எடப்பாடி பழனிசாமி: ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும்..!

நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதைப் போல அதிமுகவில் கிளைக் கழகம் வலுவாக உள்ளது. எடப்பாடியில் எதிரிகள் புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும். மக்களுக்கு உண்மை செய்திகள் ஒருநாள் தெரிய வரும் போது திமுக காணாமல் போகும்.

திமுக கட்சியில் பலமில்லை, கூட்டணி பலத்தையே திமுக நம்பி உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த கட்சி அதிமுக. எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். இதனால் தான் தமிழகம் இன்றைக்கு நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். எந்த ஆட்சியும் நிந்தரம் இல்லை. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு அதிமுக ஆட்சிதான். உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும் தான் திமுக அரசின் சாதனை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து அந்தர்பல்டி அடிக்கும் ஒரே கட்சி திமுக.

திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதியை முன் நிறுத்துகிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. திமுக மூலம் மன்னராட்சியை மீண்டும் தொடங்க நினைக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. 50 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர்ந்ததால் தான் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு திமுகவில் உதயநிதியை தவிர வேறு ஆளா இல்லை.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேக வேகமாக உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவிகளை வழங்கி வருகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை. மிசாவில் சிறைக்குச் சென்ற வேறு யாருக்கும் துணை முதல்வர் பதவி தரவில்லையே. மூத்த நிர்வாகிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஜெட் வேகத்தில் உதயநிதிக்கு பதவியை வழங்கியுள்ளனர். உதயநிதிக்கு பதவியை மக்கள் கொடுக்கவில்லை. குடும்ப உறுப்பினரான முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கி உள்ளார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடமாநில ATM கொள்ளை கும்பலை பிடித்த காவல் துறையினருக்கு வாழ்த்து..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக வருகைப்புரிந்துள்ளார். அப்போது, அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், உள்ளிட்ட வடமாநில ATM கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கடந்த மாதம் கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ATM களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்தனர். ATM களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச்செல்வதாக நாமக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் அருகே காவல்துறை கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை காவல்துறை நிறுத்தியும் நிற்காமல் சென்றது. இதையடுத்து விரட்டி சென்ற காவல்துறை கண்டெய்னர் லாரியை மடக்கி கொள்ளை கும்பலை பிடித்தனர்.

இந்த சம்பவத்தை பாராட்டி கேரள தலைமை காவல் துறை இயக்குநர் ஷேக் தர்வேஷ் சாஹிப், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்பவம் நடைபெற்று 6 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்தது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது. ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமையவர்மன், முருகேசன், ராஜா, காவல் ஆய்வாளர்கள் தவமணி, ரங்கசாமி, காவல் துணை ஆய்வாளர்கள் என மொத்தம் 23 காவல் துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, காவல்துறை கூடுதல் இயக்குநர் சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயக்குமார் கேள்வி: சீனியர்கள் பலர் இருந்தும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி ஏன் ..!?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும்போது அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு அதுபற்றி கவலையில்லை.

திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறினார். திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா? மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதயநிதி துணை முதலமைச்சர் என கொஞ்சம் கொஞ்சமாக கருத்தை விதைத்தனர்.

திமுகவில் சீனியர்கள் பலர் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க முயற்சி நடப்பது ஏன்? துணை முதலமைச்சராக உதயநிதியை தவிர திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி: எல்லோரையும் எப்பவுமே ஏமாற்ற முடியாது..! ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார் எனவும், சிலரை சிலநாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திரு. ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சென்று சுமார் ரூ.31,500 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளதாகவும், கர்நாடக தொழில் துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா சென்று சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஆனால், 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி, சைக்கிள் ஒட்டி, சினிமா பார்த்து திரு. ஸ்டாலின் ஈர்த்த முதலீடு வெறும் ரூ. 7,618 கோடிதான். திரு. ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்பச் சுற்றுலா மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.6,100 கோடி. மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.3,233 கோடி. ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெய்ன் சுற்றுப் பயணத்தில் ஈர்த்த முதலீடு ரூ. 3,440 கோடி. தற்போது, அமெரிக்கா சென்று ஈர்த்த முதலீடு ரூ. 7,618 கோடி ஆக, 4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.

இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே. இந்த முதலீடுகளை, விடியா திமுக அரசு ஜனவரி, 2024-ல் நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டிருக்கலாம்.

2019-ஆம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 8,835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன் மூலம், 35,520 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அம்மாவின் அரசு ‘2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. ஸ்டாலின், மாநாட்டிற்கு வந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து GIM 2019 நடத்தியதாக’ கேலி பேசினார். நாங்கள் தொழில் முனைவோர்களையும், ‘கோட்’ போட்ட திரு. ஸ்டாலினையும் அதுபோன்று கொச்சைப்படுத்த மாட்டோம்.

ஒரு மாநிலத்தின் தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கைகள் ஆகும். திரு. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், எனது ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்று நச்சுக் கருத்தைக் கூறியுள்ளார்.

2019-ல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அதனை முன்னின்று நடத்தியவர் அப்போதைய தொழில்துறை செயலாளர் திரு. ஞானதேசிகன் அவர்கள். 2019 உலக முதலீட்டாளர் (ஜிம்) மாநாட்டின் சிறப்பு அலுவலராக (Special Officer) திறம்பட பணியாற்றியவர் கூடுதல் செயலாளராக இருந்த திரு. அருண்ராய், திரு. ஞானதேசிகன்-க்கு பிறகு தொழில் துறைச் செயலாளராக திரு. முருகானந்தம் பொறுப்பேற்றார்கள்.

எனது தலைமையில், தொழில் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், பால்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டினை ஈர்ப்பதற்கும் மற்றும் கொரோனா கால முதலீடுகளை ஈர்ப்பதற்குமான ஏற்பாடுகளை முன்னின்று செய்த அதிகாரிகள் திரு. முருகானந்தம், திரு. அருண்ராய் ஆகியோர்தான். 2020-ம் ஆண்டு இறுதியில் ஜிம்-1ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 72 சதவீத திட்டங்களும், ஜிம்-2ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 27 சதவீத திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தன.

எனது வெளிநாட்டுப் பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 41 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. கொரோனா காலத்தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020-ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில், 7 மாதத்திற்குள் ரூ. 24,458 கோடி முதலீட்டில், 24 திட்டங்களை, சென்னை, ஹோட்டல் லீலா பேலசில் நடைபெற்ற விழாவில் நானே தொடங்கி வைத்தேன். இந்த புள்ளி விவரங்களை அரசு கோப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆட்சியாளர்கள் மாறினாலும், அதிகார வர்க்கம் அப்படியேதான் இருக்கும்’ ‘ஆட்சி அமைப்பு (அதிகாரிகள்) நிரந்தரமானது. ஆட்சியாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியவர்கள்’. எனது தலைமையிலான அம்மாவின் அரசில், தொழில் துறையில் பணியாற்றியவர்கள்தான், தற்போது திரு. ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் தொழில்துறையின் சிறப்பு செயலாளராக இருந்த திரு. அருண்ராய், இந்த ஆட்சியில் தொழில்துறை செயலாளராகப் பணியாற்றுகிறார்.

அன்றைய தொழில்துறை செயலாளராக இருந்த திரு. முருகானந்தம் அவர்களை, திரு. ஸ்டாலின் தொடர்ந்து தொழில்துறை செயலாளராகவும், நிதித் துறை செயலாளராகவும், தனது செயலாளராகவும் பணியமர்த்தியதுடன், தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராகவும் நியமித்துள்ளார். இவர்கள் இருவரிடமும் எங்கள் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதைக் கேட்டுத் தெரிந்திருந்தால் மனம்போன போக்கில் பேட்டியளித்திருக்க மாட்டார்.

