குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி ராஜதானிகோட்டை பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிய வருகிறது.

இதனால் மிகவும் சிரமபட்டதால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் சீனிவாசன்: பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி …! ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம்….!

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வி. மருதராஜ் முன்னிலை வகிக்க, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசுகையில், பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பது போல் நிரூபணமாகியுள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார்கள், தரவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். செய்யவில்லை. கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். தள்ளுபடி செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யத் தயாராகி உள்ளனர். நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, ஆளும்கட்சியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டோம் என தெரிவித்தார்

கூட்டு பட்டா விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னழகன் என்ற விவசாயி தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அங்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த தங்கவேல், பட்டா மாறுதல் செய்வதற்கு சின்னழகனிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேடடுள்ளார்.

ஆனால் சின்னழகன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை எனவே திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.4 ஆயிரம் நோட்டுகளை சின்னழகனிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் சின்னழகன், கோமனாம்பட்டியில் உள்ள கிளை அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலுவிடம் ரூ.4 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விரைந்து சென்று கையும் களவுமாக தங்கவேலை பிடித்து கைது செய்தனர்.

அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நூற்றாண்டு பழமையான அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படுகிறது.

செஞ்சிலுவை சங்க நிர்வாகிக்கு தேசிய விருது

செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் சிறப்பாக சேவையாற்றும் ஒருவருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் ஜனாதிபதி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் செஞ்சிலுவை சங்கம் மூலம் சிறப்பாக சேவையாற்றியவர்களில் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அறிவிக்கும் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இணையதளம் மூலம் நடந்தது.

இதில் திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் இணை செயலாளர் சையது அபுதாகிருக்கு தேசிய அளவில் விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் விருது நேரில் வழங்கப்படாமல் திண்டுக்கல் சங்க அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சையது அபுதாகிருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆட்சியர் விசாகன் சையது அபுதாகிருக்கு விருதை வழங்கி பாராட்டினார்.