கனடா புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை..!

இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும் என்று, கனடாவிலுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதையடுத்து இந்தியதூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது. அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் பேசுகையில், RSS அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. எனவே, கனடாவில் அதைத் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்கவேண்டும். சீக்கிய பிரிவினைவாதியின் கொலைக்கு இந்திய தூதர்கள் சிலர் காரணம் என்று கனடாவிலுள்ள ராயல் கனடிய மவுண்டட் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் இதில் இந்தியாவின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது என ஜக்மீத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் பேசினர். அப்போது, “இந்தியாவிலுள்ள RSS அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. அதை கனடாவில் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும்.

கனடாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கைகள் வருகின்றன. அவர்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். மேலும் தங்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஓட்டல்களில் தங்கி பாதுகாப்புடன் உள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

என்டிபி கட்சி எம்.பி. ஹீத்தர் மெக்பெர்சன் பேசுகையில்,, “இந்தியாவுக்கு ஆயுதங்கள், ராணுவத்தள வாடங்கள் விற்பனை செய்வதை கனடா நிறுத்தவேண்டும். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறை, இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுக்கும், இந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் கனடா வருவதற்கு தடை செய்யவேண்டும். இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும்” என்றார். அவையில் என்டிபி கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் பேசுகையில்,, “RSS அமைப்பானது உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வன்முறை, தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. கனடாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை RSS செயல்படுகிறது. அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்’’ என ஜக்மீத் சிங் பேசினார்.

 

திருமணம், கனடாவில் வேலை…! குடும்பத்தோடு வரவழைத்து 12 லட்சம் மோசடி..!!

திருமண மற்றும் வேலை வாய்ப்பு இவற்றில் ஆசை வார்த்தைக்காட்டி மோசடி செய்யும் சம்பவங்கள் நாடெங்கும் இன்று அதிக அளவில் அரக்கேறிக் கொண்டுள்ளது. இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். அதன் வரிசையில் பஞ்சாப் மாநில லூதியானாவில் ஆடைகள் தயாரிக்கும் `பொட்டிக்’ நடத்தி வரும் 41 வயது பெண்ணுக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. அவருக்கு 17 வயதில் மகனும், 13 வயதில் மகளும் இருக்கின்றனர். அப்பெண் மறுதிருமணம் செய்து கொள்ள முடிவு செய்து மேட்ரிமோனியல் தளத்தில் தனது பெயரை பதிவு செய்து வைத்திருந்தார்.

அவரை மொஹித் சத்தா என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். இருவரும் அடிக்கடி சாட்டிங் செய்து கொண்டனர். மொஹித் தான் கனடாவில் வசிப்பதாகவும், அங்கு தொழில் செய்வதாக கூறிய அவர் கனடாவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் அதற்காக தான் இந்தியா வந்திருப்பதாகவும் மொஹித் சத்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் மும்பையில் இருப்பதாகவும், ஆகஸ்ட் 25-ஆம் தேதி கனடா செல்வதாகவும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளர்.

அதனால் தன்னை மும்பை வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து 41 வயது பெண் தனது மூத்த சகோதரியுடன் மும்பை வந்து மொஹித் சத்தாவை சந்தித்து பேசிவிட்டு சென்றார். அப்போது அப்பெண்ணின் உறவினர்களுக்கு கனடாவில் வேலை வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார். இதை அப்பெண்ணும் அவரின் சகோதரியும் நம்பியுள்ளனர். இந்நிலையில், மொஹித் சத்தா பஞ்சாப் வரும்படி கேட்டதற்கு தனக்கு மும்பையில் வேலை இருப்பதாக கூறி செல்ல மறுத்துவிட்டார். ஆனால் மொஹித் சத்தாதிருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி குறித்து முடிவு செய்ய மும்பை வரும்படி கேட்டுக்கொண்டார். அதோடு கனடாவிற்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்களையும் அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார்.

இது குறித்து 41 வயது பெண் பேசுகையில்,” நாங்கள் மொத்தம் 9 பேர் கடந்த 7-ம் தேதி மும்பை சென்றோம். மும்பை விமான நிலையத்தில் எங்களை மொஹித் சத்தாவின் உறவினர் ஹர்ஜித் சிங்கும், பணியாளர் சதீஷ் ராவும் வரவேற்று இரு கார்களில் லோனவாலாவிற்கு அழைத்து சென்றனர். லோனவாலாவில் பண்ணை வீடு ஒன்றை எங்களுக்காக புக்கிங் செய்திருந்தார். எங்களிடம் மொஹித் சத்தா மிகவும் கவர்ச்சிகரமாக பேசினார். அதோடு எங்களை மிகவும் கவனம் எடுத்து கவனித்துக்கொண்டார். எங்களது உறவினர்களுக்கு கனடாவில் இருந்து வேலைக்கான அழைப்பு வரும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 12-ம் தேதி நாங்கள் அனைவரும் ஒரு அறையில் கூடியிருந்தோம். எங்களுக்கு மொஹித் சத்தா ஜூஸ் கொடுத்தார். நாங்கள் அதை குடித்தோம். கனடாவில் இருந்து போன் வந்தால் இடையூறு இருக்கக்கூடாது என்று கூறி எங்களின் போன்களை வாங்கி வைத்துக்கொண்டார். எனது மகன் மற்றும் சகோதரர் போனை மட்டும் நாங்கள் வைத்திருந்தோம். மாலை 3.30 மணிக்கு ஜூஸ் குடித்தவுடன் அனைவருக்கும் தூக்கம் வருவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

அனைவரும் தூங்கிவிட்டனர். இரவு 9 மணிக்கு நான் எழுந்தேன். எனது உறவினர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். மொஹித் சத்தாவிற்கு போன் செய்தேன். ஆனால் அவர் சில நிமிடங்களில் வந்துவிடுவதாக தெரிவித்தார். ஆனால் வரவேயில்லை. எங்களது மொபைல் போன், 2 லட்சம் பணம் எடுக்கப்பட்டு இருந்தது. அதோடு மொபைல் போன் மூலம் எங்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.7.5 லட்சம் வேறு வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டு இருந்தது. மொத்தம் 12 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். ஆனால் இன்னும் காவல்துறை வழக்கை பதிவு செய்யவில்லை” என்று குறிப்பிட்டார்.

இது குறித்து காவல் ஆய்வாளர் சுஹாஸ் ஜெக்தாப் பேசுகையில், ”விசாரித்துக் கொண்டிருக்கிறோம். எந்தெந்த பிரிவுகளில் புகாரை பதிவு செய்யலாம் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற சம்பவங்களில் மக்கள் சம்பந்தப்பட்ட நபர் குறித்து முழுமையாக விசாரித்து எந்த வித பரிவர்த்தனைகளையும் வைத்துக் கொள்ளவேண்டும்”என ஆய்வாளர் சுஹாஸ் ஜெக்தாப் தெரிவித்தார்.