கனிமொழி வேண்டுகோள்: சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்..!

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மக்கள் கூட்டத்தை கண்காணிக்க தமிழக காவல் துறை தவறியதாக அதிமுகவும், பாஜகவும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மெரினாவில் விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சிகள்..!

சென்னை மெரினாவில் இன்று இந்திய விமானப் படையின் 92 -ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய விமானப்படை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.

விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய வான்படையினர் பாராஷூட், ஹெலிகாப்டர், இலகு ரக விமானம், போர் விமானம் என இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்களில் சாகசங்களை செய்து காண்பித்து மெரினாவில் கூடியவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

சென்னையில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிட வர வேண்டும் என விமானப் படை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்து விமானப்படையின் விருப்பதை பூர்த்தி செய்து, சாகச நிகழ்ச்சியை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளனர்.

இந்த வான் சாகச நிகழ்ச்சி பொதுவாக டெல்லியில் மட்டுமே நடைபெறுவது வழக்கம். டெல்லிக்கு வெளியே சண்டிகரில் 2022-ஆம் ஆண்டும், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஆண்டும் நடைபெற்றன. மூன்றாவது ஆண்டாக சென்னையில் தற்போது நடைபெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.