பட்டப்பகலில் மாணவி கத்தியால் குத்தி கொலை… சென்னையில் மேலும் ஒரு கொடூரம்

சென்னை குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா, தாம்பரம் பகுதியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரி முடிந்து தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஸ்வேதா வந்துகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் சரமாரியாக குத்தினார். மேலும் அந்த நபர் தனது கழுத்தில் குத்திக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல்துறை இருவரையும் உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவி ஸ்வேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியை கத்தியால் குத்திய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவியை கத்தியால் குத்திய நபர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் இவர், செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நல உதவிகள் வழங்கல்

திராவிட கழகத்தை நிறுவிய பெரியாருடன் தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

அண்ணா தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார்.

இந்நிலையில் தி.மு.க.வின் தாய் கழகமான திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது.  அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று கொளத்தூர் – ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளான 260 கழக உடன் பிறப்புகளின் உழைப்பை பாராட்டி பொற்கிழி, நல உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  சிறப்பித்தார்.

திருவொற்றியூர் முதல் கோவளம் வரை செல்லும் 109 டி என்ற புதிய வழித்தட பேருந்து சேவை

சென்னை திருவொற்றியூர் புதிய பேருந்து பணிமனையில், திருவொற்றியூர் முதல் கோவளம் வரை செல்லும் 109 டி என்ற புதிய வழித்தட பேருந்து சேவையின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி விழாவில் பங்கேற்று புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, திருவொற்றியூர் முதல் கோவளம் வரையிலான புதிய வழித்தடத்தில் ரூ.47 கட்டணத்தில் இப்பேருந்து இயக்கப்பட்டது. இப்பேருந்து காசிமேடு பகுதிக்குள் நுழைந்தபோது அங்கு திரளாக கூடியிருந்த மீனவர்கள் மலர்தூவி, தீபாராதனை காண்பித்து வரவேற்றனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை – தியாகராய நகரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு மற்றும்  மா. சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்தநிகழ்ச்சியில் சென்னைக்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தை தொகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் திறந்து வைப்பு

சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டமன்ற அலுவலகத்தை தொகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, பகுதிச் செயலாளர்கள்‌ துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர்கள் S.P. கோதண்டம், M. நாகா கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயுமா?

மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற நாடோடிகள் படத்தின் நடிகை சென்னை பெசன்ட்நகரில் சாந்தினி வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.


அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொன்னார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார், என்று தெரிவித்து இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறை நேற்று வழக்குப்பதிவு செய்தனர். அடுத்த கட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.