மகாராஷ்டிர தேர்தல்: தொகுதி பங்கீட்டில் பாஜக கூட்டணிக்குள் மோதல்..!

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் – டிசம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மகா விகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணி இடையே மகாராஷ்டிர சட்டப்பேரவையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 160 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. அதேவேளையில் சிவசேனா 100 முதல் 105 இடங்களிலும் என்சிபி 60 முதல் 80 இடங்களிலும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் மகாயுதி கூட்டணியில் தொகுதிகளுக்கான மோதல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மும்பை வந்தபோது அவரிடம் 100 தொகுதிகளுக்கு மேல் தாங்கள் போட்டியிட விரும்புவதாக சிவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளையும் கடந்த காலத்தில் ஒருங்கிணைந்த சிவசேனா பெற்ற வாக்குகளையும் அமித் ஷா ஒப்பிட்டு காட்டியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக மகாயுதியில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், மக்களவைத் தேர்தலின் போது நடந்தது போல்,வேட்பாளர்களை அறிவிப்பதில் இம்முறை தாமதம் கூடாது என பாஜகவிடம் சிவசேனா நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்குள் முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டால் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகளை பிறகு பரிமாறிக் கொள்ளலாம் என்று யோசிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Uddhav Thackeray: சிவாஜி சிலை உடைந்தது மகாராஷ்டிராவின் ஆன்மாவுக்கான அவமதிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சிவாஜியின் 35 அடி சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு டிசம்பர் 4, கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை ஆகஸ்ட் 26-ம் தேதி பலத்த காற்றினால் இந்தச் சிலை இடிந்து விழுந்ததாக மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதியினர் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் மற்றும் கட்சியின் மும்பை தலைவர் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் சம்யுக்த மகாராஷ்டிரா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு முன்னதாக நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கேட் வே ஆஃப் இந்தியாவில் உள்ள சிவாஜி சிலை வரை சென்ற பேரணிக்கு ‘சப்பல் ஜோட் மாரோ யாத்ரா” என்று பெயரிடப்பட்டிருந்தது. கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசுகையில், “நீங்கள் அந்த மன்னிப்பில் இருந்த ஆணவத்தை கவனித்தீர்களா? அது ஆணவத்தால் அடிக்கப்பட்டது.

அப்போது ஒரு துணை முதலமைச்சர் சிரித்துக் கொண்டிருந்தார். கீர்த்தி மிகுந்த வீரம்நிறைந்த மன்னர் அவமதிக்கப்பட்டிருப்பதை மகாராஷ்டிரா மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ராமர் கோயில் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் கூரைகள் ஒழுகுவது மோடியின் பொய்யான உத்தரவாதத்துக்கு உதாரணங்கள்.

பிரதமர் எதற்காக மன்னிப்புக் கேட்டார்? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர் அந்த சிலையைத் திறந்து வைத்ததற்காகவா? அதில் நடந்துள்ள ஊழலுக்காகவா? சிவாஜி மகாராஜாவை அவமதித்த சக்திகளை எம்விஏ கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அந்தச் சிலை உடைந்தது மகாராஷ்டிராவின் ஆன்மாவுக்கான அவமதிப்பு” என உத்தவ் தாக்கரே பேசினார்.