புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை..! மாமூல் கேட்டு வியாபாரியை ரவுடிகள் தாக்குதல்..!

மாமூல் கேட்டு ரவுடிகள் தாக்குதல் நடத்தியதால் வியாபாரி காயமடைந்த நிலையில், வியாபாரிக்கு சிகிச்சை தராமல் அலைக்கழிக்கப்பட்டதால், சுயேச்சை MLA தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை அருகே தனியார் பார் அருகே பெட்டிக்கடை சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த 3 ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். சந்திரன் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள், கடையிலிருந்த சோடா பாட்டில் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சந்திரனை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து சந்திரன் கூச்சல் போட்டதால் ரவுடிகள் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து, கை, தலையில் காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சந்திரனுக்கு முதுலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று காலை சாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும்படி சந்திரனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்கள் சொன்னபடி இன்று காலை அவர் சாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.ஆனால் அங்கிருந்தவர்கள், தங்களிடம் ஸ்கேன் வசதி இல்லை என்று சொல்லி அவரை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து சந்திரன் மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே, மாமூல் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சுயேச்சை MLA-வான நேரு தலைமையில் பொது நல அமைப்பினர் கூடினர். அப்போது வியாபாரி சந்திரன் சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அறிந்து உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, சந்திரனுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

இதையடுத்து, காவல்துறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுகாதார இயக்குநர், அதிகாரிகள் அங்கு வரவேண்டும் என பொதுநல அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுநல அமைப்பினர், வியாபாரி சந்திரனை ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து அங்கிருந்து தள்ளிக் கொண்டு, ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் சட்டப்பேரவையைக் கடந்து, ஆளுநர் மாளிகை முன்பு வந்தனர். அங்கு ஸ்ட்ரெக்சரை நிறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால், அந்தப் பகுதியில் கூடுதல் காவல்துறை குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களை ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து அப்புறப்படுத்தி, பாரதி பூங்கா நுழைவு வாயில் அருகே நிறுத்தினர். தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் MLA ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதனால் ஆளுநர் மாளிகை முன்பு மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி சரியாக செயல்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டோர் நாராயணசாமியிடம் தெரிவிக்க, இங்கு அரசியல் வேண்டாம் என அவர் பதில் தர தொடர்ந்து இருத்தரப்பும் பேசியபடி இருந்தனர். அரசுச் செயலரோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ நேரில் வந்து பேசினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தில் இருந்தவர்கள் வலியுறுத்தினர். இதனால் போராட்டம் நீடித்தது. பின்னர் சுகாதார துறை பொறுப்பு இயக்குநர் செவ்வேல் அங்கு வந்து அவர்களுடன் பேசினார்.

இதையடுத்து, காவல்துறை அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸை கொண்டு வந்தனர். அதில் வியாபாரி சந்திரனை சிகிச்சைக்காக ஏற்றினர். ஆனால், ஆம்புலன்ஸில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை. இதனால், “வியாபாரி என்றால் அலட்சியமா அரசு அதிகாரி காயமடைந்தால் இப்படி செய்வீர்களா?” எனக்கூறி, “மருத்துவர் வந்தால்தான் ஆம்புலன்ஸை எடுத்துச் செல்ல அனுமதிப்போம்” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து வியாபாரி சந்திரனை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

எம்.எல்.ஏ ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்களை இடமாற்றம் செய்யக்கோரி மருத்துவமனை முற்றுகை

திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருத்தணி எம்.எல்.ஏ எஸ்.சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குறைந்தபட்ச மருத்துவ சேவையும் கிடைப்பதில்லை. உள்ளூரைச் சேர்ந்தவர் மருத்துவ அலுவலராக இருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வருவதில்லை. அவர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியரை பணியிட மாற்றம் செய்து 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட சுகாதரப்பணிகள் இணை இயக்குநரிடம் எஸ்.சந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டு பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் மீது புகார் செய்து, அவர்களை பணியிட மாற்றம் செய்து புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் திரும்பிச் சென்றனர். இதனால் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை பரபரப்பு ஏற்பட்டது.

ஆம் ஆத்மி கட்சி பிரதமர் வீடு முற்றுகை போராட்ட அறிவிப்பால் டெல்லியில் காவல்துறை பலத்த பாதுகாப்பு

நாட்டின் தலைநகரம் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். கடந்த 2021 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 -ஆம் தேதி டெல்லி அரசால் கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டு புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. 2022 -ஆம் ஆண்டு ஜூலை 31 புகார் எழுந்ததையடுத்து கலால் கொள்கை டெல்லி அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த கலால் கொள்கைக்கு ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன.

இதன் விளைவாக செப்டம்பர் 22 -ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் விஜய் நாயர் சி.பி.ஐ மூலம் கைது செய்யப்பட்டார், அவரை தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. 8 மணி நேரம் விசாரணை நடத்தி, நவம்பர் 25 -ஆம் தேதி 7 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி மணீஷ் சிசோடியாவிக்கு சம்மன் அனுப்பி 26 -ஆம் தேதி கைது செய்தது. 28 -ஆம் தேதி துணை முதல்வர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார் .

மேலும் அக்டோபர் 4ஆம் தேதி ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்கின் வீடு மற்றும் அவருக்கு நெருங்கியவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து கடந்த 16 -ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி தலைவர் கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கையில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 சம்மன்களையும் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து நிராகரித்து வந்தார். இதனை தொடர்ந்து கேஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து இருந்தனர். ஆகையால் டெல்லி காவல்துறை பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளனர்.