போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் நிலமோசடி.!

திருநெல்வேலி, தென்காசியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்களை மோசடி வழக்கில் 13 பேரை தேடி வரும் 3 பேரை காவல்துறை கைது செய்தனர்.

திருநெல்வேலி, ஆலங்குளத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதன் தலைமையிடம் சென்னையில் செயல்படுகிறது.

அந்த நிறுவனத்தின் தென்காசி மண்டல மாவட்ட மேலாளராக சண்முக சுந்தரம் பணியாற்றி வருகிறார். இவர் தென்காசி காவல் ஆணையாளர் சீனிவாசனிடம் புகார் மனு ஒன்று தந்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “பாவூர்சத்திரம் சந்தோஷ்நகரைச் சேர்ந்த சேர்மத்துரை. இவர் அதே நிறுவனத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை தென்காசி மாவட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

எங்களது நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்கள் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ளன. இவற்றில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டியில் உள்ள நிலத்தை நிறுவனத்தின் இயக்குநர்களின் கையெழுத்தை மோசடியாக போட்டு, நிறுவனத்தின் முத்திரைகளை மோசடியாக பயன்படுத்தி போலி ஆவணம் தயாரித்து சேர்மத்துரை, சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு 5 ஏக்கரும், திருவள்ளூர் மாவட்டம் பூம்புகார் நகரைச் சேர்ந்த செல்வராகவன் என்பவருக்கு 6 ஏக்கரும் விற்பனை செய்துள்ளார்.

மேலும் கடையம் பெரும்பத்து கிராமத்தில் நிறுவனத்திற்குச் சொந்தமான 94 ஏக்கர் நிலத்தில் 22.25 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சேர்மத்துரை தனது சகோதரர் ராமசாமி என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த நிலத்தை ராமசாமி சேர்மத்துரையின் இரண்டு மனைவிகளான ரெபேக்காள், செல்வி மற்றும் சேர்மத்துரையின் மகள் ஹெப்சிராணி ஆகியோருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த மோசடிக்கு சேர்மத்துரையின் மற்றொரு சகோதரர் சக்தி கண்ணன் மற்றும் சார்லஸ், முத்துக்குமார், ஜோசப் பால்ராஜ், மதுரை வழக்கறிஞர் சிங்கார வடிவேல், அருள் செல்வன், அமிர்தராஜ், அமல்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

மோசடி செய்யப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும். இந்த மோசடி குறித்து தெரிய வந்த தனியார் நிறுவனம் சேர்மத்துரையை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. மேலும் சேர்மத்துரை நிலத்தை மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு திரும்ப நிலத்தை நிறுவனத்திற்கு ஒப்படைத்து விடுவதாகவும், நிறுவனத்திற்கு தர வேண்டியதாக ரூ.66.05 லட்சத்திற்கு கடன் உறுதிமொழியும் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அதன்படி சேர்மத்துரை கொடுக்கவில்லை. இதன் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சேர்மத்துரை உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், சேர்மத்துரை, ஜோசப் பால்ராஜ், முத்துக்குமார் ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 13 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.

யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்கம் என்ற போர்வையில் பல வித்தைகளை காட்டி பணம் சுருட்டிய 2 ஆசாமிகள் கைது..!

பத்திரிகையாளர் சங்கம் என்ற போர்வையில் பள்ளி, கல்லூரிகளுக்கான போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தும் எல்எல்பி பட்டம் வாங்கி கொடுத்தும் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட டு 2 பேரை கைது செய்தனர்.

