முதலீட்டாளர்களை ஏமாற்ற கவுதம் அதானி லஞ்சம், முறைகேட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா..!

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்த நிலையில் இந்த அமெரிக்கா குற்றச்சாட்டு தொழில் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, நிலக்கரி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கவுதம் அதானி, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவர் மீது அமெரிக்க பாதுகாப்பு ஆணையம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த ‘வால் ஸ்ட்ரீட்’ முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்ததாக அமெரிக்காவில் இருந்து கிடைத்த தகவல் உறுதி செய்துள்ளது.

அரசு பணிக்கு போலி ஆணை வழங்கி ரூ.1.47 கோடி மோசடி செய்த காவல் ஆய்வாளர்..!

அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி 27 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் மீது புகார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதமாக பணியில் உள்ளார். இவர், கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியபோது வேலை வாங்கி தருவதாகவும், போலி பணி நியமன ஆணைகளை கொடுத்தும் 27 பேரிடம் ரூ.1 கோடியே 47 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து ஏசு ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்கா ஆகியோர் மீது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த லலிதா நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், எனது மகன் விஷாலுக்கு அரசு பள்ளியில் இளநிலை உதவியாளர் பணியை பெற்றுத்தருவதாகவும், 50 பேருக்கு இளநிலை உதவியாளர் வேலையும், 10 பேருக்கு ஆசிரியர் வேலையும் உள்ளதாகவும் தெரிவித்தார். இதை நம்பி 3 பேருக்கு அரசு வேலை வாங்க ரூ.8 லட்சம் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.

எங்களுக்கு பணி நியமன ஆணை வந்தது. இதை நம்பி 27 ஏழை, எளிய மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என நினைத்து ரூ.1.47 கோடியை ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வங்கி கணக்கிற்கும் அனுப்பி வைத்தேன். 27 பேருக்கும் பணி ஆணை கிடைத்தது. அதன் பிறகு மேலும் ரூ.14 லட்சம் கொடுத்து விட்டு வேலையில் சேர்வதாக கூறி சென்றோம். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பணி ஆணையை அரசு அதிகாரியிடம் கொடுத்து கேட்ட போது அது போலியானது என தெரியவந்தது.

எனவே ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மருத்துவ விடுப்பில் சென்ற ஆய்வாளர் ஏசு ராஜசேகரன், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்திடம் ஆஜரானதாகவும், இந்த மோசடி புகாருக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என எழுதிக் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது.

போலி நீதிமன்றம்..! போலி நீதிபதி..! போலி வழக்கறிஞர்கள்..! ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி பல கோடி மோசடி..!

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய ஓராண்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி போலி நீதிபதி கைது. அவர் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்.

குஜராத் தலைநகர் காந்திநகரில், குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவர் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை உருவாக்கி, அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார். நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என பொது அரங்கில் தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை கிறிஸ்டியனின் போலி வழக்கறிஞர்கள் அணுகி உள்ளனர். சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என போலி வழக்கறிஞர்கள் வாக்குறுதி அளித்து உள்ளனர்.

இதை நம்பிய பொதுமக்கள், போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியனின் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அசல் நீதிமன்றம் போன்றே போலி நீதிபதி கிறிஸ்டியன் மனுக்கள் மீது விசாரணை நடத்தி உள்ளார். அவரது நீதிமன்றத்தில் நாள்தோறும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று உள்ளன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கிறிஸ்டியன் தனக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கி வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காந்தி நகரில் அவர் போலி நீதிமன்றத்தை நடத்தியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுஜி என்பவர் நில விவகாரம் தொடர்பாக கிறிஸ்டியனின் போலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார். சுமார் 50 ஆண்டு காலம் அரசு நிலத்தில் குடியிருப்பதால் அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என பாபுஜி கோரினார்.

