மு.க.ஸ்டாலின்: திமுகவிற்கு எதிராக “தினுசு தினுசா” எதிரிகளை உருவாக்கும் பாஜக..!

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான். அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்காகப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா நேற்று மாலை, நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று, திமுக கழக நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது, மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ஆல் போல் தழைத்து, தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் முன்னேற்றிட அல்லும் பகலும் உழைத்து, வேல் போல் பாய்ந்து எதிரிகள் படையைத் தோற்கடித்திடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள், பேரறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞரும் வளர்த்தெடுத்த எனதருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுகள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த சமயம் உங்களிடம் நான் தொலைபேசியில் பேசும்போதே, தேர்தல் முடிந்தவுடனே உங்களை எல்லாம் சந்திக்கிறேன் எனச் சொல்லி இருந்தேன். மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான முத்துசாமி அவர்களிடம் பாக முகவர்களை அறிவாலயத்துக்கு அழைத்துவரச் சொல்லி இருந்தேன். அவரோ, “பாக முகவர்களோடு என்னுடன் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் இந்த வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அதனால் கூட்டம் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லி லேட்டாக இருந்தாலும் மிக பிரம்மாண்டமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கிறார் செயல்வீரர் முத்துசாமி அவர்கள். அவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!

தேர்தலைப் பொருத்தவரை வரலாறு காணாத வெற்றியையும் நாம் பார்த்து இருக்கிறோம்! மிக மோசமான தோல்வியையும் சந்தித்து இருக்கிறோம். பெற்ற வெற்றிகளால் நாம் தலைக்கனமும் கொண்டதில்லை; அடைந்த தோல்விகளால் சோர்வடைந்து முடங்கியதுமில்லை! ஒவ்வொரு முறையும் எழுச்சி பெற்று, முன்பை விட வீரியமாகக் கழகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருப்பது உங்களைப் போன்ற உடன்பிறப்புகள்தான்! அதனால்தான், நான் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு சந்தித்த 2018 உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரையிலும் தொடர் வெற்றிகளை நாம் பெற்று இருக்கிறோம்.

பொதுவாகத் தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்களிடம், களநிலவரம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என நான் விசாரிக்கும்போது, “இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்து இருக்கிறோம்; மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறோம்!” என்று சொல்வார்கள்… ஆனால் உங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொருத்தவரை, கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறை மூன்று மடங்கு உழைப்பைக் கொடுத்து தொடர் வெற்றியை நீங்கள் உறுதிசெய்து இருக்கிறீர்கள்! அதற்காக உங்களுக்குச் சிறப்பான வாழ்த்துகள், பாராட்டுகள்!

தேர்தல் பணி என்பது, கட்சிக் கூட்டம் மாதிரி கிடையாது. கடுமையான களப்பணி அது! ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நிமிடமும், பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். நம்மைப் பற்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டை வைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் நம் கொள்கைகள் – திட்டங்கள் – சாதனைகளை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு ஏதாவது குறைகள் – கோபம் இருந்தால் அதற்குத் தீர்வு காண்கிறோம் என உறுதியளித்து, அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். அதை வாக்குகளாக மாற்ற வேண்டும். தேர்தல் நாள் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை முடிந்து, வெற்றிச் சான்றிதழை வாங்கும்வரை உணவு – தண்ணீர் – குடும்பம் – தூக்கம் என அனைத்தையும் மறந்துவிட்டுத் தவறுகள், முறைகேடுகள் எதுவும் நடக்காத அளவுக்கு விழிப்போடு பணியாற்ற வேண்டும்! அப்படி பணியாற்றி வெற்றியைத் தேடித்தந்திருக்கும் உங்களை பாராட்டுவது மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக, தலைமைத் தொண்டனாகப் பெருமை அடைகிறேன்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்து, தமிழ் மண்ணில் பிற்போக்குத் தனங்களையும் – வெறுப்பையும் பேசும் மக்கள் விரோத சக்திகளுக்கும் – அவர்களின் கைப்பாவைகளுக்கும் இடமில்லை என இந்தத் தேர்தலில் நிரூபித்து இருக்கிறோம்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது நாம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் நேரத்தில் வந்த தேர்தல். நம் ஆட்சி பற்றிய மக்களின் தீர்ப்பாகக் கருதப்பட்ட முக்கியமான தேர்தல்.

