முரளி அப்பாஸ் சரவெடி: தமிழிசை சவுந்தரராஜனின் அரைவேக்காட்டுத்தனம்..! தன் வாழ்க்கை கணிக்க முடியாதவர்..!

தமிழிசை சவுந்தரராஜனின் அரைவேக்காட்டுத்தனமாக விமர்சனம் நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர் தமிழிசை சவுந்தராஜன் என முரளி அப்பாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் அறிவித்து இருந்தார். இதற்கு, சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முழுவதும் திமுகவாக மாறி விட்டார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மநீம மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை சவுந்தராஜன், இன்று கமல்ஹாசன் தனக்களிக்கப்பட்ட ‘உலகநாயகன்’ என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சவுந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர். நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். நம் தலைவர் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

‘உலகநாயகன்’ பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.