இந்த வழக்கை விசாரிக்க போலிநீதிபதி கிறிஸ்டியன், மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்று கொண்டு, அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களுக்கு பிறகு குறிப்பிட்ட அரசு நிலம் பாபுஜிக்கு சொந்தமானது என்று கிறிஸ்டியன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதுதொடர்பான தீர்ப்பாணையை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கி உள்ளார். ஆனால் ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி வழக்கு தொடர்ந்து உள்ளார். கிறிஸ்டியனின் போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை இணைத்து ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற வேண்டும் என அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியனின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகி அவர் கைது செய்யப்பட்டார்.

போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் நிலமோசடி.!

திருநெல்வேலி, தென்காசியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்களை மோசடி வழக்கில் 13 பேரை தேடி வரும் 3 பேரை காவல்துறை கைது செய்தனர்.

திருநெல்வேலி, ஆலங்குளத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதன் தலைமையிடம் சென்னையில் செயல்படுகிறது.

அந்த நிறுவனத்தின் தென்காசி மண்டல மாவட்ட மேலாளராக சண்முக சுந்தரம் பணியாற்றி வருகிறார். இவர் தென்காசி காவல் ஆணையாளர் சீனிவாசனிடம் புகார் மனு ஒன்று தந்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “பாவூர்சத்திரம் சந்தோஷ்நகரைச் சேர்ந்த சேர்மத்துரை. இவர் அதே நிறுவனத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை தென்காசி மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

எங்களது நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டியில் உள்ள நிலத்தை நிறுவனத்தின் இயக்குநர்களின் கையெழுத்தை மோசடியாக போட்டு, நிறுவனத்தின் முத்திரைகளை மோசடியாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து சேர்மத்துரை, சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு 5 ஏக்கரும், திருவள்ளூர் மாவட்டம் பூம்புகார் நகரைச் சேர்ந்த செல்வராகவன் என்பவருக்கு 6 ஏக்கரும் விற்பனை செய்துள்ளார்.

மேலும் கடையம் பெரும்பத்து கிராமத்தில் நிறுவனத்திற்குச் சொந்தமான 94 ஏக்கர் நிலத்தில் 22.25 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சேர்மத்துரை தனது சகோதரர் ராமசாமி என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த நிலத்தை ராமசாமி சேர்மத்துரையின் இரண்டு மனைவிகளான ரெபேக்காள், செல்வி மற்றும் சேர்மத்துரையின் மகள் ஹெப்சிராணி ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த மோசடிக்கு சேர்மத்துரையின் மற்றொரு சகோதரர் சக்தி கண்ணன் மற்றும் சார்லஸ், முத்துக்குமார், ஜோசப் பால்ராஜ், மதுரை வழக்கறிஞர் சிங்கார வடிவேல், அருள் செல்வன், அமிர்தராஜ், அமல்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

மோசடி செய்யப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும். இந்த மோசடி குறித்து தெரிய வந்த தனியார் நிறுவனம் சேர்மத்துரையை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. மேலும் சேர்மத்துரை நிலத்தை மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு திரும்ப நிலத்தை நிறுவனத்திற்கு ஒப்படைத்து விடுவதாகவும், நிறுவனத்திற்கு தர வேண்டியதாக ரூ.66.05 லட்சத்திற்கு கடன் உறுதிமொழியும் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அதன்படி சேர்மத்துரை கொடுக்கவில்லை. இதன் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சேர்மத்துரை உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், சேர்மத்துரை, ஜோசப் பால்ராஜ், முத்துக்குமார் ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 13 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.

பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் கைது..!

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி கோவில் இடம் மோசடியில் கோடிக்கணக்கான பணம் பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் இறுதியில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனை காவல்துறை கைது செய்துள்ளனர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலுள்ள புகழ் பெற்ற பார்வதீஸ்வரர் கோவிலுக்கு கோவில்பத்து கிராமத்தில் உள்ள இடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சுற்றுலா துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்கியதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன், முன்னாள் ஆட்சியர் ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய அரசாணை சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, இந்து முன்னணியினர் நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில், கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் காரைக்கால் ஆட்சியர் மணிகண்டன் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதன்பேரில், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து சிலரை கைது செய்தனர். தலைமறைவான ஆனந்த்தை காவல்துறை தேடி வருகின்றனர்.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட காரைக்கால் சிவராமன், திருமலைராஜன், காரைக்கால் நகராட்சி நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்தி ஆகியோரை காவல்துறை ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நில அளவையர் ரேணுகாதேவியை காவல்துறை காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் தலைமையில், இதற்கான கூட்டு சதி நடந்தது தெரிய வந்தது.