வடசென்னை பகுதியில் பெரும்பாலான வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு சென்றவர்களை காவல்துறை பிடித்து விசாரித்தபோது அவர்கள் போலி பத்திரிகையாளர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நுண்ணறிவு பிரிவு காவல்துறை வடசென்னையில் செயல்பட்டு வரும் பத்திரிகையாளர் சங்கங்கள், மாத பத்திரிகைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், வில்லிவாக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சங்கத்தில் எந்த சான்றிதழ் கேட்டாலும் தயார் செய்து கொடுப்பதாகவும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து வசூல் செய்வதாகவும் ராஜமங்கலம் காவல்துறைக்கு தெரியவந்தது. மேலும் வழக்கறிஞர் என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து நடப்பதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து ஆய்வாளர் மூர்த்தி தலைமையிலான காவல்துறையினர், 13-வது நீதிமன்ற நடுவர் தர்மபிரபுவுக்கு தகவல் தெரிவித்ததுடன் அவரது அனுமதி பெற்று வில்லிவாக்கம் பாலாம்பிகை நகர் பகுதியில் உள்ள யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பள்ளி, கல்லூரிகள் வழங்கும் சான்றிதழ்கள் போலியாக அச்சடித்து கொடுத்ததற்கான ஆவணங்கள், பல்வேறு இடத்திற்கான ஆவணங்கள் மற்றும் ஆந்திராவில் எல்எல்பி படிப்பிற்கான ஆவணங்கள் என்று போலி ஆவணங்கள் ஏராளமான இருந்தன. அங்கிருந்து லேப்டாப், இரண்டு செல்போன்கள், பென்டிரைவ், டிவிஆர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்கத்தை நடத்திவந்த விநாயகபுரம் பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த், பொருளாளராக செயல்பட்ட ஆவடி மெஜஸ்டிக் நகர் பகுதியை சேர்ந்த ரூபன் ஜெர்மையா ஆகியோரை கைது செய்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் போலி ஆவணங்களை தயாரித்து வில்லிவாக்கம், பெரம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எங்கெங்கு காலி பணியிடங்கள் உள்ளதோ அதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிந்துகொண்டு குறிப்பிட்ட அந்த வேலைகளுக்கு வேலை வாங்கி தருவதாக போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளனர். 10, 12-ஆம் வகுப்பு சான்றிதழ்கள் மற்றும் ஆந்திராவில் எல்எல்பி படிப்பு முடித்தது போன்ற சான்றிதழ் என பல்வேறு சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்துள்ளனர். பெரிய பல்கலைக்கழகங்களின் லோகோ முத்திரைகளை பயன்படுத்தி பி.எச்.டி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.

இதில், ரூபன் ஜெர்மையா தன்னை வழக்கறிஞர் என்று பொய் கூறியுள்ளார். விஜய் ஆனந்த் எல்எல்பி படித்து முடித்து விட்டதாக ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது. யுனிவர்செல் பத்திரிகை ஊடக சங்க பெயரை வைத்து மாதந்தோறும் மாத பத்திரிக்கை ஒன்று நடத்தி ஏராளமானவர்களை பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் எனக்கூறி பிரஸ் என்ற அடையாள அட்டையை கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதற்காக இவர்கள் 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். போலி சான்றிதழ்கள் கேட்டு வரும் நபர்களிடம் 10 ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர். இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த காவலர் மற்றும் பெண் கைது ..!

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சசிகுமார் என்பவர், திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதன் புகார் மனுவில், தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் இவருக்கும், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் கூடாநட்பு ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு திருநெல்வேலியில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து, தங்க வைத்திருந்தார்.

இந்நிலையில், வளர்மதியை மாவட்ட வருவாய் அலுவலர் என்று பலரிடம் அறிமுகப்படுத்தி, புறம்போக்கு நிலத்துக்கு பட்டா பெற்றுத் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, தலைமைக் காவலர் முருகராஜும், வளர்மதியும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும் , சசிகுமார் திருநெல்வேலி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்துக்கு பட்டா மாறுதல் வாங்கித் தருமாறு இவர்களை அணுகியுள்ளார். இதற்காக வளர்மதியிடம் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பட்டா மாறுதல் செய்து கொடுக்கவில்லை.

இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சசிகுமார் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இதில், வளர்மதி, முருகராஜ் ஆகியோர் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அட்டை கம்பெனியை பார்த்துக் கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ₹4 கோடி மோசடி..!

ஆவடி, காவல்சேரி கிராமத்தில் அட்டை கம்பெனியை பார்த்துக்கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ₹4 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது.

