மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சு நடத்துவது நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்..!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனால், பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, கடந்த 33 நாட்களாக அந்த மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலும், மாநில சுகாதாரத் துறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். இதுதவிர மாநில சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலரை பதவி நீக்கம் செய்யும்படி மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மேற்கு வங்கத்தின் சுகாதார அமைப்பில் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கெடு விதித்தது. ஆனால், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிப்பது, மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வது, சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என்று மருத்துவர்கள் திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு நேற்று காலையில் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்தார். மாலை 6 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு 12 முதல் 15 மருத்துவர்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், மருத்துவர்கள் அளித்த பதிலில், “குறைந்தபட்சம் 30 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சந்திக்க அனுமதிக்க வேண்டும். முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். பெண் மருத்துவர் கொலையில் தொடர்புடைய மற்றும் ஆதாரங்களை அழித்த அனைவரையும் தண்டிக்க வேண்டும். மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் மற்றும் சுகாதார துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மருத்துவர்கள் திட்டவட்டம்: “கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம்..!”

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதையடுத்து, மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு, வழக்கை நேற்று விசாரித்தது. அப்போது மருத்துவர்களின் போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார்.

இதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அதுவரை அவர்கள் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து புகார்களும் கவனத்தில் கொள்ளப்படும். ஆனால் தொடர்ந்து பணியை புறக்கணித்து வந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் சேவை செய்ய விரும்பும் சமூகத்தின் கவலைகளை அவர்கள் கவனிக்காமல் இருக்க முடியாது.

ஆட்சியர்களும், காவல் துறை அதிகாரிகளும் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கு தனித்தனி ஓய்வறை, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

இது தொடர்பாக, மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நீதிமன்றத்தின் உத்தரவை பரிசீலனை செய்வோம். இல்லையெனில், முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் விரும்பவில்லை என்றே நாங்கள் புரிந்துகொள்வோம். அப்படியானால், மாநிலம் முழுவதும் ஏற்படும் சூழ்நிலைக்கு நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பாக்குவோம்.

மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும், சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும், கொல்கத்தா காவல்துறைத் தலைவரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு சிசிடிவி கேமராகூட நிறுவப்படவில்லை. ஓய்வெடுக்கும் அறை இல்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவக் கல்லூரியில் வைவாவில் “உதட்டில் என்ன போட்டு இருக்க…!”

மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவாவின் போது அந்த பெண்ணிடம் நீ பிராமினா.. முகத்திற்கு எந்த க்ரீம் யூஸ் பண்ற என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் நடந்த ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி அந்த சம்பவம் இன்றும் அடங்கவில்லை. இதற்கிடையே மேற்கு வங்கத்தில் உள்ள மற்றொரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவா தேர்வின் போது மாணவி ஒருவரிடம் கேட்ட கேள்விகள் சர்ச்சையாக வெடித்துள்ளது. வைவாவுக்கு வந்த ஆசிரியர் முறையற்ற கேள்விகளைக் கேட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில ஊடகப் பொறுப்பாளர் பகிர்ந்துள்ளார். அதில் வைவாவின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்வது தெளிவாகத் தெரிகிறது.

அங்குள்ள சாகர் தத் மருத்துவக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகப் பரவும் வீடியோவில் ஒரு பெண், “எனக்கு முன்னால் வந்த ஆணுக்கு சில நிமிடங்களில் வைவா முடிந்துவிட்டது. ஆனால், என்னிடம் மட்டும் சம்பந்தமே இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டார்.

குடும்ப உறுப்பினர்கள் குறித்து எல்லாம் கேட்டார்கள்.. அது கூட ஓகே.. அதன் பிறகு கேட்ட கேள்வி தான் மோசம்.. நீ ஒரு பிராமினா? இப்போ முகத்தில் என்ன கிரீம் போட்டு இருக்க? என்று கேட்கிறார். அது மட்டுமின்றி உதட்டில் என்ன போட்டு இருக்க என்று அத்துமீறிக் கேட்கிறார். இது வைவா தேர்வா இல்லை வேறு எதாவது” என்று சரமாரியாகக் கேட்கிறார்.

பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை..!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ‘பெண் மருத்துவர் மரணத்துக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சிம் பங்கா சத்ரா சமாஜ் என்ற மாணவர் அமைப்பு கொல்கத்தாவில் நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள், தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

கொல்கத்தாவின் ரைட்டர்ஸ் கட்டிடத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால், ஹவுராவில் உள்ள நபன்னா கட்டிடத்தில் தலைமைச் செயலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால், நபன்னாவை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர். முன்னெச்சரிக்கையாக, கொல்கத்தாவில் இருந்து ஹவுரா செல்லும் சாலைகளில் 21 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு 6,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஹவுரா பாலம் முழுமையாக மூடப்பட்டு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி காவல் துறை மேற்கொண்டது.

