பாஜக வேட்பாளர்கள் 11 கேள்விக்கு பதில் சொல்லிட்டு ஊருக்குள் வாங்க..!

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லியை நோக்கி முற்றுகை’ என்ற பெயரில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி போராட்டங்களை தொடங்கினர். ஆனால் டெல்லியின் எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது.

மத்திய அரசிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால் மேற்கண்ட மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க விவசாய அமைப்புகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. இதுகுறித்து அகில இந்திய கிசான் கூட்டமைப்பின் தலைவர் பிரேம் சிங் பாங்கு கூறுகையில், சண்டிகரில் அமைந்துள்ள கிசான் பவனில் விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்களிடம் கேட்க வேண்டிய 11 கேள்விகள் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது என்ன நடந்தது? என்பதற்கான நோட்டீசை பாஜக வேட்பாளர்களிடம் கொடுப்போம்.

டெல்லி செல்லும் சாலைகளை தோண்டி இரும்பு கம்பிகளால் அடைத்து வைத்தது ஏன்? விவசாயிகள் போராட்டத்தின் போது தடுப்புகள் போட்டு, தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியவர்கள் யார்? டெல்லிக்கு எங்களை செல்ல அனுமதிக்காதது ஏன்? நாங்கள் என்ன வெளிநாட்டவர்களா? வாக்குகளைப் பெறுவதற்கு மட்டும் எங்களை நாடுவது ஏன்? பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்கும் வகையில், மற்ற கட்சியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு மக்களை வலியுறுத்துவோம்.

டெல்லியில் விவசாயிகளை நுழையத் தடை விதித்தீர்கள்; நாங்கள் உங்களை கிராமங்களுக்குள் நுழைய தடை விதிக்கிறோம்’ என்று கூறினார். மேலும் 11 கேள்விகள் அடங்கிய பேனர்களையும், போஸ்டர்களையும் இரு மாநில விவசாயிகளின் கிராமங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் விவசாயிகளால் விரட்டப்பட்டு வருகிறார்கள் என தெரிய வருகிறது.