கோயம்புத்தூர் விளாங்குறிச்சி சேரன் மாநகர பகுதியை சேர்ந்த தனிஷ் சேவியர் ஆனந்தன், ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் கடந்த 26-ஆம் தேதி ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், ஆவடி, காவல்சேரி கிராமத்தில் சொந்தமாக அட்டை கம்பெனி ஒன்றை மனைவி பெயரில் நடத்தினேன்.

அப்போது சென்னை நொளம்பூரைச் சேர்ந்த நண்பர் முத்துராஜ் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாக கூறியதால் கம்பெனியை பார்த்துக் கொள்ளுமாறு 2021 அக்டோபர் மாதம் அவரிடம் கூறினேன். முத்துராஜ் கம்பெனியை பார்த்துக்கொண்டு, மின்சார கட்டணம் மற்றும் சம்பளம் போக லாபத்தில் பாதி தருவதாக வாக்குறுதி அளித்தார். அவர் மீதான நம்பிக்கையில் அக்ரிமெண்ட் பத்திரம் போடாமல் சம்மதம் தெரிவித்தேன்.

அதன்படி முத்துராஜ் 2022 முதல் மாதந்தோறும் ₹25,000 கொடுத்து வந்தார். ஆனால், நான் வாங்கி வைத்திருந்த இயந்திரங்களை பயன்படுத்தி முத்துராஜ் அவரது மனைவி முத்துலட்சுமி பெயரில் அதே இடத்தில் புதிதாக கம்பெனியை ஆரம்பித்து நடத்தினார். பிறகு முத்துலட்சுமியின் நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து கம்பெனிக்கு போலியாக வாடகை ஒப்பந்த பத்திரம், வாடகை ரசீது, தடையில்லா சான்று மற்றும் இயந்திரம் வாங்கியதாக போலி பில் போன்ற ஆவணங்களை உருவாக்கி, எனது கையெழுத்தையும் போலியாக போட்டு ஆவணம் தயார் செய்துள்ளனர்.

நவம்பர் 2021-ல் பூந்தமல்லி சரகத்தில் முத்துலட்சுமி பெயரில் ஜிஎஸ்டி பில் பெற்று, கோயம்பேடு ஸ்டேட் பேங்க் வங்கி கிளையில் மார்ச் 2022-ல் லோன் வாங்கியுள்ளனர். எனக்கு சொந்தமான இயந்திரங்களை வைத்து திருவள்ளூரில் மாவட்ட அலுவலகத்தில் அரசு மானியம் பெற்றுள்ளனர். நான் 2023-ம் ஆண்டு வரவு செலவு கணக்கை பார்க்கச் சென்ற சமயம் எனக்கு தரவேண்டிய கம்பெனி வருமானத்தை தராமல் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. என்னிடம் மொத்தம் ₹4 கோடி மோசடி செய்துள்ளனர் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் காவல் துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த சென்னை நொளம்பூர் ஐஸ்வர்யம் அபார்ட்மெண்ட்டை சேர்ந்த முத்துராஜ், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் மதுரவாயல் ரெசிடென்சி அபார்ட்மெண்ட்டை சேர்ந்த கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சிட் பண்ட் நடத்தி பொதுமக்கள் பணம் ₹4½ கோடி ஆட்டைய போட்டதாக புகார்..!

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரை சேர்ந்த இரண்டு பேர் சிட் பண்ட் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தொழில் செய்ய மூலதனமாக எங்கள் பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் பணம் பெற்று அந்த பணத்திற்கு வட்டியும் தருவதாக கூறினார்கள். ஆனால் கடந்த இரண்டு வருட காலமாக வட்டியும், அசலும் கொடுக்கவில்லை.

இது குறித்து நாங்கள் அவர்களிடம் சென்று கேட்டால் எங்களை மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். அவர்கள் எங்களிடம் சுமார் ரூ.4 ½ கோடிக்கு மேல் பணத்தை வாங்கி ஏமாற்றி உள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் பணத்தை அவர்களிடம் இருந்து திரும்பி பெற்று தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ என கூறி தமிழ்நாடு, கேரளாவில் பல கோடி மோசடி செய்த முக்கிய குற்றவாளி டெல்லியில் கைது..!

