எஸ்.பி.வேலுமணி ரூ.58.23 கோடி சொத்துக்குவிப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஆட்சியில் 2016 முதல் 2021 வரை ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் .

இவர் மீது 2016 முதல் 2021-ம் ஆண்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை, மாநகராட்சி தொடர்புடைய அலுவல்பூர்வ ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வேலுமணியுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இதைப்போலவே கோவை சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராமன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. இதுமட்டுமின்றி கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய பல நபர்களின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. கோவை, சென்னை, சேலம் என மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகின்றது.

இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் சேர்த்து மேலும் 13 பேர்மீதும் இதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சுமார் ரூ.58.23 கோடி சேர்த்திருப்பதாக இந்த வழக்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது தொடரப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்திருந்த சொத்துகளின் அடிப்படையில், இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதல் தகவலறிக்கையின்படி, 27.04.2016 முதல் 15.03.2021 வரையுள்ள காலக்கட்டத்தில் மட்டும் வருமானத்தை விட அதிகமாக ரூ.58,23,97,052 சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனையில் ரூ.31 ஆயிரம் சிக்கியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்தில் வணிகவரித்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர், அங்குள்ள கடைகளில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தகவல் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை வேடசந்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது வட்டார வரிவிதிப்பு அலுவலக உதவியாளர் ஒருவர் அங்குள்ள கடைகளில் பணம் வசூலிக்கும் போது கையும், களவுமாக சிக்கினார். ஆனால் உடனடியாக அவர் இரு சக்கர வாகனத்தில் தப்பித்தார் அதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர்.

பின்னர் அவர் திண்டுக்கல் வணிகவரித்துறை அலுவலகத்துக்குள் சென்றதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது அவரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவருடைய சட்டை பையில் ரூ.31 ஆயிரத்து 100 இருந்ததை லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை இந்த வசூல் வேட்டையில் வேறு யாருக்கேனும் அவருடன் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக மாட்டினார்

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சமீபத்தில் திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், சிலம்பரசனிடம் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் திருமால் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலம்பரசன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை எனவே திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை சிலம்பரசனிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் சிலம்பரசன், திருப்பாச்சூர் கிளை அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் திருமாலிடம் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விரைந்து சென்று கையும் களவுமாக திருமாலை பிடித்து கைது செய்தனர்.