போக்குவரத்து காவல்துறையினர் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது..!

சென்னையில் போக்குவரத்து காவல்துறை சாலையில் கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு விபத்துக்கள் ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்றாகும். தமிழகத்தில் அதிக அளவிலான சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பெரும்பாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, தலைக்கவசம் அணியாதது, வாகனங்களை வேகமாக ஓட்டுவது, பைக்கில் வித்தை காட்டுவது, செல்போன் பேசிக் கொண்டே வாகனங்கள் இயக்குவது என தினந்தோறும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை நாம் காண முடிகிறது.

சென்னையில் வாகன ஓட்டிகள் பலரும் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். ஒரு வழிச் சாலையில் கூட வாகனங்களை எதிர்ப்புறமாக வேகமாக ஓட்டுகின்றனர். போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து பொதுமக்கள் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், சென்னையில் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் காவல்துறை அபராதம் வசூலிக்கின்றனர். வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாகவும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இ – செலானும் கொடுக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் பலர் இ-செலானை வாங்கி விட்டு அபராதம் கட்டாமல் கிடப்பில் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து காவல்துறை ஈடுபடும்போது காவல்துறை இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வாகன ஓட்டிகள் வேகமாக வாகனங்களை இயக்கும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து காவல்துறை கும்பலாக நின்று வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் சோதனை நடத்தும் போக்குவரத்து காவல்துறை கும்பலாக நின்று சோதனை மேற்கொள்வது குறித்து பல்வேறு புகார்கள் வருவதால், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறையினருக்கு தற்போது திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து காவல்துறை வாகன சோதனையில் ஈடுபடும்போது கும்பலாக நிற்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் மட்டுமே வாகன சோதனையின்போது இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காவலர் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்றும், உதவி காவல் ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சாலைன்னு கூட பார்க்கல பெட்ரூமை போல பைக்கை பயன்படுத்தும் காதல் ஜோடி!

தமிழ்நாடு பதிவெண் கொண்ட பைக்கில் பெட்ரோல் டேங்க் மீது இளம்பெண்ணை அமரவைத்துக் கொண்டு போக்குவரத்து நெரிசலான சாலையில் இளைஞர் ஒருவர் உல்லாச பயணம் மேற்கொண்ட நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இன்றைய 2k கிட்ஸ்கள் பலரும் சாலைகளில் விதிகளை மீறி ரேஸ் களத்தில் செய்ய வேண்டிய சாகசங்களை சாலையில் செய்வது, காரை ஓட்டிகொண்டே லேப்டாப்பில் வேலை பார்ப்பது, சில வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டுவது சாலையில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். சில நேரங்களில் காதல் ஜோடிகள் பொது இடம் பைக்கில் செல்கிறோம் என்பதை பற்றி கவலைப்படாமல், யார் என்ன நினைத்தால் எங்களுக்கு என்ன? என பெட்ரூமை போல பைக்கை பயன்படுத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று கொண்டும் வருகின்றது.

நாட்டிலேயே அதிகம் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகரங்களில் ஒன்று பெங்களூர். பெங்களூரிலுள்ள பிரதான சாலைகளில் சில கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்வதற்கு கூட பல சிக்னல்களில் காத்துக்கிடக்க வேண்டி இருக்கும். போக்குவரத்து நெரிசல் என்பது விடுமுறை நாட்களில் கூட அதிகமாக இருக்கும். ஆனால் இப்படி கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும்போது பைக்கை பெட்ரூமை போல பயன்படுத்தியது சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைத்தது.

பெங்களூர் சர்ஜாபூர் சாலையில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட பைக்கில் பெட்ரோல் டேங்கில் இளம்பெண்ணை உட்கார வைத்துக்கொண்டு கட்டிப்பிடித்தபடி இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்டிச் சென்றார். தங்களுக்கு மட்டும் இன்றி சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளுக்கு கூட ஆபத்தாக இருக்கும் என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இந்த ஜோடி உல்லாச பயணம் மேற்கொண்டது சக வாகன ஓட்டிகளுக்கு முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்ததோடு, ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் வாகன பதிவெண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

போக்குவரத்து சிக்னல்களில் ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு விளக்கு மாறாமல் இருக்கும்..!

சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் அருகே ஹாரன் மூலம் ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, காவல்துறை நாட்டின் பிற மெட்ரோ நகரங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை சென்னை போக்குவரத்து காவல்துறையும் பின்பற்ற உள்ளது. அதாவது, ஒலியை அளவிடும் டெசிமல் மீட்டர்களை போக்குவரத்து சிக்னல்களுடன் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே இருக்கும் பட்சத்தில், ஒலி மாசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டினால், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் இதனை நடைமுறைப்படுத்த தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரையின் பேரில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை படிப்படியாக மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.