சிபிஐ என கூறி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மிரட்டி பல கோடி மோசடி செய்த சம்பவத்தில் முக்கிய நபரை எர்ணாகுளம் காவல்துறை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

சமீப காலமாக ஆன்லைன் மூலம் மோசடி நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாட்ஸ் அப் வீடியோ காலில் பலரை அழைத்து சிபிஐ அதிகாரி என்று கூறி மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். வீடியோ காலில் அழைத்து, அவர்களுக்கு வந்த ஒரு பார்சலில் போதைப் பொருள் இருப்பதாகவும், அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விர்ச்சுவல் கைது செய்துள்ளதாகவும் உடனடியாக தாங்கள் கூறும் பணத்தை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இவர்கள் மிரட்டி ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்து வருகின்றனர்.

கேரளாவில் திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இதுபோல கடந்த 3 மாதங்களில் மட்டும் 30 கோடிக்கு மேல் இந்த கும்பல் மோசடி செய்துள்ளது. இந்நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் இந்தக் கும்பலிடம் சமீபத்தில் 30 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து ஏமாந்தார். இது தொடர்பாக எர்ணாகுளம் மத்திய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் மோசடிக் கும்பலைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து எர்ணாகுளம் தனிப்படை காவல்துறை டெல்லி விரைந்து சென்று நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரின்ஸ் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்தான் முக்கிய நபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து மோசடிக் கும்பலுக்கு கொடுத்து வந்தார்.

வங்கிகளில் பெருமளவு பணம் வைத்திருக்கும் நபர்களின் கணக்கு விவரங்களை சேகரித்து அந்தக் கும்பலுக்கு இவர் அனுப்பி வைப்பார். பெரும்பாலும் வயதானவர்களைத் தான் இந்தக் கும்பல் குறிவைக்கும். மோசடிக் கும்பலின் வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை இவர் கிரிப்டோ கரன்சியாக மாற்றி அந்தக் கும்பலுக்கு கொடுப்பார்.

இதன் மூலம் பிரின்ஸ் பிரகாஷுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்து வந்துள்ளது. இதுவரை இவருக்கு இந்த மோசடி மூலம் பல கோடி பணம் கிடைத்துள்ளது. இவர் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இதுபோல மோசடி நடத்தியுள்ளார் என காவல்துறை தெரிவிக்கின்றனர்.

சுங்கத்துறை அதிகாரி என மிரட்டி மருத்துவரிடம் ரூ.26 லட்சம் மோசடி..!

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பை கன்சோலியில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் தான் சுங்கத்துறை அதிகாரி என கூறி, நீங்கள் துபாய்க்கு அனுப்பிய பார்சலில் ஆட்சேபத்துக்குரிய போதைப் பொருட்கள் மற்றும் காவலர் சீருடைகள் இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், அந்தேரி பகுதி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்ய இருப்பதாகவும், பணமோசடி மற்றும் தீவிரவாதிகளுடன் மருத்துவருக்கு தொடர்பு இருப்பதாக புகாரில் தெரிவிக்க உள்ளதாகவும் அந்த நபர் மிரட்டியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவரிடம் இந்தசிக்கல்களில் இருந்து வெளிவருவதற்கு ரூ.26.52 லட்சத்தை ஆன்லைனில் பல்வேறு வங்கி கணக்குகளில் செலுத்தும்படி அந்த நபர் மிரட்டியுள்ளார். பணம் செலுத்திய பிறகும்தொடர்ந்து பணம் கேட்டு அந்தநபர் நெருக்கடி அளி்த்துள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் அந்த சைபர் மோசடி கும்பல் மீது நவி மும்பை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

4 போலி நிறுவனங்களைத் தொடங்கி ஆன்லைன் டிரேடிங்கில் 22 ஆயிரம் கோடி மோசடி..!

ஆன்லைன் டிரேடிங், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம், சம்பாதிக்கலாம், இரட்டிப்பு லாபம் பெறலாம். வட்டிக்கு வட்டியும் கிடைக்கும், குறைந்த காலத்தில் முதலீடும் இரட்டிப்பு ஆகும் என்று ஆசைவார்த்தை கூறி சமூக வலைதளங்களைத் திறந்தாலே பங்கு வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களும், போஸ்டுகளுமே கண்ணில் படும்.

