பெரியாரின் சீடராக இருந்து பெரியாரின் தளபதியாக மாறிய அண்ணா “திராவிட முனேற்ற கழகம்” என்ற தனி கட்சி தொடங்கி பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார். அண்ணா ஆட்சிக்கு வந்த உடன், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.
தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது.
சி.என்.அண்ணாதுரை என்ற பெயர் பின்னாளில் சி.என்.எ என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணா. 1967-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், அப்பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது தியாகத்தையும், பணிகளையும் நினைவுகூரும் விதமாக அவரது நினைவு தினத்தன்று ஆண்டு தோறும் சென்னையில் திமுக அமைதி பேரணியை நடத்தி வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.