இத்தனை தொடர்ந்து நில அளவையர் ரேணுகாதேவி அளித்த தகவலின்பேரில், மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனின் மொபைல் எண்ணிற்கு வந்த அழைப்புகள் மற்றும் அவரது வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், பெரும் தொகை கைமாறியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை தனிப்படை காவல்துறை அழைத்துச் சென்று, மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், மாவட்ட துணை ஆட்சியர் பிரபல மதுபான உரிமையாளருடன் கூட்டு சேர்ந்து முதலீடு செய்ததும், இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள ஆளும்கட்சி பிரமுகர் ஆனந்துடன், மேலும் இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இத்தனை தொடர்ந்து துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த காவலர் மற்றும் பெண் கைது ..!

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் என்பவர், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதன் புகார் மனுவில், தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் இவருக்கும், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் கூடாநட்பு ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு திருநெல்வேலியில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து, தங்க வைத்திருந்தார்.

இந்நிலையில், வளர்மதியை மாவட்ட வருவாய் அலுவலர் என்று பலரிடம் அறிமுகப்படுத்தி, புறம்போக்கு நிலத்துக்கு பட்டா பெற்றுத் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, தலைமைக் காவலர் முருகராஜும், வளர்மதியும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும் , சசிகுமார் திருநெல்வேலி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்துக்கு பட்டா மாறுதல் வாங்கித் தருமாறு இவர்களை அணுகியுள்ளார். இதற்காக வளர்மதியிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பட்டா மாறுதல் செய்து கொடுக்கவில்லை.

இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இதில், வளர்மதி, முருகராஜ் ஆகியோர் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிட் பண்ட் நடத்தி பொதுமக்கள் பணம் ₹4½ கோடி ஆட்டைய போட்டதாக புகார்..!

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பேர் சிட் பண்ட் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தொழில் செய்ய மூலதனமாக எங்கள் பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் பணம் பெற்று அந்த பணத்திற்கு வட்டியும் தருவதாக கூறினார்கள். ஆனால் கடந்த இரண்டு வருட காலமாக வட்டியும், அசலும் கொடுக்கவில்லை.

இது குறித்து நாங்கள் அவர்களிடம் சென்று கேட்டால் எங்களை மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். அவர்கள் எங்களிடம் சுமார் ரூ.4 ½ கோடிக்கு மேல் பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பணத்தை அவர்களிடம் இருந்து திரும்பி பெற்று தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் மோசடி..!

பழைய நாணயத்துக்கு ரூ.36 லட்சம் தருவதாக ஆன்லைன் மூலம் தொழிலாளியிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பழைய நாணயங்கள் வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சகணக்கில் சம்பாதிக்கலாம் என மூட்டை தூக்கும் தொழிலாளி ராஜன் என்பவரின் செல்போனுக்கு தொடர்ந்து விளம்பரம் வந்துள்ளது.

தொழிலாளி ராஜன் விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி பேசியுள்ளார். இந்திரா காந்தி உருவம் பொறித்த நாணயத்தின் படத்தை தனக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்ப ராஜனிடம் கூறியுள்ளனர். நாணயங்களின் படத்தை அனுப்பிய பிறகு 2 பெண்கள் தொடர்பு கொண்டு ரூ.36 லட்சத்திற்கு விற்கலாம் என கூறியுள்ளனர்.