அதில் பெருவெற்றியைப் பெற்றுத் தந்த உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இன்னும் ஓராண்டில் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். பொதுத் தேர்தல் களத்தில் நம் எதிர்க்கட்சிகள் எல்லாம் நம்மிடம் இருந்து வெற்றியைப் பறிக்க எவ்வளவு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து போவார்கள். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சதித்திட்டங்களுக்கு முதன்மைத் தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான்.

அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள். இந்த மாதிரியான நாடகங்களை 75 ஆண்டுகளாக – ஏன், அதற்கு முன்பிருந்தே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் நாம். அதனால், என்ன திட்டம் போட்டாலும் அதை முறியடிப்பதற்கான வலிமை நம்மிடம் உள்ளது. அந்த வலிமைதான் நீங்கள்! உங்களை மாதிரி உழைக்கும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்! நம் மேல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்கள்!

என்னை பொருத்தவரைக்கும், நான் கொள்கை – உழைப்பு – சாதனை ஆகியவற்றை நம்புகிறவன். அதற்கு நேர்மையாகவும் – தடம் மாறாமலும் இருப்பதால்தான் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். அந்த மக்களைக் காக்க – இந்த தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற – 2026-இல் களம் காண்போம்! உங்கள் உழைப்பைக் கொடுங்கள்! வரலாறு காணாத வெற்றியைக் காண்போம்! நன்றி! வணக்கம்!”என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் மு.க.ஸ்டாலின் தாக்கல்

இஸ்லாமிய இன மக்களை வஞ்சிப்பதாக வக்ஃபு வாரிய சட்டத் திருத்தமானது அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு இந்திய நாடு. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இத்தகைய உணர்வைக் கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும். ஆனால் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசானது, தனது செயல்பாடுகள் அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாகச் செய்து வருகிறது. எதைச் செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் தான் திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.

இஸ்லாமியர், ஈழத் தமிழருக்கு எதிரான CAA குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும், இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது. இந்தியைத் திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலமாக வஞ்சிக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு எதிரான நீட் சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது. நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கையானது அடித்தட்டு மக்களைப் பாதிப்பதாக அமைந்திருப்பதை அனைவரும் அறிவோம்.

இந்த வரிசையில் கொண்டு வரப்படும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்தமானது சிறுபான்மை இஸ்லாமிய இன மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இம்மாமன்றத்தில் நான் முன்மொழிய இருக்கிறேன் என்பதை முன்னுரையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் திருத்தமும் திமுக எதிர்ப்பும் வக்ஃபு சட்டமானது 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய மத்திய பாஜக கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரைவினைக் கடந்த 08-08-2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

வக்ஃபு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும் மத்திய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால் அதனை திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம். நாடாளுமன்ற கூட்டுக் குழு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்தச் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்ஃபு வாரிய சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக ஏற்படும் மோசமான விளைவுகள் சிலவற்றை இம்மான்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மத்திய அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஏன் எதிர்ப்பு?

(1) வக்ஃபு சட்டத்தை மத்திய அரசு திருத்த நினைக்கிறது. இதன் மூலம் மத்திய வக்ஃபு கவுன்சில் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்ஃபு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும்.

(2) அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃபு சொத்து, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்ஃபு சொத்தாகக் கருதப்படாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.

(3) ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்ஃபு அறிவிக்க முடியும்” என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்ஃபுகளைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.

(4) இசுலாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

(5) மாநில வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்ஃபு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென்று இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும்.

(6) வக்ஃபு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது வக்ஃபு வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-இன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவது ஆகும்.

(7) “வக்ஃபு பயனர்” (Waqf by user) என்ற பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளார்கள். நீண்டகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃபு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது.

(8) “லிமிட்டேஷன் ஆக்ட்” என்று சொல்லப்படும் காலவரையறைச் சட்டம் வக்ஃபு சொத்துகளுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.

(9) அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள் இனி வக்ஃபு என கருதப்பட மாட்டாது. இந்தப் பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை.

