நயினார் நாகேந்திரன்: பாஜக – அதிமுக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி..!

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழக பாஜக பணிகளை கண்காணிப்பது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு செய்து ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருக்கிறது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார்.

விஜயதரணி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு வந்துள்ளார். ஆகையால் அவருக்கு பாஜக வில் ஏதாவது ஒரு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். கட்சியில் எனக்கும் பதவி இல்லை. அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்து விட்டு பாஜகவுக்கு வந்தேன். பின்னர் மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டமன்ற குழு தலைவராக மட்டும் இருக்கிறேன். அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

விசிலடித்த அதிமுக நிர்வாகிகள்…! உறுதியாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி..!

அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நேற்று இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன.

பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகிய பிறகு மு.க. ஸ்டாலினுக்கு தூக்கம் போய் விட்டது. சிறுபான்மை மக்களின் வாக்கு சிதறிவிடும் என்ற அச்சத்தில் புலம்பி மு.க. ஸ்டாலின் வருகிறார். பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார் . பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிச்சாமி கூறியவுடன் கூட்ட அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் பலரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். சிலர் விசிலடித்தும் உற்சாக மிகுதியில் நடனமாடினர்.