குன்னூரில் பள்ளி மாணவர் மீது கொடூராக தாக்குதல்…!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூத்தூர்மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி உதயசந்திரன். இவரது மகன் குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் பெற்றோர் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்காமலே தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் தாமாகவே மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள கூறி இருக்கிறார். தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மாணவனின் தாயாரை அழைத்து மாற்று சான்றிதழை கடந்த ஜூன் 21-ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் மாணவன் வேறு பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் வீட்டில் அடம் பிடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவன் ஜூன் 22-ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து தான் அதே பள்ளியில் தான் படிக்க விரும்புவதாகவும், என் தாயாரிடம் மாற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்பி உள்ளனர். மீண்டும் தன்னை அதே பள்ளியில் படிக்க வழி வகை செய்யுமாறும் மனு ஒன்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்திருக்கிறார்.

இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் மாணவனை அதே புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் என்னை மீறி மாவட்ட அலுவலரிடம் புகார் அளித்து மீண்டும் இதே பள்ளிக்கு வந்து விட்டாய் எப்படி நீ படிக்கிறாய் என்று பார்ப்போம் என்று சவால் விட்டு இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாணவன் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ட்ராக் சூட் உடை அணிந்து சென்ற பொழுது முறையாக ஆடை அணியவில்லை என கூறி மாணவனை தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் கம்பால் சரமாரியாக தலை மற்றும் கை கால்களில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் தந்தை உதயச்சந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மீது குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அடாது மழையிலும் விடாத மரங்களை வெட்டும் கொள்ளையர்கள் …! “நான் கடவுள்” பாணியில் சமூக ஆர்வலர்…!

நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா பந்துமை வழியாக கோத்தகிரி செல்லும் சாலை மற்றும் கம்பிசோலை கிராமம் கீழ்ப்புறம் பகுதி சாலை ஓரங்கள் மற்றும் வனப்பகுதியில், இருக்கக்கூடிய மரங்களை டேஞ்சர் மரங்கள் என்ற போர்வையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எழுத்துப்பூர்வமாக அனுமதி எதுவும் கொடுக்காமல், வாய் வார்த்தையில் சொன்னதாகக் கூறி சுமார் 50 மரங்களை சில சமூக விரோதிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக மரங்களை வெட்டும் வேலையை செய்து வருகின்றனர்.

இதனை அந்த பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்.சென்று வருவாய் ஆய்வாளர் சுப்பு அவர்களிடம் புகார் செய்தனர். ஆனால் வருவாய் ஆய்வாளர் சுப்பு எனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாக பதில் கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் கிராம நிர்வாக அலுவலகம் சென்று கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்னா அவர்களிடம் சென்று கேளுங்கள் என தெரிவிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அருள் ரத்னா அவர்களிடம் இதுபற்றி விசாரித்தபோது எனக்கு ஒன்றும் தெரியாத ( கிராமத்திலுள்ள சாலை ஓர மரங்களை காப்பாற்றுவது கிராம நிர்வாக அலுவலரின் முக்கிய கடமை என்பதனை மறந்து) நீங்கள் தாசில்தார் தினேஷ் அவர்களிடம் சென்று கேளுங்கள் என்று சொல்கிறார்.

சமூக ஆர்வலரும் விடாது இறுதியாக தாசில்தாரிடம் சென்று கேட்போம் என்று போய்க் கேட்டால் எனக்கு அப்படி ஒன்றும் தெரியல… நான் வந்து பார்த்துட்டு என்ன ஏதுன்னு உங்களுக்கு சொல்றேன் என்று அலட்சியமான பதிலை சொல்கிறார்.

“நான் கடவுள்” பாணியில் சமூக ஆர்வலர் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என ஒவ்வொருவராக நடந்தது தான் மிசசம். இது இப்படியே போய்க் கொண்டிருந்தால் சமூக விரோதிகளின் செயல்கள் அதிகமாகி மரங்கள் அழிந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேதனையாக அமைகிறது.

போதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த அ.தி.மு.க. எம்.பி. க்கு தர்மஅடி

அ.தி.மு.க.முன்னாள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான குன்னூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்.தற்போது குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததால்,அவரிடம், கோபாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனை கோபி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர காவல் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மற்றொரு புறம் தன்னை தாக்கியதாக கோபி மீது அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூடுதல் விலைக்கு மது விற்றதாக மேற்பார்வையாளர்கள் உள்பட 3 பேருக்கு பணியிட மாற்றம்

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகளில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமிருந்தது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் குன்னூர், கூடலூர் உள்பட பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது குன்னூரில் உள்ள டாஸ்மாக்கடை ஒன்றில் ஒரே வாடிக்கையாளரிடம் பலமுறை கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், காந்தி, விற்பனையாளர் ஆறுமுகம் ஆகிய 3 பேர் அப்பணியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்த பணியிட மாறுதல் அளிக்கப்பட்டு ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு மதுபானக் கழகத்துக்கு சொந்தமான குடோனில் பணி அமர்த்தப்பட்டனர்.