இந்த 40 மாத கால திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை, துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கான வெள்ளை அறிக்கையினைக் கேட்டேன். இந்த முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான், வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார்.

‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்ற கிராம பழமொழிதான் பொம்மை முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. தன்னுடைய வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம் என்ற கற்பனையில் திரு. ஸ்டாலின் மிதக்கிறார். சிலரை சிலநாள் ஏமாற்றலாம் – பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பதை திரு. ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வரும்.” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘நா-நயம்’ மிக்க தலைவராருக்கு நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நாணையத்தை கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜுன் 3-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.

நாணயத்திற்கான நடைமுறைகள் முடிந்த நிலையில், நாணய வெளியீட்டு விழாவை இன்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடக்கிறது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பெருந்தன்மையோடு கலந்து கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிகாரிகள், விழாவில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்பதாகக் கூறினார். நாணய வெளியீட்டுக்காக ஒத்துழைத்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் முன்னிலை வகித்து வரவேற்பு உரையாற்றினார்.

தொடர்ந்து முதலமைச்சர் விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அனைத்துக் கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட பொருத்தமானவர். சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தந்தவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை இந்தியாவே கொண்டாடுகிறது. மாநில உரிமைகளுக்காகப் போராடிய கருணாநிதி நெருக்கடி நேரங்களில் நாட்டுக்கு கைகொடுத்தார். தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சி சார்ந்த அரசல்ல; இங்கே ஓர் இனத்தில் அரசு நடக்கிறது.” போன்ற கருத்துகளை முன்வைத்தார்.

என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இப்போது இருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவரைச் சிறப்புச் செய்யும் வகையில் நாணயம் வெளியிடப்படுகிறது. ‘நா-நயம்’ மிக்க தலைவரான கலைஞருக்கு, நாணயம் வெளியிடப்படுவது மிகமிகப் பொருத்தமானது.

நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா. இதுபோன்ற எத்தனையோ சிறப்புகளுக்குத் தகுதியானவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்! உலகம் இன்று ஒப்புக் கொண்ட உண்மை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், தலைவர் கலைஞர் அவர்களது திருவுருவப் படத்தை, அன்றைய குடியரசுத் தலைவர் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்கள். ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள திருவுருவச் சிலையை, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்ய நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்கள். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை அன்னை சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட திருவுருவச் சிலையை, மேற்கு வங்க முதலமைச்சர் மாண்புமிகு மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார்கள். இன்று தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நாணயத்தை, நமது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வெளியிட வருகை தந்துள்ளார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்திருப்பது மிகமிகப் பொருத்தமானதுதான். எண்பது ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் இயங்கி, அதில் அரைநூற்றாண்டு காலம், தமிழ்நாட்டின் திசையைத் தீர்மானித்த தலைவர் கலைஞருக்கு, இந்தியாவே வருகை தந்து சிறப்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தலைவர் கலைஞர் நிறைவடைந்த நாள்முதல், நாள்தோறும் அவர் புகழைத்தான் போற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலமாக அவரது நூற்றாண்டை முன்னிட்டு, அவரது சாதனைகளைச் சொல்லும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தலைவர் கலைஞரைப் போற்றும் விதமாகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினோம். அவற்றில் முத்தாய்ப்பான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை! மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! 1 கோடியே 15 லட்சம் மகளிர், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’! கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்! இந்தப் பெருமைக்கெல்லாம் மகுடமாக, இன்று கலைஞர் உருவம் தாங்கிய நாணயம் வெளியிடப்படுகிறது.

இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, தலைவர் கலைஞர் அவர்கள்தான்! அவர் உருவாக்கிய கட்டமைப்புகளைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் போதாது. அவரது சாதனைகளைச் சொல்ல, இதோ நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோமே, இந்த கலைவாணர் அரங்கத்தில் இருந்தே தொடங்கலாம். பாலர் அரங்கமாக இருந்த இதனை, மிகப்பெரியதாகக் கட்டி எழுப்பி, ‘கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றினார். தாய்மொழியாம் தமிழ்மொழிக்குச் ‘செம்மொழி’ தகுதியைப் பெற்றுத் தந்தார். மெட்ராசை ‘சென்னை’ ஆக்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் போன்ற எண்ணற்ற திட்டங்களை உருவாக்கினார்.

* 44 அணைக்கட்டுகள்
* ஏராளமான கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள்
* சென்னையைச் சுற்றி மட்டும்
* அண்ண சாலை, அண்ணா மேம்பாலம்
* வள்ளுவர் கோட்டம்
* கத்திபாரா பாலம்
* கோயம்பேடு பாலம்
* செம்பொழிப்பூங்கா
* டைடல் பார்க்
* தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு, இன்று பெரிய அர மருத்துவமனையாக இருக்கும் ஒமந்தூரார் மருத்துவமனை
* மெட்ரோ ரயில்
* அடையாறு ஐ.டி. காரிடார்
* நாமக்கல் கவிதர் மாளிகை
என அனைத்தும் கலைஞரால் உருவாக்கப்பட்டவை என்பதை யாராலும் மறைக்க முடியாது.
கடந்த 15-ஆம் நாளன்று இந்திய நாட்டின் 78-ஆவது விடுதலை நாளைக் நாம் கொண்டினோம். அன்று நாள் மட்டுமல்ல நாட்டிலுள்ள அத்தனை மாநில முதலமைச்சர்களும் கொடியேற்றினார்களே, அதற்கான உரிமையைப் பெற்றுத்தந்தவரும் முதலமைச்சர் கலைஞர்தான்!
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னாரே….
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” என்று, அப்படி ஆட்சி நடத்தியவர் கலைஞர்!

அதனால்தான் இன்று அகில இந்தியாவும் போற்றும் கலைஞர் உயர்ந்து நிற்கிறார்.
* செயல்படுவதும், செயப் வைப்பதும்தான் அரசியல் என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக இருந்தவர் கலைஞர். ஒரு கட்சியின் தலைவராக; ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவராக எப்போதும் சிந்தித்தார்! செயப்பட்டார்
* 1971-ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு க தீர்மானம்.
* 1972-ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறு கோடி ரூபாய் நிதி, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதிமற்றும் நிலம்

* 1999-ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியாவிலேயே அதிகத் தொகையை, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 510 கோடி ரூபாய் வழங்கியவர் நலைவர் கலைஞர்!
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதேவேளையில் நாட்டின் பாதுகாப்பு என்று வருகிறபோது கை கொடுத்தவர்தான் கலைஞர் அவர்கள்.
* நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. கொடுத்த யாக்கை காப்பாற்றுவதற்குப் பெயரும் நாணயம்தான்!

சொன்னதை செய்வோம் – செய்வதை சொல்வோம் என்று சொல்லி சொன்னதையெல்லாம் செய்து காட்டியது கலைஞர் நாணயத்துக்கு அடையாளம். அவரது வழியில் இன்றைய திராவிட பாடம் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கலைஞர் அரசாகச் செயல்பட்டு வருகிறது. சட்டசபையை அதிகார அமைப்பாக இவ்வாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் அமைப்பாகக் கருதவேண்டும்” என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். அப்படித்தாள் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இது, எனது அரசல்ல; நமது அரசு! ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு! திராவிடக் கருத்தியல் கொண்ட அரசு ! இதனை என்னுள் ஏற்படுத்தியவர் தலைவர் கலைஞர். அந்த வகையில் கலைஞரே இயக்கிக் கொண்டிருக்கிறார்.

“ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது மரணத்திற்கு பிறகு கணக்கிடப்பட வேண்டும்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அவரது முகம் தாங்கிய நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லும் இடம் பெற்றுவிட்டது என்றால், இதுவும் கலைஞரின் சாதனைதான்! தனது சாதனைப் பெருவாழ்வால் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞர் புகழ் வாழ்க என மு.க ஸ்டாலின் பேசினார்.

அதிமுக போல பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை..!

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டை குறிக்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தில் தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் போதித்த கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும் கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை?

கருணாநிதிக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் ‘தமிழ் வெல்லும்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.

எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் கருணாநிதிக்கு நிறுவப்பட்ட சிலையை, பாஜக தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?

உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே கருணாநிதி எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் மத்திய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் திமு கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே கருணாநிதியின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிறைந்திருக்கிறது.

அதிமுகவைப் போல பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பாஜகவை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, திமுக மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.

அத்திக்கடவு- அவினாசி திட்டம்: அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972 -ஆம் ஆண்டில் முதன் முதலில் செயல்படுத்த கருணாநிதி முனைந்தவர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள்.

அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கருணாநிதியை மத்திய அரசே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ‘காந்தாரி’ போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு..!:

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணியளவில் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த மாதம் 15-ஆம் தேதி நடைபெறும் திமுக-வின் முப்பெரும் விழா குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை அதிகரித்து புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘நாடாளுமன்ற தேர்தல் 2024 -40/40 திசையின் தீர்ப்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி பெற்று கொண்டார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றியை தென் திசையின் தீர்ப்பு புத்தகம் ஆவணமாக பதிவு செய்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி எப்படி வெற்றியை சாத்தியமாக்கியது என்பது உள்ளிட்டவை புத்தகத்தில் இடம்பெற்றது.

பின்னர் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. ⁠தொடர்ந்து 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். ⁠200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம்.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ⁠சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்.. ⁠சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும். ⁠கழகத்தின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15-க்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ⁠உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உயர்வு இருக்கும்.அரவனைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர். வெற்றி பெறுபவரே வேட்பாளர்.

அமைச்சர்களும் கழகத்தின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.⁠ முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் கழகத்தையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன். ⁠கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும். ⁠கழகத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அந்தரத்தில் தொங்கி..! வயநாட்டில் சிகிச்சையளித்த சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று 15-ஆம் தேதி நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றியேற்றினார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பிறகு, கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். அந்தவகையில், நர்ஸ் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருதும், மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருதும் வழங்கினார் தமிழக முதல்வர். அந்தவகையில், தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையால், இந்த விருதினை குமரி அனந்தன் பெற்றார்.

அதேபோல, கல்பனா சாவ்லா விருது, செவிலியர் சபீனாவுக்கு வழங்கப்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா, ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கோவில்களில் திருப்பணிகளுக்கு அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கல்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

மேலும் 2021 – 2022 -ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா ஒரு லட்சத்தை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதன் எண்ணிக்கையை தலா 1,000- லிருந்து 1,250 ஆக உயர்த்தியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் 2,500 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 2,500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய்க்கான வரைவோலைகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இவற்றில் 1,085 கிராமப்புறத் திருக்கோயில்கள், 1,070 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் என 2,155 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதர திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருவதோடு, முதன் முறையாக அதன் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு கூடுதலாக 1,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதோடு, வைப்பு நிதியை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2023-2024 -ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ரூ.2.50 லட்சமாக உயர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனை மலர் வெளியீடு..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் நாள் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை வெளியிட்டார். திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் நாள் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்து; நான்காம் ஆண்டிலும் தொடர்ந்து சிறப்பான பல திட்டங்களைச் செயல்படுத்திப் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

