மு.க. ஸ்டாலின்: தமிழ்நாட்டுக்கு ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி வராரு..! யாரு மோடி…!

வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், முதல் விடுதலை போர் தொடங்கிய வேலூருக்கு வந்துள்ளேன். ஜனநாயகத்தை காக்க இரண்டாம் விடுதலை போராட்டத்துக்கு வந்துள்ளேன்.

தமிழ்நாட்டுக்கு ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி வராரு..! யாரு மோடி…! பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தேர்தலுக்காக வருகிறார். வெள்ளம் வந்தால் வரமாட்டார். நிதி கேட்டால் தரமாட்டார். சிறப்பு திட்டம் கேட்டால் கொடுக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ‘பார்ட் டைம்’ அரசியல்வாதியை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் தமிழ்நாடு பக்கம் அவர் வரமாட்டார்.

அதிமுக அதிகாரத்தில் இருந்தபோது சிறுபான்மையினர்களின் முதுகில் குத்தியது. இப்போது பாஜகவுடன் கள்ளக்கூட்டணி அமைத்து சிறுபான்மையினர் மீது அக்கறை காட்டுவதுபோல் பழனிசாமி நாடகம் ஆடுகிறார். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும். பழைய சம்பவங்கள், பொய்யான கதைகள் சொல்லி அதன் மூலம் மக்களை குழப்பி தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா என முயற்சி செய்கிறார். அதற்குத்தான் இப்போது கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார். இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை இப்போது பேசுகிறார்கள்.

இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன் கூட்டில் கை வைத்ததுபோல் பாஜக முழிக்கிறது. கடந்த 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜக உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்பதாக சொல்லவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ முறை இலங்கைக்கு பயணம் செய்த மோடி ஒருமுறையாவது கச்சத்தீவை திரும்ப கேட்டாரா? இலங்கை அதிபரை சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்று சொல்லவில்லையே. அப்போதெல்லாம் மோடிக்கு கச்சத்தீவு ஞாபகம் இல்லை.

நேரு, இந்திரா காந்தி காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘‘ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தரவேண்டும், நீட் விலக்கு அளிக்க வேண்டும்’’ என பல கோரிக்கைகளை வைத்தேன். அதில் முதல் கோரிக்கையாக, ‘‘கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கை மனுவைக்கூட படித்தீர்களா?

ஆர்டிஐ விண்ணப்பம் போட்ட நான்கு நாளில் எப்படி பதில் வருகிறது. இரண்டாவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 2015-ல் துறை செயலராக இருந்தபோது கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இல்லை என்று தகவல் கொடுத்தார். இப்போது, தேர்தல் வருவதால் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தகவலை மாற்றி கொடுக்கிறார். மூன்றாவதாக கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது உரிய பதில் அளிக்கவில்லை.

எத்தனையோ பேர் ஆர்டிஐ விண்ணப்பம் அளித்தபோது தெளிவான பதில் கொடுக்கவில்லை. உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதாக பதில் சொன்ன பாஜக அரசு, ஆர்டிஐ மூலம் எப்படி தவறான தகவல் தந்தார்கள்? பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு வெளியுறவுத் துறை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கொடுத்துள்ளனர். நான்காவதாக கச்சத்தீவுக்காக திடீர் கண்ணீர் வடிக்கும் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு நடந்தபோது இலங்கையை கண்டித்தாரா.

சீனா குறித்து மோடி வாய் திறந்தாரா? அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடி 30-க்கும் மேற்பட்ட இடங்ளுக்கு சீன மொழியில் பெயர்கள் வெளியிட்டுள்ளனர். அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள். இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லாத நிலையில், கச்சத்தீவு பற்றி பேசலாமா? இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘இந்தியா மட்டுமல்ல கனடாவிலும் காலை உணவு திட்டம் தொடங்கியிருப்பதை பார்த்தேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் வாக்குறுதி தராவிட்டாலும் இத்திட்டத்துக்கு கையெழுத்திட்டேன். இன்று தமிழகம் முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவை வயிறார சாப்பிடுகின்றனர். 1.16 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். இது ஸ்டாலின் தரும் தாய்வீட்டு சீதனம் என்கின்றனர். இதுதவிர, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வா.. எப்ப வேண்டாலும் வா.. ! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக வேலூர், திருவண்ண்ணாமலை என சுற்றுப்பயணம் செய்து வந்த அவர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் மத்திய அரசையும், அமலாக்கத் துறையையும் கடுமையாக சாடினார்.

தனது வீட்டுக்கு அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தாம் தொடர்ச்சியாக வெளியூர் டூரில் இருப்பதால் சொல்லிவிட்டு வாருங்கள் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கலாய்த்தார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கிளைச் செயலாளரை கூட அமலாக்கத்துறையால் எதுவும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். ”வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்” எனக் கூறி அமலாக்கத்துறைக்கு ஒபன் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தினார். அதிமுகவை வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என விசாரணை அமைப்புகளை காட்டி பயமுறுத்தலாம் என்றும் திமுகவிடம் உங்கள் பம்மாத்து வேலை நடக்காது எனவும் எதிர்த்து பேசியிருக்கிறார்.

பொதுவாக மேடைகளில் பேசும் போதும் சிரித்தவாறு மிகவும் கூலாக பேசக்கூடிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் இன்று அனல் கக்கியிருக்கிறார். வா.. எப்ப வேண்டாலும் வா.. ஓபன் சேலஞ்ச் விடுத்திருக்கிறார். இதன் மூலம் சமரசமின்றி பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருப்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்த்தியுள்ளார்.

திறப்பு விழா கண்ட நாளிலேயே கடைக்கு சீல் வைப்பு..!

வேலூர், காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ் நிலையம் அருகே ‘தம்பி பிரியாணி’ என்ற பெயரில், புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி, கடையில் ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம். ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் இன்னொரு சிக்கன் பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டது.

இதனால், பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக கடைக்குள் முண்டியடித்து குவிந்தனர். வரிசை, சாலை வரை நீண்டிருந்ததால், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மக்கள் வெயிலில் அவதிப்படுவதையும், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கவனித்தார். இதையடுத்து, தனது காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி வந்தார்.

பிரியாணி கடை மேலாளரை அழைத்து, ‘‘பிச்சையா போடுறீங்க… எல்லோரையும் மரியாதையாக உட்கார வைக்க முடியாதா..? எத்தனைப் பேர் நிற்கிறாங்க, பாவம்! எல்லோரையும் போகச் சொல்லுங்க. கடையை மூடுங்க’’ என்று அறிவுறுத்தினார். அப்போதும் கூட்டம் கலையாததால், காவல்துறை மூலம் கூட்டம் கலைக்கப்பட்டு, பிரியாணி கடை இழுத்து மூடப்பட்டது.

அப்போது, ‛‛ஏன் இப்படி வைத்துள்ளீர்கள். பிச்சை போடுறீங்களா?. கடையை மூடுங்க.. வாடிக்கையாளர்களை உட்கார வைக்க முடியாதா? உங்களை நம்பி எத்தனை பேர் வெயிலில் காத்து கிடக்கின்றனர்” என கடிந்து கொண்டார். இதையடுத்து கூட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறை கடையை மூட முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் பிரியாணி தான் முக்கியம் என கடைக்குள் வேகவேகமாக நுழைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பொதுமக்களை காவல்துறை அப்புறப்படுத்திவிட்டு கடையை பூட்டினர். மேலும் சம்பவம் குறித்து மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த கடை உரிமமின்றி திறக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன்மூலம் திறப்பு விழா கண்ட நாளிலேயே பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.