மாயமான 6 பேர் கொலை..! மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது..!

மாயமான 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களின் கொலைக்கு நீதி கேட்டு 2 பாஜக அமைச்சர்கள், 3 MLA க்கள் வீடுகள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் நீடிக்கும் இனக்கலவரத்தின் ஒருபகுதியாக கடந்த 11-ஆம் தேதி ஜிரிபாம் மாவட்டம் போராபெக்ராவின் ஜகுராதோர் கராங் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கடைகளை தீ வைத்து எரித்ததுடன், அங்கிருந்த CRPF வீரர்கள் முகாம் உள்பட சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

அப்போது CRPF வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தீவிரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகள், 3 பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றதுடன், மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 2 ஆண்களையும் தீ வைத்து எரித்து கொன்றனர். இதனால் ஜிரிபாம் மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வந்தது. மாயமான 6 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை போராபெக்ரா மாவட்டத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் மணிப்பூர் – அசாம் எல்லையில் ஜிரி நதி – பக்ரா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டன. அதே பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேரின் உடல்கள் உடல் கூராய்வுக்காக அசாமின் சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தகவல் பரவியதால் இம்பால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். மேற்கு இம்பாலின் குவாகீதெல், சகோல்பந்த் தேரா உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை தடுத்தனர். இதன் காரணமாக நேற்று அங்குள்ள வணிக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

மேலும் 6 பேரின் மரணத்துக்கு நீதி கேட்டு மணிப்பூர் பாஜக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் 6 பேரின் கொலைக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்” என முழக்கமிட்டனர்.

பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை..!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ‘பெண் மருத்துவர் மரணத்துக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சிம் பங்கா சத்ரா சமாஜ் என்ற மாணவர் அமைப்பு கொல்கத்தாவில் நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள், தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் கட்டிடத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால், ஹவுராவில் உள்ள நபன்னா கட்டிடத்தில் தலைமைச் செயலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால், நபன்னாவை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர். முன்னெச்சரிக்கையாக, கொல்கத்தாவில் இருந்து ஹவுரா செல்லும் சாலைகளில் 21 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு 6,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஹவுரா பாலம் முழுமையாக மூடப்பட்டு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி காவல் துறை மேற்கொண்டது.

இந்நிலையில், பேரணி சென்ற மாணவர்கள், ஹவுரா பாலத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து முன்னேற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, கூட்டத்தில் இருந்த சிலர் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காவல்துறை தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியும் கூட்டம் கலையாத காரணத்தால கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த சூழலில், தலைமைச் செயலகத்தின் வடக்கு நுழைவுவாயில் பகுதியில் திடீரென மாணவர்கள் திரண்டு, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை காவல்துறை தடியடி நடத்தி விரட்டினர். கொல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே 3 மணி நேரத்துக்கும் மேலாக மோதல் நீடித்தது. இதில் 100 மாணவர்களும், 15 காவல்துறையினர் காயமடைந்தனர். இரு தரப்பு மோதல் காரணமாக, கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக காணப்பட்டது.

சி.எஸ்.ஐ. சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து எதிர்ப்பு

நாடு முழுவதும் நடைபெறும் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து சி.எஸ்.ஐ. சார்பில் ஒவ்வொரு வியாழக்கிழமையையும் கருப்பு வியாழனாக அனுசரித்து வருகின்றனர். இதில் வியாழன்தோறும் தென்னிந்திய திருச்சபையின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களது எதிர்ப்புகளை பல்வேறு விதமாக பதிவு செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தலைமை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக சி.எஸ்.ஐ.யின் சமூக செயல்பாட்டு பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.எஸ்.ஐ.யை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.