அமலாக்கத் துறை அறிவுரை: ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் ஏமாற வேண்டாம்..!

செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 65,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சுமார் ரூ.4.69 லட்சம் கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறிகையில், குஜராத்தின் வடோதராவில் அண்மையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பலை பிடித்தோம். அப்போது தைவான் நாட்டை சேர்ந்த 4 பேர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். வடோதராவின் பிரபல வணிக வளாகத்தில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.

அங்கு அதிநவீன செல்போன்களில் சுமார் 20 பேர் நாள்தோறும் பொதுமக்களை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிந்து வந்துள்ளனர். இதேபோல டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல்கள் செயல்பட்டு உள்ளன. வடோதரா கும்பலிடம் இருந்து 761 சிம் கார்டுகள், 120 செல்போன்கள், 96 காசோலை புத்தகங்கள், 92 டெபிட் கார்டுகள், 42 வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

பெரும்பாலும் தைவான், சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கும்பல்கள் இந்தியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா மட்டுமன்றி தெற்கு ஆசியா முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு மையத்தில் இருந்து நாள்தோறும் ரூ.10 கோடி வரை மோசடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நாள்தோறும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக்கூடாது. எந்தவொரு அரசு அமைப்பும் செல்போனில் தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு மிரட்டல் விடுக்காது. காணொலி வாயிலாகவும் விசாரணை நடத்தப்படாது. இதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சட்ட விதிகளின்படி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பதே கிடையாது என அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு லஞ்சம் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது..!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தாமல் இருக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் தந்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

தமிழககெங்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குபவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை பொதுமக்கள் கொடுக்கும் தகவல் அடிப்படையில் அடிக்கடி கைது செய்து வருகின்றது. இந்நிலையில், சேலம் கந்தம்பட்டியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக சதாசிவம் பணியாற்றி வருகின்றார்.

வாகன ஆய்வாளர் சதாசிவம் தன்னை யாராவது போட்டு கொடுத்தால் தேவையெல்லாம் பிரச்சனை வரும் ஆகையால் வருமுன் காப்போம் என்ற யோசனையில், சோதனை செய்ய வரும் முன்பு தகவல் கூறுமாறு, லஞ்ஒழிப்புத்துறை ஆய்வாளரை தொடர்பு கொண்துள்ளார். மேலும் சோதனை நடத்தாமல் இருக்க மாதம் ரூ.50,000 தருவதாகவும், முதற்கட்டமாக ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிக்குமார் அளித்த புகாரின்பேரில் சதாசிவத்தை பொறிவைத்து பிடிக்க திட்டம் தயாரானது. மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவத்தை, கருப்பூர் அருகிலுள்ள ஓட்டலுக்கு ஆய்வாளர் ரவிக்குமார் வரவழைத்தார். லஞ்சமாக ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற சதாசிவத்தை லஞ்சஒழிப்புத்துறை கையும் களவுமாக கைது செய்தனர்.

Amanatullah Khan: நேர்மையாக இருப்பது குற்றமா? எத்தனை காலம்தான் ர்வாதிகாரியின் ஆட்சி..!?

புதுடெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான அமனதுல்லா கான், டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது. அதன் மூலம் கிடைத்த லஞ்சப் பணத்தில் அசையா சொத்து வாங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

அமனதுல்லா கான் தனது எக்ஸ் பக்கத்தில், “தன்னை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர்” என அமனதுல்லா கான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி – ஆக்லா பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் அருகே காவல் துறையினர் அதிகளவில் குவிந்துள்ளனர். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

“சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில் அவரது கைப்பாவையாக உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை எனது வீட்டுக்கு வந்தனர். என்னையும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களையும் துன்புறுத்துவது சர்வாதிகாரியின் நோக்கம். மக்களுக்கு நேர்மையாக இருப்பது குற்றமா? இன்னும் எத்தனை காலம்தான் இந்த சர்வாதிகாரியின் ஆட்சி நீடிக்கும்?” என எக்ஸ் தளத்தில் அமனதுல்லா கான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் அதிரடி ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்க துறை வழக்கு ரத்து..!

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறையும் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர்சேட் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜாபர் சேட் தரப்பில், தனக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு ரத்து செய்துள்ள நிலையில், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்கு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாபர் சேட்டுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.