ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி திமுக மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பி.பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூகம் அமைத்து வருகிறோம்.
தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்கவும், மிகப்பெரிய மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்கிவிட்டோம். எனது சுற்றுப்பயண திட்டம் குறித்து ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக-தேமுதிக கூட்டணி இன்றுவரை தொடர்கிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. 2026 தேர்தல் வரை அந்த கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறி தான். விஜய் நடத்திய மாநாட்டை பார்த்து ஒவ்வொரு கட்சிகளும் உடனடி களப்பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுவது தவறான கருத்து.
அதேபோல் ஆட்சி, அதிகார, பணபலத்தை வைத்துக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து வருகிறார்கள். ஆனால் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணியே வெற்றிபெறும். விரைவில் நடைபெற உள்ள தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் பலருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.