சமீபகாலமாக நாளுக்கு நாள் ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயனர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களது வாட்ஸ் அப் எண்ணுக்கு முதலீடு தொடர்பான ஆலோசனைகளை அளிக்கிறோம் என்று தொடர்ச்சியாக குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளை மேற்கொள்கின்றனர்.

இதன் மூலமாக சிக்குபவர்களிடம் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாமில் இதேபோல ஒரு மிகப்பெரிய மோசடி சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக திப்ருகர் பகுதியைச் சேர்ந்த விஷால், கவுஹாத்தியைச் சேர்ந்த ஸ்வப்னில் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களது வீட்டில் காவல்துறை ரெய்டு நடத்தினர். அந்த ரெய்டில் பல கோடி ரூபாய்க்கும் மேல் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு பேரும் 4 போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

மருத்துவக்கல்லூரியில் சீட் ரூ.88 கோடி மோசடி..! பாரிவேந்தன் மனு தள்ளுபடி..!

எஸ்.ஆர்.எம்.மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக 142 பேரிடம் 88 கோடியே 66 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வாங்கி மருத்துவக் கல்லூரியில் இடம் தராமல் ஏமாற்றிவிட்டதாக மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த 2016-ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தனர்.

இதையடுத்து, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், ஐஜேகே கட்சியை சேர்ந்த பாபு, வேந்தர் மூவீஸ் சுதிர் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மோசடி மற்றும் மற்றவர்கள் சொத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் மதன் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் கடந்த 2016-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், மோசடி செய்த தொகையை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, மாணவர்களிடம் பெற்ற தொகையை பாரிவேந்தர் திரும்ப அளித்ததையடுத்து அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரிவேந்தருக்கு 2017 மற்றும் 2022-ல் சம்மன் அனுப்பப்பட்டது. அவரது மகன் ரவி பச்சமுத்துவுக்கு 2023 ஜனவரி 19 மற்றும் ஜனவரி 30-ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை கோரி பாரிவேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், 88.66 கோடி ரூபாயை திரும்ப அளித்து வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ளதால் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த பணத்தை ஜாமீன் பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.

வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் மீதான மூல வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த பணத்தை வேறு விதமாக சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, மனுதாரருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை அமைப்பு அதன் கடமையை செய்வதை தடுக்க முடியாது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோர முடியாது. அவர்களது விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி பாரிவேந்தரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஈரோட்டில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த போலி அமெரிக்க டாலர் கொடுத்து மோசடி..!

ஈரோடு மாவட்டம், தேவம்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இத்துடன் அசோக்குமார், வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, அவர்கள் நாட்டு பணத்திற்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை மாற்றித் தரும் பணியையும் கவனித்து வருகிறார். இது தொடர்பாக அசோக்குமார் இணையதளங்களில் விளம்பரமும் செய்துள்ளார்.

இந்நிலையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு என்பவர், அசோக்குமாரை அணுகி, தான் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளி தொழில் செய்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக 500 அமெரிக்க டாலருக்கு மாற்றாக, இந்திய ரூபாய்களை வழங்க வேண்டும்’ எனக் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு வந்த நைஜீரிய நபர், அசோக்குமாரிடம் 500 அமெரிக்க டாலரைக் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரம் பெற்றுள்ளார். நைஜீரியா நபர் கொடுத்த டாலரை, அசோக்குமார் ஆய்வு செய்த போது, அது போலி எனத் தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம், அசோக்குமார் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வுவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், கோயம்புத்தூர் காட்டூர் பகுதியில், இதே போல் போலி கரன்ஸி கொடுத்து மோசடி செய்தது தொடர்பாக, நாதன் இகேச்சுக்வு மீது ஒரு வழக்கு உள்ள நிலையில், போலி டாலர் கொடுத்து மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து, நைஜீரியா நபரை காவல்துறை கைது செய்தனர்.