சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.
சென்னை மெரினாவில் நேற்று இந்திய விமானப் படையின் 92 -ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்திய விமானப்படை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.
விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய வான்படையினர் பாராஷூட், ஹெலிகாப்டர், இலகு ரக விமானம், போர் விமானம் என இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்களில் சாகசங்களை செய்து காண்பித்து மெரினாவில் கூடியவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
சென்னையில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிட வர வேண்டும் என விமானப் படை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து விமானப்படையின் விருப்பதை பூர்த்தி செய்து, சாகச நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.