மின்வாரியம் எச்சரிக்கை: வாட்ஸ்அப் வழியாக ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த ‘ஆப்’ களமிறங்கிய மோசடிக் கும்பல்..!

உலகெங்கும் மோசடி மன்னர்கள் காலமாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது தனது மோசடி வேலைகளை மாற்றி வருகின்றனர். காவல்துறை பொதுமக்களுக்கு எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தங்களின் மோசடிக்கு புதிய வழியைத் தேடிக் கொண்டே இருக்கின்றனர். அவற்றில் ஒரு புதிய யுத்திதான், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரில் மோசடியை அரங்கேற்ற துவங்கியுள்ளது. இன்று தமிழ்நாட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் கட்டணம் செலுத்துகின்றனர்.

இதை கவனத்தில் வந்த மோசடி கும்பல் மின்சார வாரியத்தை குறிவைத்தது. ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்துவோரை குறிவைத்து, அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் மற்றும் செயலிக்கான லிங்க் இணைத்து அனுப்புகின்றனர். மின்சார வாரியத்தின் அலுவல் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப் எண்ணைப் போல உள்ள அந்த தகவலில், ‘‘அறிவிப்பு, தங்களது மின் இணைப்பு இன்று இரவு 10.30 மணி முதல் மின்சார அலுவலத்தின் மூலம் துண்டிக்கப்படுகிறது. கடந்த மாதத்திற்கான மின் கட்டணம் இன்னும் சரி செய்யப்படவில்லை.

எனவே, மின்சார வாரியத்தின் இந்த குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து, தேவையான விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 மட்டும்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் இணைப்பாக செயலிக்கான லிங்க் ஒன்றையும் இணைத்துள்ளனர். இந்த தகவல் குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்பதில்லை.

இந்த மோசடி குறித்து, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர், தலைமைப் பொறியாளர் மங்களநாதன் கூறுகையில், ‘‘மின்சார வாரியத்தின் சார்பில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின் நுகர்வோர் யாருக்கும் வாட்ஸ்அப் மூலம் எந்த தகவலும் இதுவரை பகிரப்படவில்லை. ஆன்லைன் மோசடி கும்பல் தங்களின் மோசடிக்கு துணையாக வாரியத்தின் பெயரை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தகவல்கள் மட்டுமின்றி பணமும் பறிபோகும் வாய்ப்பு உள்ளது. எனவே, வாட்ஸ்அப் தகவலை நம்பி மின் நுகர்வோர் யாரும் ஏபிகே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்’’ என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“உத்தரபிரதேசத்தில் 1911-ல் மின்வாரியம் இருந்ததா?” மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை சம்மன்…!

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கஜக்புரா பகுதியை சேர்ந்த உமா சங்கர் யாதவ். இவரது வீட்டுக்கு 1911-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வழங்கப்பட்ட மின் இணைப்புக்கு ரூ.2.24 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் ரசீது அனுப்பி இருந்தது. இதையடுத்து மின் கட்டணத்தை சரி பார்க்கும்படி அதிகாரிகளை அணுகிய யாதவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை ஆணையத்தை அணுகி உமா சங்கர் யாதவ் முறையிட்டார்.

இந்த விவகாரத்தில், “1911-ம் ஆண்டு வாரணாசியில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டதா? மின் கட்டணம் எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது? அப்போது ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணம் எவ்வளவு? எந்த நிறுவனம் மின்சாரம் வழங்கியது? உத்தரபிரதேச மின்வாரியம் அப்போது இருந்ததா?” என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தனர்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் இந்த கேள்விகளுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் மின்வாரியம் பதிலளிக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.