வானிலை ஆய்வு மையம் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை, இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த 3 நாட்களில் விலகக்கூடும்.
16, 17-ம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும். அடுத்த 2 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இது மட்டுமல்லாது தமிழக பகுதிகளின் மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். அதனால் மேற்கூறிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
17-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.