(10) இந்த அடிப்படையில் வக்ஃபு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக மத்திய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இசுலாமிய மக்களின் மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருக்கிறது. இதனை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் 30.09.2024 அன்று தமிழ்நாடு அரசு தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்த்த திமுக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம் பெற்ற திமுக உறுப்பினர்களான முன்னாள் அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்களும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களும் கடுமையாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். திமுக மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள முக்கிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இஸ்லாம் மக்களுக்கு எதிரான மசோதா ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழு நிராகரித்து இருக்கிறது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது.

இந்நிலையில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டமானது எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம் என்று நான் கருதுகிறேன். மத சுதந்திரம் நிராகரிப்பு சிறுபான்மையின மக்களுக்கு எதிரான; மத சுதந்திரத்தை நிராகரிக்கும்; அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான; வக்ஃபு நோக்கத்துக்கு எதிரான; நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான; குழப்பமான; தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தில் இருக்கின்றன. வக்ஃபு அமைப்பை முடக்கும் அபாயம் இந்தத் திருத்தச் சட்டமானது வக்ஃபு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும். எனவே நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மதநல்லிணக்கம் – அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்: மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்திலே இருக்கிறோம்..!

இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிக சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில் மும்மொழிக் கொள்கை கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. டெல்லிக்கு சென்று யாரை சந்திக்கிறாரோ அவரிடம் இருமொழி கொள்கை குறித்து வலியுறுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கை குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக் கொள்ள மாட்டோம். நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை. இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம். யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. தமிழை அழிக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. 3-வது மொழியை அனுமதித்தால், அது நம்மை மென்று தின்றுவிடும் என்று வரலாறு உணர்த்துகிறது.

இந்தி மொழித் திணிப்பு மூலமாக, மாநில மொழிகளை அழிக்க, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர்.இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமை பகுதிகளாக நினைக்கின்றது மத்திய அரசு. இப்படி கொத்தடிமை பகுதிகளாக நினைப்பதால் மொழித் திணிப்புகள், நிதி அநீதிகள் செய்கின்றனர். எனவே இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை பாதுகாக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிக சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்திலே நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைக் காக்க முடியும்; தமிழினத்தை உயர்த்த முடியும் என்பதை தெரிவித்து அதற்காக அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று அறிவிக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விஜய்யை விமர்சனம் செய்த கருணாஸ்: “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம்..!”

“பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது வந்துள்ளது. பாதரசம் எதிலும் ஒட்டாதது.. மக்களிடம் எப்போதும் ஒட்டப்போவதும் கிடையாது, நன்றாக இருக்கும் நாட்டை இந்த பாதரசம் உருக்குலைத்து விடும் என கருணாஸ் விமர்சனம் செய்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது வந்துள்ளது.

பாதரசம் எதிலும் ஒட்டாதது.. மக்களிடம் எப்போதும் ஒட்டப்போவதும் கிடையாது. நஞ்சு கக்கக்கூடிய கொடிய திரவம் தான் இந்த பாதரசம். தங்கத்தையும் வெள்ளியையும் இந்த பாதரசம் உருக்கும், உருக்குலைத்து விடும்.. அதேபோல நன்றாக இருக்கும் நாட்டை இந்த பாதரசம் உருக்குலைத்து விடும். இதுபோன்ற பாதரசத்தை உருவாக்கிப் பாதுகாப்பு கொடுப்பதே பாசிசங்கள் தான் என்பதை நீங்கள் அத்தனை பேரும் உணர வேண்டும்” என கருணாஸ் விமர்சனம் செய்தார்.

உதயநிதி ஸ்டாலின்: யார் அரசியல் செய்கிறார்கள்..!? அது எக்காலத்திலும் நடக்காது..!

கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள், எக்காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், புதிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. 1968-ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.

இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நாம் நம்பியிருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.

சமூக மற்றும் கல்வி முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழக கல்விக்கான ரூ.2,151 கோடி நிதியை கேட்டுள்ளோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகதான் இருந்திருக்கிறது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது? மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. அதனால் தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி: 3-வது மொழி மாணவர்களுக்கு பெரும் சுமை.. 56 மொழிகளை இந்தி அழித்துள்ளது .. !

