அதிஷி மர்லினா சிங்: டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் அமளி.. எதிர்க்கட்சி தலைவர் அதிஷி உள்ளிட்ட 11 MLA -க்கள் இடைநீக்கம்..

டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிஷி மர்லினா சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி MLA -க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA -க்களளுடன் மூன்று நாள் டெல்லி சட்டமன்றக் கூட்டம் நேற்று தொடங்கியது. பாஜக மற்றும் எதிர்க்கட்சி MLA -க்கள் சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமையில் சட்டமன்றத்தில் பதவியேற்றனர்.

2-வது நாளான இன்று, முந்தைய ஆம் ஆமி கட்சி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கைகளை பாஜக அரசு தாக்கல் செய்வதற்கு முன்பாக, டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றும் ஆம் ஆத்மி MLA -க்கள்சட்டசபையில் போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அதிஷி மர்லினா சிங், முன்னாள் டெல்லி அமைச்சர் கோபால் ராய் உள்ளிட்ட 11 MLA -க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டசபை தலைவர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை மீது பாஜக உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர். முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி மர்லினா சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டமேதை அம்பேத்கரை விட நரேந்திர மோடி பெரிய தலைவரா என்று கேள்வி எழுப்பினார். டெல்லியில் பாஜக பதவிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு மோடி படத்தை வைத்துள்ளனர். அம்பேத்கரை புகழ்ந்து முழக்கமிட்ட ஆம் ஆத்மி MLA -க்களை பேரவையில் இருந்து வெளியேற்றிவிட்டனர். அம்பேத்கர் மீதான பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பையே டெல்லி அரசின் செயல் காட்டுவதாக அதிஷி மர்லினா சிங் தெரிவித்தார்.

வினை குமார் சக்சேனா பாராட்டு: அரவிந்த் கெஜ்ரிவாலைவிட அதிஷி மர்லினா சிங் ஆயிரம் மடங்கு சிறந்தவர்..!

டெல்லி முதலமைச்சர் அதிஷி மர்லினா சிங், அவருக்கு முன்பு இருந்த முதலமைச்சரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறந்தவர் என டெல்லி துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா, முதலமைச்சர் அதிஷி மர்லினா சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் வினை குமார் சக்சேனா பேசுகையில், “டெல்லியின் முதலமைச்சராக ஒரு பெண் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, அவர் தனக்கு முன்பு இருந்த முதலமைச்சரைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும் என வி.கே.சக்சேனா தெரிவித்தார்.

அதிஷி மெர்லினா சிங்: அரசு பங்களா தேவையில்லை நாங்கள் சாலையில் அமர்ந்து ஆட்சி செய்வோம்..!

பெரிய பங்களாவில் வாழ்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைபட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம் என டில்லி முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் தெரிவித்தார்.

டில்லி ஆம் ஆத்மி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இத்தனை தொடர்ந்து செப்டம்பர் 21-ஆம் தேதி டில்லி புதிய முதலமைச்சராக அதிஷி மெர்லினா சிங் பதவிறே்றார்.

இந்நிலையில் டில்லி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பங்களாவான எண் 6, பிளாக் ஸ்டாப் சாலையில் கடந்த 6-ஆம் தேதி அதிஷி மெர்லினா சிங் குடியேறினார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் திடீரென அவரது உடமைகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தூக்கி வெளியே வீசப்பட்டன. மேலும் அதிஷி மெர்லினா சிங்கை கட்டாயப்படுத்தி அரசு பங்களாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் பின்னணியில் துணை நிலை கவர்னரும், பாஜகவும் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் அதிஷி மெர்லினா சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆப்ரேஷன் தாமரையை துவங்கிய பாஜக எங்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாததால் மிகுந்த கவலையில் உள்ளது. இப்போது முதல்வர் இல்லத்தையும் பாஜகவினர் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கியுள்ளனர்.

சொகுசு காரில் செல்வதற்கும், அரசு பங்களாவில் வாழ்வதற்காகவும் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தேவைப்பட்டால் சாலையோரம் அமர்ந்தும் ஆட்சி செய்வோம். மக்கள் மனதில் நாங்கள் உள்ளோம் என காரசாரமாக அதிஷி மெர்லினா சிங் பேசினார்.

Atishi Marlena Singh: ‘ராமாயணத்தில் பரதருக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இன்று ’

டெல்லியில் அதிஷி மர்லினா சிங் முறைப்படி முதலமைச்சராக பொறுப்பேற்றார் . அப்போது, முதலமைச்சர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அதிஷி மர்லினா சிங் அமர்ந்தார்.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 13-ஆம் தேதி ஜாமீனில் விடுதலையாகி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து , புதிய முதலமைச்சராக அதிஷி மர்லினா சிங்கை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக அதிஷி மர்லினா சிங் பதவியேற்றார். அதிஷி மர்லினா சிங்கிற்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் இன்று காலை அதிஷி மர்லினா சிங், முதலமைச்சர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ராமாயணத்தில் பரதருக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இன்று எனக்கு. அவரது சுமையை போல நானும் இதை சுமக்கிறேன். எப்படி ராமரின் பாதுகையை அவர் தனது அரியணையில் வைத்து ஆட்சி செய்தாரோ, அதே உணர்வோடு அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லியை ஆட்சி செய்வேன்” என அதிஷி மர்லினா சிங் தெரிவித்தார்.

Atishi Marlena Singh: டெல்லிக்கு என்றுமே ஒரே முதலமைச்சர் தான். அவர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்..!

“டெல்லிக்கு ஒரேயொரு முதலமைச்சர்தான்; அவரே அரவிந்த் கெஜ்ரிவால்” என்று டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள அதிஷி மர்லினா தெரிவித்துள்ளார். டெல்லியின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியினரால் தேர்வு செய்யப்பட்ட அதிஷி மர்லேனா சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு வழங்கிய டெல்லியின் பிரபலமான முதலமைச்சரும், எனது குருவுமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். முதல்முறை அரசியல்வாதி ஒருவர் முதலமைச்சராக வருவது எல்லாம் ஆம் ஆத்மி கட்சியில் மட்டும்தான் நடக்கும். நான் வேறு கட்சியில் இருந்திருந்தால் எனக்கு தேர்தலில் நிற்க கூட இடம் கிடைத்திருக்காது.

அரவிந்த் கெஜ்ரிவால் என்னை நம்பினார். என்னைச் சட்டப்பேரவை உறுப்பினராக்கினார். இன்று முதலமைச்சர் பொறுப்பைக் கொடுத்துள்ளார். அவர் என் மீது காட்டும் அதிகப்படியான நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்றாலும் எனது மூத்த சகோதரர் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்வது வேதனை அளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் டெல்லியின் இரண்டு கோடி மக்களின் சார்பில் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது, டெல்லிக்கு என்றுமே ஒரே முதலமைச்சர் தான். அவர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்.

இந்தப் பொறுப்பை என் தோல்களில் சுமக்கும் வரை எனது குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அது டெல்லி மக்களை பாதுகாப்பது, அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படி டெல்லி அரசை வழிநடத்துவது. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் கல்வி, சுகாதாரம், இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும் என டெல்லி மக்களுக்கு தெரியும்” என அதிஷி மர்லேனா சிங் தெரிவித்தார்.