மசூதி எரிப்பு.. கலவர பூமியான ஹரியானா..!

பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள நுஹ் என்ற பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் ஊர்வலம் சென்றனர். அப்போது ஏற்பட்ட மத வன்முறையில், வாகனங்கள், கடைகள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சாலையோரம் இருந்த கடைகளும் அடித்து தகர்க்கப்பட்டன.

இதில் 3 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து குருகிராம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள்.

சமூக வலைதளங்களின் மூலமாக வெறுப்பு கருத்துக்கள் பகிரப்படுவதை தவிர்க்க இணையதளம் முடக்கப்பட்டு உள்ளது. நுஹ் பகுதிக்குள் வெளிநபர்கள் நுழையாத வகையில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது புதிதாக வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காவல் ஆணையர் கலா ராமச்சந்திரன் கூறுகையில், “குருகிராம் பகுதியில் உள்ள ஜமா மசூதியை இரவு 80 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து எரித்து, பள்ளிவாசல் இமாமை கொடூரமாக கொலை செய்து இருக்கிறது, மற்றொருவர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாலை 12.10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இரவு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சிலரை சுற்றி வளைத்தோம். வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.” என தெரிவித்தார்.