-க்கு தொடர்ந்து புகார்கள்..!

“போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. 1098-க்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன” என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.ஜவுளித்துறை சார்ந்த பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அவிநாசி அருகே திருமுருகன் பூண்டியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். இத்தனை தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அப்போது, “போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.

1098-க்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. காவல்துறை, கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை நேய தமிழகமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, கடந்த 3 ஆண்டுகளில், ரூ. 84 கோடியே 91 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது,” என கீதாஜீவன் தெரிவித்தார். இந்நிகழ்வில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன்,கைத்தறி மற்றும் கைத்திறன் துணி நூல் துறை செயலர் அமுதவல்லி, சமூகநலத்துறை ஆணையர் லில்லி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“பிங்க் ஆட்டோ திட்டம்” சென்னை பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆட்டோக்களை பெண்கள் வாங்க 1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கீதா ஜீவன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ திட்டம் செயல் படுத்தப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்து, தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய முன்னெடுப்பாக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த ஆட்டோக்கள் பெண் ஓட்டுநர்கள் மூலமாக இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டுள்ளன.

எமர்ஜென்சி காலங்களின்போது புகார் பெறப்பட்டவுடன் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் GPS பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், சுயதொழில் செய்து பெண்கள் முன்னேறும் வகையில் ஊக்கப்படுத்தவும் இந்த பிங்க் ஆட்டோ திட்டம் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிங்க் ஆட்டோ ஓட்டுவதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேம்டும். சென்னையில் குடியிருப்போராக இருக்க வேண்டும். CNG மற்றும் ஹைபிரிட் ஆட்டோ வாங்க சென்னையைச் சேர்ந்த 250 பெண்களுக்கு தமிழக அரசு தலா 1 லட்சம் ரூபாயை வழங்க உள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி தொகைக்கு வங்கிகளுடன் இணைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தகுதியான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8 ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நவம்பர் 23 -ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை – தியாகராய நகரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு மற்றும்  மா. சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்தநிகழ்ச்சியில் சென்னைக்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.