இந்நிலையில், பேரணி சென்ற மாணவர்கள், ஹவுரா பாலத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து முன்னேற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, கூட்டத்தில் இருந்த சிலர் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காவல்துறை தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியும் கூட்டம் கலையாத காரணத்தால கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த சூழலில், தலைமைச் செயலகத்தின் வடக்கு நுழைவுவாயில் பகுதியில் திடீரென மாணவர்கள் திரண்டு, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை காவல்துறை தடியடி நடத்தி விரட்டினர். கொல்கத்தாவில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே 3 மணி நேரத்துக்கும் மேலாக மோதல் நீடித்தது. இதில் 100 மாணவர்களும், 15 காவல்துறையினர் காயமடைந்தனர். இரு தரப்பு மோதல் காரணமாக, கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக காணப்பட்டது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி பேரணி..!

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை 2-ஆம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்காக முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக மாணவர் அமைப்பு ஒன்று இன்று ஹவுராவில் உள்ள மேற்கு வங்க தலைமைச் செயலக அலுவலகம் அமைந்துள்ள நபன்னா நோக்கி பேரணி செல்வதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து தலைமைச் செயலகம் அமைந்துள்ள வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் கொல்கத்தா காவல்துறையினரும், ஹவுரா நகர காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். 19 இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 முக்கிய இடங்களில் அலுமினியம் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஹவுரா காவல்துறை, கொல்கத்தா காவல்துறையை தாண்டி அதிரடிப் படையினர், பறக்கும் படையினர், அதிவிரைவு படை எனப்படும், தண்ணீர் டேங்குகள் என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளை கூடுதல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள காவல் உயர் அதிகாரி மேற்பார்வை செய்கிறார். ஹாஸ்டிங்ஸ், ஷிப்பூர் சாலை, ஹவுரா மேம்பாலம், ஹூக்ளி மேம்பாலம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நபன்னா அபிஜான் பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு காவல்துறை விரிவான இமெயில் அனுப்பியதாக தெரிவித்துள்ளது. அதில் பேரணியில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள். அவர்களின் பெயர்கள் என்னென்ன? பேரணியில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் யார்? என்றெல்லாம் தகவல் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று மாலை மேற்கு வங்க காவல்துறை, இந்தப் பேரணிக்கு அனுமதியில்லை இது சட்டவிரோதமானது என்று கூறியது. இந்நிலையில் தான் இந்தப் பேரணியில் வன்முறையை ஏற்படுத்த சதி நிலவுவதாக வெளியான உளவுத் துறை தகவல் அளித்ததை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உளவுத் துறை தகவலின்படி இன்று கொல்கத்தாவில் கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஒரு பேரணியும், ஹவுராவின் சந்த்ராகச்சியில் இருந்து ஒரு பேரணியும் நடைபெறவிருக்கிறது என காவல்துறை கூறுகின்றனர். இந்தப் பேரணிகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கவிருக்கிறது. கல்லூரி சதுக்கத்திலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து நபானா 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சந்த்ராங்கச்சியில் இருந்து நபானா 3 கிமீ தூரம். எனவே, இந்த இரு மார்க்கங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Mamata Banerjee rally: பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை..! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை முழக்கம் …!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 9-ம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரவு பணியில் இருந்து முதுகலை 2-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள மவுலாலியில் இருந்து டோரினா கிராசிங் வரை கண்டன பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடிகளில் கல்வீச்சு, தீ வைப்பு..!

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.

இந்த மோதல் வன்முறையாக வெடிக்க நாட்டு வெடிகுண்டு, கல் வீச்சி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த அனந்த் பர்மன் என்ற உள்ளூர் பிரமுகர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தொண்டர்களால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பார்க்க மாநில அமைச்சர் உதயன் குஹா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

வாக்காளர்களை மிரட்டுவதாகவும், வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வரவிடாமல் தடுப்பதாகவும், பூத் ஏஜெண்டுகளைத் தாக்கியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். கூச் பெஹாரில் உள்ள டூஃபங்கஞ்ச் மற்றும் ஜல்பைகுரியில் உள்ள டப்கிராம் – ஃபுல்பாரி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.