இடைப்பாடியில் பதுங்கியிருந்த கூட்டுறவு வங்கி அதிமுக மாஜி பெண் தலைவர் கைது..!

சேலம் மாவட்டம், இடைப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 3 ஆண்டுக்கு முன் அதிமுக ஆட்சி காலத்தில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. அப்போது, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த சத்தியபானு, துணைத்தலைவர் வடிவேல், செயலாளராக இருந்த மோகன், உதவி செயலாளர் மணி, நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார், வட்டார ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலாராணி, ரத்தினம், பெரியண்ணன் உள்ளிட்ட 13 பேர் ரூ.2.93 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வங்கியின் செயலாளர் மோகன், உதவி செயலாளர் மணி ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்தனர். இந்த மோசடி குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு சங்ககிரி துணைப்பதிவாளர் முத்துவிஜயா புகார் அளித்தார். இதையடுத்து சத்தியபானு, வடிவேல், மோகன், மணி உள்ளிட்ட 13 பேர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். அதிமுகவை சேர்ந்த மாஜி கூட்டுறவு வங்கி தலைவர் சத்தியபானு, துணைத்தலைவர் வடிவேல், நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார், உறுப்பினர்கள் ரத்தினம், கலாராணி, பெரியண்ணன் உள்ளிட்ட 10 பேர் தலைமறைவாகிய நிலையில், மோகன், ஆனந்தகுமார், மணி ஆகியோரை கடந்த ஜூலை 9-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், எடப்பாடி வட்டம் வெள்ளரிவெள்ளியில் பதுங்கியிருந்த அதிமுக மாஜி கூட்டுறவு வங்கி பெண் தலைவர் சத்தியபானு, துணைத்தலைவர் வடிவேல் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரூ. 25 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகி நண்பனுடன் கைது

செங்கல்பட்டு மாவட்டம், சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்த சுகுமாரன். இவரது நண்பரும் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக ஓபிசி பொது செயலாளருமான ஜானகிராமன் என்பவர் ஸ்ரீ பெரும்புதூர் அருகே காட்ராம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் அடுத்த வானகரம், பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த வானகரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் வினோத்குமாருக்கு சுகுமாரனும், ஜானகிராமனும் அறிமுகமாகினர்.

அப்போது, இருங்காட்டுகோட்டை பகுதியில் இயங்கி வரும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து குறைந்த விலைக்கு பழைய இரும்பு பொருட்கள் வாங்கி தருவதாக வினோத்குமாருக்கு சுகுமாரும் ஜானகிராமனும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை வினோத்குமார் நம்பி, இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, வினோத்குமாரிடம் இருந்து ரூ.25 லட்சம் இருவரும் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி, தனியார் தொழிற்சாலைகளில் இருந்து குறைந்த விலைக்கு பழைய இரும்பு பொருட்கள் வினோத்குமாருக்கு வாங்கி கொடுக்கவில்லை.

ஆகையால் வினோத்குமார் கொடுத்த பணத்தை, திரும்ப கேட்டுள்ளார். ஆனால் இருவரும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினர். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் கொடுத்துள்ளார். மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி ஜானகிராமன், அவரது நண்பர் சுகுமார் ஆகியோரை கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டு மோசடி பாஜக முன்னாள் பிரமுகர் கைது..!

சென்னை விருகம்பாக்கத்தில் பவானி என்பவருக்கு சொந்தமான 1,200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. நிறுவனம் நடத்துவதாக கூறி முதியவர் பவானி வீட்டை பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன் வாடகைக்கு எடுத்துள்ளார். 6 மாதத்துக்கு பின் வாடகையை சரியாக தராததால் முதியவர் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்துள்ளார். நேரில் சென்று பார்த்ததில் சிவா அரவிந்தன், 2 பேருக்கு தலா ரூ.8 லட்சத்துக்கு பவானி வீட்டை குத்தகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது.

மோசடி குறித்து முதியவர் பவானி அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்து காவல்துறை விசாரித்தனர். மோசடியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தன், பலமுறை கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். முதியவர் பவானி அளித்த புகாரின் பேரில் பாஜக முன்னாள் பிரமுகர் சிவா அரவிந்தனை காவல்துறை மீண்டும் கைது செய்தது. முதியவர்களை குறிவைத்து அவர்களின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடர்ந்து மோசடி செய்த பாஜக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக ரூ.7 லட்சம் நூதன மோசடி

நாடு முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் பலர் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களை குறி வைத்து அரசின் கல்வி உதவித்தொகை பிரிவில் இருந்து பேசுவதாக கூறி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றியது.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர் விவரங்களை ஆன்லைன் மூலமாக சேகரித்த கும்பல், அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகன் மற்றும் மகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி, அந்த கும்பல் வாட்ஸ் அப் ப்ரோபைலில் தமிழ்நாடு அரசின் லோகோவை வைத்துள்ளனர். தொடர்ந்து வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனை உண்மை என நம்பி கியூஆர் கோடை அழுத்தியவுடன் அவர்கள் வங்கிக்கணக்கில் உள்ள மொத்த பணமும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதேபோல், கோயம்புத்தூரில் 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளது. அந்த கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள், கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் ஆய்வாளர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த மோசடியில் நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட், லாரன்ஸ்ராஜ், மாணிக்கம், சகாயராஜ், எட்வின் மற்றும் ஜேம்ஸ் ஆகிய 5 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே அவர்கள் 5 பேரும் கைது செய்து, இந்த கும்பலிடம் இருந்து 44 செல்போன்கள், 22 சிம்கார்டுகள், 7 ஏ.டி.எம். கார்டுகள், 1 காசோலை, 7 வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் இதில் வங்கி கணக்குகள் மற்றும் சிம்கார்டு ஆகியவற்றை டெல்லி முகவரியில் வாங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தமிழகம் முழுவதும் 500 பேரிடம் நூதன முறையில் பண மோசடி செய்து இருக்கலாம் என பது தெரிய வருகிறது.