அரசின் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் வியாபாரம் என்பதால் பதிவுக் கட்டணம் செலுத்த கூறியுள்ளனர். பெண்கள் கூறியதை நம்பி ராஜன் 22 தவணைகளில் 3.82 லட்சத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல் மேலும் ராஜனிடம் பணம் கேட்டபோது, தான் ஏமாந்ததை உணர்ந்தார். மோசடி கும்பலை தொடர்பு கொள்ள முடியாததை அடுத்து சேலம் சைபர்கிரைமில் தொழிலாளி ராஜன் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட ஜெயவேரியாபானு, அர்ஷியாபானு, செர்ஷாகான், முகமது இம்ரான் மற்றும் திலீப்  ஆகியோர் சைபர் கிரைம் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 5 பேரிடம் விசாரணை மோசடி செய்வது குறித்து ஹரியானாவில் பயிற்சி பெற்றது தெரியவந்தது.

சிபிஐ என கூறி தமிழ்நாடு, கேரளாவில் பல கோடி மோசடி செய்த முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது..!

சிபிஐ என கூறி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மிரட்டி பல கோடி மோசடி செய்த சம்பவத்தில் முக்கிய நபரை எர்ணாகுளம் காவல்துறை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

சமீப காலமாக ஆன்லைன் மூலம் மோசடி நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாட்ஸ் அப் வீடியோ காலில் பலரை அழைத்து சிபிஐ அதிகாரி என்று கூறி மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். வீடியோ காலில் அழைத்து, அவர்களுக்கு வந்த ஒரு பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகவும், அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விர்ச்சுவல் கைது செய்துள்ளதாகவும் உடனடியாக தாங்கள் கூறும் பணத்தை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இவர்கள் மிரட்டி ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்து வருகின்றனர்.

கேரளாவில் திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இதுபோல கடந்த 3 மாதங்களில் மட்டும் 30 கோடிக்கு மேல் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. இந்நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் இந்தக் கும்பலிடம் சமீபத்தில் 30 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து ஏமாந்தார். இது தொடர்பாக எர்ணாகுளம் மத்திய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து எர்ணாகுளம் தனிப்படை காவல்துறை டெல்லி விரைந்து சென்று நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரின்ஸ் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்தான் முக்கிய நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து மோசடிக் கும்பலுக்கு கொடுத்து வந்தார்.

வங்கிகளில் பெருமளவு பணம் வைத்திருக்கும் நபர்களின் கணக்கு விவரங்களை சேகரித்து அந்தக் கும்பலுக்கு இவர் அனுப்பி வைப்பார். பெரும்பாலும் வயதானவர்களைத் தான் இந்தக் கும்பல் குறிவைக்கும். மோசடிக் கும்பலின் வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை இவர் கிரிப்டோ கரன்சியாக மாற்றி அந்தக் கும்பலுக்கு கொடுப்பார்.

இதன் மூலம் பிரின்ஸ் பிரகாஷுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்து வந்துள்ளது. இதுவரை இவருக்கு இந்த மோசடி மூலம் பல கோடி பணம் கிடைத்துள்ளது. இவர் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இதுபோல மோசடி நடத்தியுள்ளார் என காவல்துறை தெரிவிக்கின்றனர்.

சுங்கத்துறை அதிகாரி என மிரட்டி மருத்துவரிடம் ரூ.26 லட்சம் மோசடி..!

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பை கன்சோலியில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தான் சுங்கத்துறை அதிகாரி என கூறி, நீங்கள் துபாய்க்கு அனுப்பிய பார்சலில் ஆட்சேபத்துக்குரிய போதைப் பொருட்கள் மற்றும் காவலர் சீருடைகள் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், அந்தேரி பகுதி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்ய இருப்பதாகவும், பணமோசடி மற்றும் தீவிரவாதிகளுடன் மருத்துவருக்கு தொடர்பு இருப்பதாக புகாரில் தெரிவிக்க உள்ளதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவரிடம் இந்தசிக்கல்களில் இருந்து வெளிவருவதற்கு ரூ.26.52 லட்சத்தை ஆன்லைனில் பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தும்படி அந்த நபர் மிரட்டியுள்ளார். பணம் செலுத்திய பிறகும்தொடர்ந்து பணம் கேட்டு அந்தநபர் நெருக்கடி அளி்த்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் அந்த சைபர் மோசடி கும்பல் மீது நவி மும்பை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.