டிடிவி.தினகரன்: திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரலாம்..!

திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி.தினகரன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி.தினகரன் பதிலளித்தார்.

அப்போது, அமமுக ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். ஆனால், அந்த சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசவில்லை. திமுகவை எதிர்க்கும், திமுக வெற்றி பெறக் கூடாது என்று கருதும் எந்தக் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம்.

திமுகவுக்கு மாற்று தவெக என்று விஜய் கூறியிருப்பது, அவரது விரும்பம் மட்டுமே. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக மக்கள் மனதில் இருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான். சுயநலம், பதவி வெறியாலும், திமுக மீதுள்ள பயத்தாலும், தங்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என்பதற்காகவும், திமுக தேர்தலில் வெற்றி பெற சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது திமுகவினர் பழி சுமத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்து எதுவும் தெரியாது. ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்தார் என்று கூறும் பழனிசாமிதான் உண்மையில் துரோகத்தின் வடிவம். தனியாக கட்சி நடத்துவதால் நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் கேள்வி: தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பது எப்போது ?

தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பது எப்போது ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வரும் சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி. அதே பகுதியை சேர்ந்த மதன் குமார் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆசிரியை ரமணியின் வீட்டிற்கு சென்று மதன் குமார் பெண் கேட்டுள்ளார்.

ஆனால் ஆசிரியை ரமணியின் குடும்பத்தினர் மதன் குமாருக்கு பெண் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன் குமார் இன்று காலை ஆசிரியை ரமணி பணிபுரியும் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தியதில் படுகாயமடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

அண்மையில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்திருக்கும் இந்த கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது .

எனவே, இனியாவது விழித்து தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடிக்கு நெருக்கமான கோபாலுக்கு அமமுகவில் தலைவர் பதவி…

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வி.கே. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்க்கில் சிறைக்குச் சென்றதும், வி.கே. சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இருந்து வெளியேற்றி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக வி.கே. சசிகலாவும், தினகரனும் வழக்குத் தொடுத்தனர். அதிமுக பொதுச் செயலாளரான தன்னையும், துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனையும் நீக்க முடியாது என கோர்ட்டில் வி.கே.சசிகலா தெரிவித்தார். இதற்கிடையே தனிக்கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினார்.

வி.கே. சசிகலா சிறையில் இருந்தபோதே அமமுகவை தொடங்கி, அதற்குப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்தார். ஆனால், தலைவர் பதவி மட்டும் காலியாக இருந்தது. தலைவர் பதவிக்கான பொறுப்பை துணைத் தலைவரே கவனித்து வந்தார். வி.கே.சசிகலாவுக்காக ‘தலைவர்’ பதவி காலியாக வைத்திருக்கப்பட்டுள்ளதாக அப்போது டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

ஆனால், கடந்த ஆண்டு நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமமுகவில் வி.கே. சசிகலா இனி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தினகரன் தரப்பில் அப்போதே கேட் போடப்பட்டது. எனினும், மறைமுகமாக சில பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், வி.கே. சசிகலாவுக்காக இத்தனை ஆண்டுகளாக ‘ரிசர்வ்’ செய்யப்பட்டிருந்த தலைவர் பதவி இன்று நிரப்பப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில், பொதுச் செயலாளர், தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கு இன்று பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமமுக தோற்றுவித்த பிறகு முதல் தலைவராக முன்னாள் எம்.பி கோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதல் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், துணைத்தலைவர் அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதியதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள்.

1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பியாக சி.கோபால் செயல்பட்டவர். அவர் அமமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுவில் அமமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி. கோபால் பற்றிப் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.

அவர் பேசுகையில், “கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோபாலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கத்துக்காக செயல்பட்டவர். கோபால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமியுடன் நட்பாகப் பழகியவர். அப்படி இருந்தும் அவர் எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்லவில்லை.

அவரை போலவே அவரது மகன் சோளிங்கர் பார்த்திபனும் என்னுடன் உள்ளார். அவர் தந்தை சொல்லைப் பின்பற்றக்கூடியவர். நான் கூட கேட்டேன்.. என்னால் பலன் அடைந்தவர்களே எனக்கு எதிராகச் சென்று விட்டார்கள். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களே என கேட்டுள்ளேன். இன்று நான் பொதுச் செயலாளராக தேர்வான சான்றிதழையே பார்த்திபன் தான் எனக்கு வழங்கியுள்ளார்.” என டிடிவி தினகரன் பேசினார்.

அமமுக’வின் 5-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் அமமுக கொடியேற்றம்

மறைந்த முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களில் (அதிமுக) விளைவாக அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே லட்சியம்’ என்கிற முழக்கத்தோடு டி.டி.வி தினகரன் அவர்கள் 2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்றோடு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

அமமுக’வின் 5-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அமமுக’வின் 5ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வாக திருப்பூர் புறநகர் மாவட்டம், தாராபுரம் நகரத்தில் கழக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்லத்துரை அவர்கள் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணை செயலாளர் தங்கநாயகி பெரியசாமி அவர்கள் முன்னிலை வகிக்க, வார்டு பொருப்பாளர் நாகராஜ் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி: அ.தி.மு.கவை மீட்பதே இலக்கு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் தி.மு.க. முறைகேடு செய்துள்ளது மடடுமின்றி ஜெயலலிதா மரணம் குறித்து பொய் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டதும் தி.மு.க. தான்.

கோடநாடு வழக்கு பற்றிய கேள்விக்கு – மடியில் கனம் இல்லை என்றால் பயப்பட வேண்டாம். எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக பலவீனமாக இருக்கிறார். மேலும் வி.கே. சசிகலா சட்ட ரீதியாக அ.தி.மு.க.வை மீட்கப் போராடுகிறார்; நான் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்று மீட்டெடுக்க போராடுகிறேன். வி.கே. சசிகலாவும் நானும் வெவ்வேறு வழியில் பயணித்தாலும் அதிமுக-வை மீட்பதே இருவரின் இலக்கு வி.கே. சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எழுச்சி அப்படியேதான் இருக்கிறது என தெரிவித்தார்.