செல்போனை கொண்டு வந்தது யார்..! அரசு பள்ளி மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியர்..!

மத்திய பிரதேசம், இந்தூரில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கடந்த 2-ஆம் தேதி ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் செல்போன் ஒலித்து கொண்டிருந்தது. அப்போது ஆசிரியர் மாணவிகளிடம் கேட்க யாரும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 5 மாணவிகளை பாத்ரூமுக்கு ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார். இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் மல்ஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல் ஆய்வாளர் ஷிவ்குமார் கூறுகையில், ‘‘ செல்போனை கொண்டு வந்தது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக ஆடைகளை களைய சொல்லி மாணவிகளுக்கு ஆசிரியர் மனரீதியான தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் பாலியல் ரீதியான நோக்கத்தில் இதை செய்யவில்லை என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை’’ என தெரிவித்தார்.

பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏவின் மகன்..!

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இங்குள்ள சிங்குர்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் ராம் லாலு வைஷ்யா. இவரது மகன் பெயர் விவேகானந்த் வைஷ்யா. இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாலையில் விவேகானந்த் வைஷ்யாவுக்கும், இன்னொரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த விவேகானந்த் வைஷ்யா தனது துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். மேலும் அவர் பழங்குடியினத்தை சேர்ந்த சூர்யா பிரகாஷ் கைர்வார் என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேகமாக சென்றுள்ளார். இதில் கையில் குண்டு காயமடைந்த சூர்யா பிரகாஷ் உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.