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடி கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், பாஜக ஆளாத மாநிலங்களிலும் தேசியக் கல்வி கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு ஏற்கனவே தரமான கல்வியை கொடுக்கிறது. பிஎம்ஸ்ரீ மூலம் கல்வித் தரத்தை உயர்த்த போகிறீர்கள் என்றால், அப்படி அந்த திட்டத்தில் என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்? புதிய கல்விக் கொள்கையை பிஎம்ஸ்ரீ மூலம் கொண்டு வருவதை ஏற்கனவே அறிந்து கொண்டுவிட்டோம். மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு போல் ஒன்றை கொண்டு வருவது என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது அதிகளவில் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது மாணவர்கள் இடைநிற்றலை குறைத்திருக்கிறோம். மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு கண்டனத்தை தெரிவித்து வருகிறோம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கி உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

இளைய சமுதாயத்தை மனதில் வைத்து திட்டத்தை உருவாக்கி இருந்தால், புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. சாதாரணமாக அமர்ந்து கையெழுத்திடுங்கள்.. பேசிக் கொள்ளலாம் என்ற ரீதியில் வலியுறுத்தி இருக்கிறார். இருமொழிக் கொள்கையில் படித்துள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். மருத்துவர்கள், தொழில்நுட்பம், இஸ்ரோ, ஐடி என்று பல்வேறு துறைகளிலும் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்தவர்களே முதன்மையாக இருக்கிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை. தூண்டிலை போட்டுவிட்டு மீன் சிக்காதா என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். இந்தி இல்லாமல் 3-வது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.

பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். கட்டாயம் என்று சொல்லி ஒரு மொழியை கொண்டு வரும் போதுதான், தேவையில்லாத மன அழுத்தத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். மும்மொழி கொள்கை மாணவர்களின் கால்களில் சங்கிலியை போட்டு இழுப்பதை போன்றதாகும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மொழியாக ஒரியா மொழி உட்பட 56 மொழிகள் முழுமையாக இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது. தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற சொல்லைதான் எதிர்க்கிறோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் ‛Get Out Modi’.. ஏன்யா இந்தி பேச சொல்லி கட்டாயப்படுத்துறீங்க..!

உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் பதிவிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு..” என்று சவால் விட்டார்.

இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், ‛GetOutModi’ என்ற ஹேஷ்டேக்கை நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்தனர். அதோடு பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அந்த ஹேஷ்டேக்கில் அவர்கள் பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது..” என பிரகாஷ் ராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்: “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி”

உலக தாய்மொழி தினத்தையொட்டி, “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்! அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி! உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கள்ளசாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் கல்லூரி மாணவர் உள்பட இருவர் படுகொலை..!

கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்கள்.

அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பவர்களை அடிப்பதும், கொலைமிரட்டல் விடுப்பதுமாக வாடிக்கையாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு, இவர்கள் கள்ளச்சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கள்ளச்சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ், மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் ஹரிசக்தி ஆகியோர் கண்டித்துள்ளனர். அதையடுத்து கள்ளச்சாராய வியாபாரிகள் ராஜ்குமார் மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் இவர்களிடம் தகறாரில் ஈடுபட்டு சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர். கள்ளச்சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மூவேந்தனை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி கூட்டத்திற்கு நோ..! ஸ்டாலின் கூட்டத்தில் “ஆஜர்” செங்கோட்டையன்..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சிக் குழு ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுஎன ஒன்று உள்ளது. இதில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும், தொகுதிகள் வாரியாக வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தப்படும். எனவே இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்று இந்த மாநில வளர்ச்சி குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொல். திருமாவளவன், துரை. வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது போல் மாநில வளர்ச்சி குழுவில் உறுப்பினராக இருக்கும் செங்கோட்டையனும் இதில் கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவிற்கு செல்லாமல் முதலமைச்சர் தலைமையிலான குழுவுக்கு மட்டும் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, பேசிய செங்கோட்டையன் மாநில வளர்ச்சி குழுவில் நானும் உறுப்பினர். அந்த முறையில் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டும் நான் கலந்து கொண்டேன் என தெரிவித்து இருந்தார்.