திராவிட மாடல் அரசு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்து, பல்வேறு புதுமையான திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு, இந்திய அளவில் படைத்துள்ள சாதனைகள் ஒன்றிய அரசின் நிதிஆயோக் – நிர்யாத் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் நாட்டிற்குப் பறைசாற்றியுள்ளன. அதாவது, தமிழ்நாடு இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதல் மாநிலம், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் முதலிடம், ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் முதலிடம், மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம், மகளிர் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலிடம், கர்ப்பிணிப் பெண்கள் சுகதாரத்தில் தமிழ்நாடு முதலிடம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம், மகப்பேற்றுக்குப் பிந்தைய சிசு கவனிப்பில் முன்னணி மாநிலம் என பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

மேலும் வேளாண் உற்பத்தியில் முன்னணி மாநிலம், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் தலைசிறந்த மாநிலம், மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம், பொறியியல் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியில் இரண்டாம் இடம், தொழில் வளர்ச்சிக்கான 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் போன்ற சாதனைகளை படைத்து வருகிறது. இவை குறித்துச் சான்றோர்களும், பத்திரிகைகளும், ஊடகங்களும் பாராட்டி வருகின்றன. இவையல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் தெலுங்கானா மாநிலத்திலும், கனடா நாட்டிலும் பின்பற்றப்படுகின்றது.

இந்த அரசின், “நான் முதல்வன்” போன்ற வேறு பல திட்டங்களும் இந்திய அளவிலும், வெளிநாட்டிலும் புகழ் பரப்பிவரும் சூழ்நிலையில், திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டு காலத்தில் பல்வேறு துறைகளிலும் நிறைவேற்றியுள்ள திட்டங்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைத் துறைவாரியாகத் தொகுத்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ’தமிழரசு’ இதழின் மூலம் “தலை சிறந்த மூன்றாண்டு! தலை நிமிர்ந்த தமிழ்நாடு!” என்னும் பெயரில் மூன்றாண்டு சாதனை மலரை சிறப்பாகத் தயாரித்துள்ளது. இச்சாதனை மலரில் பல்வேறு பெருமக்களின் கட்டுரைகளாக, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி எழுதிய “தமிழ்நாட்டின் நலன்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டது”.

தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் எழுதிய, “விடியல் பயணம் ஒரு சமூக நீதித்திட்டம்”, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் எழுதிய, “திராவிட மாடல் தத்துவமும் தனித்துவமும்”, பேராசிரியர் ராஜன் குறை அவர்கள் எழுதிய “மூன்றாண்டு காலத்தில் முதன்மைச் சாதனைகள், வழக்கறிஞர் அ.அருள்மொழி அவர்கள் எழுதிய, “வினைத்திட்பம்’ கொண்ட முதலமைச்சர்”, கல்வி ஆலோசகர் திரு.ஜெயபிரகாஷ் காந்தி அவர்கள் எழுதிய, “கல்விக் கட்டமைப்பில் உயரம் தொட்ட முதலமைச்சர்”, திரு.கனகராஜ் அவர்கள் எழுதிய, “முற்றுகைக்கு மத்தியிலும் மூன்றாண்டு சாதனைகள்”, பத்திரிகையாளர் திரு.திலீப் மண்டல் அவர்கள் எழுதிய, “ஒருங்கிணைந்த வளர்ச்சியும் சமூக நீதியும் தமிழ்நாட்டின் திராவிட மாடல்” போன்ற மலர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அரசைப் பாராட்டியுள்ளன.

மேலும் பத்திரிகையாளர் சங்கீதா கந்தவேல் அவர்கள் எழுதிய, “பெண்களுக்கான மேம்பாட்டுக்கு வழிகோலும் திராவிட மாடல்”, பத்திரிகையாளர் திரு.அருள் எழிலன் அவர்கள் எழுதிய, “தமிழ்நாட்டைப் பின்தொடரும் இந்தியா” ஆகிய கட்டுரைகளும், இம்மலரில் இடம் பெற்றுத் தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளன. இத்தகைய பாராட்டு மொழிகளுடன், அழகிய வடிவமைப்புடனும், பல்வேறு வண்ணப் புகைப்படங்களுடனும் இந்த மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.