நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மறுபக்கம் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். அதேபோல், வருமான வரித்துறையும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சேலம் பாஜக மாநகர மாவட்ட தலைவராக இருந்து வரும் சுரேஷ்பாபு வீட்டில் கடந்த 9 -ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு பணம் வழங்க வைத்திருப்பதாக ரகசிய தகவல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் இந்த சோதனையில் எந்த ஒரு பணமும் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. அந்த பகுதியில் பாதுகாப்பிற்கு வந்திருந்த சூரமங்கலம் உதவி கமிஷனர் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு வீட்டை சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்ட நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்நிலையில் காவல்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி கூடுதல் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவுகளில் சேலம் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, மாநகர மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், ஓ பி சி அணி மாவட்ட தலைவர் கோபிநாத் உட்பட 10 பேர் மீது சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.