லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது..!?

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கு, சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரன் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கானின் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால், அனுஜ்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அனுஜ்குமார் காவல்துறை காவலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது சகோதரர்கள் அன்மல் பிஷ்னாய் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் MLA -வுமான பாபா சித்திக்கை, கடந்த மாதம் 12-ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் குஜராத் சமர்பதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இருப்பதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

மேலும் டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்ற கொடிய குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அன்மோல் பிஷ்னோயை கைது செய்ய உதவினால் ரூ. 10 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக மும்பை காவல்துறைக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. இத்தனை தொடர்ந்து அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர மும்பை காவல்துறை முடிவு செய்து இதற்கான அன்மோல் பிஷ்னோய் கைது செய்ய மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணையில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..!

மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணை முறையில் லஞ்சம் வாங்கிய மாநில சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் தானா பஹேடி கிராமத்தை சேர்ந்த ஆரிஷ் ராஜ்புரா என்ற இடத்தில் இருந்து வசுந்தரா கிராமத்திற்கு மதரசாவை மாற்றுவது தொடர்பாக பரேலியில் உள்ள மாநில சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். இது தொடர்பான கோப்பு 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பரேலி சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மூத்த உதவியாளர் ஆக பணியாற்றி வந்த முகம்மது ஆசிப் என்பவரை சந்தித்தார்.

அப்போது உரிய நடைமுறை களை முடித்து கோப்பினை ஒப்புதலுக்கு அனுப்ப ஆரிஷிடம் முகம்மது ஆசிப் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை தன்னால் தரமுடியாது என்று ஆரிஷ் கூறியதை தொடர்ந்து அப்பணத்தை தவணை முறையில் தருமாறு முகம்மது ஆசிப் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆரிஷ் புகார் கொடுத்தார். இதில் முகம்மது ஆசிப்பை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் முதல் தவணையாக ரூ.18 ஆயிரத்தை முகம்மது ஆசிப் பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

நக்கீரன் கோபால் வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுப்பு..! ஓம்கார் பாலாஜி அதிரடி கைது..!

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காததால் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 -ஆம் தேதி கோயம்புத்தூர் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் ஓம்கார் பாலாஜி பேசியிருந்தார்.

இது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி, மனுதாரர் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரினால் அது பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து வாய்மொழி உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

இந்த மனு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓம்கார் பாலாஜி தரப்பில் மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை மாற்றி தானாக முன்வந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மனுவை மாற்றி தாக்கல் செய்ய சம்மதிக்கவில்லை. இதையடுத்து, முன் ஜாமீன் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி விசாரணையை நவம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து, மாலை 5 மணிக்கு நீதிமன்றத்திற்கு சென்ற ஓம்கார் பாலாஜி, என்னை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளனர், எனவே காலை சரணடைகிறேன் என்று கோரினார். அரசு வழக்கறிஞர் சந்தோஷ், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காததால் இனி காவல்துறையினர்தான் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார். அப்போது, நீதிபதி, இப்போது நிவாரணம் கோர முடியாது என தெரிவித்தார். இதையடுத்து, ஓம்கார் பாலாஜி வழக்கறிஞர்கள் சங்க அறைக்கு சென்றார்.

கைது செய்ய எந்த தடை உத்தரவும் இல்லாததால் ஓம்கார் பாலாஜியை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்லக்கூடிய அனைத்து வாயில்களிலும் கோயம்புத்தூர் காவல்துறை நிறுத்தப்பட்டனர். ஓம்கார் பாலாஜி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது வழக்கறிஞர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் ஓம்கார் பாலாஜி வெளியில் வந்தபோது அவரை காவல்துறை கைது செய்து பின்னர் கோயம்புத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

போதைப் பொருள் வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது..!

இந்நிலையில், போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனா சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனா சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்குப் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

கொகைன் கடத்தலில் முன்னாள் டிஜிபி மகன் கைது..!

வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து வந்த முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ரவீந்திரநாத்தின் மகன் அருண் காவல்துறை கைது செய்தனர். குற்றவாளிகளை பொறிவைத்து பிடித்த காவலர்களுக்கு காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேநேரம் சென்னையில் பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெருநகர காவல்துறையில் இதுவரை இல்லாத வகையில் காவல் உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தொடங்கப்பட்டு, இந்த நுண்ணறிவு பிரிவு போதை பொருட்களை தடுக்க சுகாதாரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 18-ஆம் தேதி தனிப்படைக்கு கிடைத்த தகவலின் படி அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் விற்பனை செய்து வந்த தீபக், பாலிமேத்தா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், கடந்த 20-ஆம் தேதி அதேபோல் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அரும்பாக்கம் நடுவாங்கரை பாலம் பகுதியில் மெத்தபெட்டாமைன் விற்பனை செய்த அருண்குமார், சித்தார்த், தீபக்ராஜ் அகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி நைஜீரியா நாட்டை சேர்ந்த கபீர் குளோன்ஸ், சந்தோஷ், ஆண்டனி ரூபன் ஆகியோரை கடந்த 22-ஆம் தேதி கைது செய்தனர்.

பிறகு போதை பொருட்களை ஆந்திராவில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து கொடுக்கும் முக்கிய குற்றவாளியான ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை தனிப்படை காவல்துறை ஏஜென்டுகள் போல் பேசிய போதை பொருள் வேண்டும் என்று கூறி வரவழைத்து மாதவரம் பேருந்து நிலையம் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து கொகைன் என்ற பயங்கர போதை பொருளை நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி போதை பொருள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்ய காவல் ஆணையர் அருண் தனிப்படைக்கு உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில் தனிப்படை காவல்துறை சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ரவீந்திரநாத்தின் மகன் அருண் என்பவர் தனது நண்பரான மெகலன் என்பவருடன் இணைந்து சென்னை முழுவதும் தனது ஆட்களை நியமித்து கொகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

தனது தந்தை காவல்துறை தலைமை இயக்குனர் என்பதால் அருண் வெளிநாட்டு போதை பொருள் கும்பலுடன் நேரடியாக தொடர்பு வைத்துகொண்டு தடையின்றி கொகைன் போதைப் பொருளை வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே தனிப்படை காவல்துறை முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் மகன் அருண், அவரது நண்பர் மெகலன், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான் எஸி ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

40 பவுன் ஆட்டைய போட்ட பெண் யோகா மாஸ்டர் கைது..!

சென்னை வடபழனி, ஏவிஎம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து சங்கர் வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். சங்கர் கடந்த மாதம் 3-ஆம் தேதி பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மயமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகார் குறித்து விசாரிக்க, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், அவரது நண்பர் எண்ணுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக அனுப்ப கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி, சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டும், உரிய விசாரணை நடத்தாமல் புகார்தாரரை, உதவி ஆய்வாளர் அநாகரிகமாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அதன்படி, வடபழனி காவல் சரக உதவி ஆணையர் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ பகுதியை சேர்ந்த யோகா மாஸ்டர் காயத்ரி, கடந்த 2 மாதமாக யோகா கற்றுக் கொடுக்க சங்கர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கடந்த மாதம் சங்கர் வீட்டுக்கு வந்தபோது, நகை இருந்த அறை திறந்து கிடந்துள்ளது.

அதைப் பார்த்த காயத்ரி, பீரோவில் இருந்து 40 பவுன் நகைகளை எடுத்துள்ளார். அதில் ஒரு பகுதியை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் விற்று ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் வைர செயின் வாங்கியது காவல்துறை விசாரணையில் தெரியவர யோகா மாஸ்டர் காயத்ரி கைது செய்தனர்.

பட்டாவில் பெயர் திருத்தும் செய்ய ரூ.20,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது..!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம், மங்கம்மாள் புரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் 2002-ல் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியிடமிருந்து 94 செண்டு நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். ஆனால், நிலப் பட்டாவில் கிருஷ்ணசாமிக்குப் பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மோகன், லால்குடி வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில், 2024 மார்ச் 5-ல், அதை சரி செய்ய விண்ணப்பம் அளித்தார். நடைமுறையின்படி, அவரது விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி பெயர் மாற்றத்திற்கான பரிந்துரையுடன் துணை தாசில்தார் ரவிக்குமாருக்கு அனுப்பினார்.

ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜூலை 2024 முதல் துணை தாசில்தார் ரவிக்குமாரை தொடர்ந்து பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி மோகன் மீண்டும் லால்குடி தாலுக்கா அலுவலகத்திற்குச் சென்று, பெயர் திருத்தக் கோரிக்கையை செயல்படுத்த துணை தாசில்தாரிடம் கோரிக்கை வைக்க பெயர் மாற்ற பரிந்துரை செய்ய ரவிக்குமார் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னார் தொடர்ந்த பேச்சுவார்த்தைஇல் ரூ.20,000 குறைக்கப்பட்ட லஞ்சத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசனின் மகன் மோகன் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு துறை அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய 20 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் சம்பத்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புதுறை துணை தாசில்தார் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

நாமக்கலில் சினிமா பாணியில் வடமாநில பவாரியா கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் ஏ.டி.எம் கொள்ளையர்களை விரட்டி சென்ற காவல்துறை போலீஸ் துப்பாக்கி முனையில் 5 பேர் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியது. கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் ரூ.65 லட்சம் கொள்ளையடித்தவர்கள் குமாரபாளையத்தில் பிடிபட்டனர்

கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம் எந்திரங்களை கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து பணம் கொள்ளையடித்தனர். கொள்ளையடித்த ரூ.65 லட்சத்தை கன்டெய்னர் லாரியில் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தமிழ்நாடு தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரும் வழிகளில் ஏராளமான வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி வந்துள்ளது.

தாறுமாறாக சென்ற கன்டெய்னர் லாரியை காவல்துறை 30 வாகனங்களில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். கன்டெய்னர் லாரியை நிறுத்தாமல் சென்றதால் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி ஓட்டுநரை சுட்டுக் கொன்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்களின் கன்டெய்னர் லாரியை காவல்துறை மடக்கிப்பிடித்தனர்.

துப்பாக்கியுடன் கன்டெய்னர் லாரியில் வந்த கொள்ளையர்களை காவல்துறை பிடித்தனர். குமாரபாளையம் அருகே காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

ராஜஸ்தான் கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரிக்குள் கார், ஏ.டி.எம். இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மற்றொரு ஏடிஎம் எந்திரத்தையும் தூக்கி வந்தனர். ராஜஸ்தான் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிடிபட்டது பவாரியா கும்பல் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொள்ளையடித்த கும்பலை துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழ்நாடு காவல்துறை பிடித்துள்ளது. கன்டெய்னர் லாரியில் சென்று நாட்டின் பல்வேறு இடங்களில் கொள்ளையடிப்பது பவாரியா கும்பலின் வழக்கம். ஏ.டி.எம் கொள்ளையில் மட்டுமின்றி கேரளாவில் நடந்த 2 கிலோ தங்கம் வழிப்பறியிலும் பிடிபட்டவர்களுக்கு தொடர்பா என விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவர்களை தாக்கியதாக பாஜக பெண் நிர்வாகி கைது

காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் பாஜகவில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். ரஞ்சனா நாச்சியார் போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதைக் கண்டார். சிலர் பேருந்தின் மேற்கூரையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர்கள் செல்வதைக் கண்ட ரஞ்சனா நாச்சியார், பேருந்தின் குறுக்கே சென்று மறித்து நிறுத்தி இருக்கிறார்.

பேருந்தின் ஓட்டுநரையும் டிரைவரையும் கடுமையாக கண்டித்துப் பேசினார். அவராகவே சென்று படிக்கட்டில் தொங்கியவர்களை இறங்கிச் செல்லுமாறு ஆவேசமாக ஒருமையில் பேசியதோடு மட்டுமின்றி இறங்க யோசித்தவர்களை அடித்து இறக்கினார். இதுதொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ரஞ்சனா நாச்சியாரின் செயல் சட்டத்தை கையில் எடுத்து மாணவர்களை எப்படித் தாக்கலாம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், பேருந்து சென்ற வழித்தடம் மற்றும் ரஞ்சனா நாச்சியாரின் இருப்பிடத்தை காவல்துறை கண்டறிந்து கைது செய்தனர். ஆனால் ரஞ்சனா நாச்சியார், ‘வாரண்ட் இருக்கிறதா.. எஃப்.ஐ.ஆர் காட்டுங்கள்’ என்று கேட்டு காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்ய, பெண் காவலர் உதவியுடன் ரஞ்சனா நாச்சியாரை காவல் வாகனத்தில் ஏற்றினர். ரஞ்சனா நாச்சியார் மீது அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.