6 போலியான நிறுவனங்கள்: ரூ.6.50 கோடி மோசடி வழக்கில் கணவருடன் பாஜக பெண் நிர்வாகி ஓட்டம்

ஈரோடு அடுத்துள்ள திண்டல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், இவரது மனைவி சண்முகவடிவு. ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பிரசார மகளிர் அமைப்பாளராக உள்ளார். கணவன், மனைவி இருவரும் இரும்பு வியாபாரம் செய்வதுபோல 6 போலியான நிறுவனங்களை தொடங்கி அதற்கான ஜிஎஸ்டி எண் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளனர். இந்நிலையில் குறைந்த விலைக்கு கம்பி உள்ளிட்ட இரும்பு பொருட்களை விற்பதாகவும் விளம்பரம் செய்துள்ளனர்.

இதற்காக, சென்னை, சேலம், கோயம்புத்தூர், கர்நாடகா, புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் நிறுவனங்களிடம் இருந்து இரும்பு பொருட்களை கொள்முதல் செய்துள்ளனர். ஒரு சிலரிடம் பொருட்களை விற்பனை செய்வதற்காக முன்பணமும் பெற்றுள்ளனர். இந்நிலையில், கம்பி உள்ளிட்ட இரும்பு பொருட்கள் வழங்கிய நிறுவனங்களுக்கு உரிய தொகை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். சண்முகவடிவு தரப்பினர் கொடுத்த காசோலைகளும் வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று திரும்பின.

இதையடுத்து இரும்பு கம்பிகள் விநியோகம் செய்த நிறுவனத்தினர் இது குறித்து நேரில் பல முறை கேட்டும் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. ஆட்களை வைத்து இருவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டி கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகினர்.

இதனால், ஏமாற்றமடைந்த 9 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து சண்முகவடிவு மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவர் மீதும் ஈரோடு எஸ்பியிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அதில், தங்களிடம் பொருட்களை பெற்றுக்கொண்டு ரூ.6.50 கோடி தொகையை வழங்காமல் கணவன், மனைவி இருவரும் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.