பொன் விக் அணிந்து “பொன்முடி”கைது செய்ய நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..!

அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் பொன் விக் அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளானது.

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில் தன்னுடைய கருத்துக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரினார். இதற்கிடையே அமைச்சர் பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதிமுக மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை சார்பில் பெண்களை பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோல்டு ஹேர் விக் அணிந்து வந்தனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொன்முடி என்பதை குறிக்கும் வகையில் பொன் நிற விக் அணிந்து வந்து பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

K.S. அழகிரி விளக்கம்: தந்தை பெரியார் பேசாத எதையும் பொன்முடி பேசவில்லை..!

தந்தை பெரியார் பேசாத எதையும் பொன்முடி பேசவில்லை திராவிடர் கழக கூட்டத்தில் தான் அப்படி பேசி இருக்கிறார் என தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர், K.S. அழகிரி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது. பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவதாக இருக்கிறது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டத்தின் வழியில் நின்று வெற்றிப் பெற்று வேந்தராகி இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். ஆனால், அதை ஆளுநரால் பொறுக்க முடியவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி வலிமையற்ற கூட்டணி. எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சிதைந்து கொண்டு இருக்கிறது.

ஒரு கூட்டணி அமைத்தால் எழுச்சி வரும். ஆனால், அந்த கூட்டணியில் அப்படி இல்லை. இந்த கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி அதிக இடங்களை கேட்போம். பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாததை எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை.

அரசு நிகழ்ச்சியில் பொன்முடி அதுபோல பேசவில்லை. திராவிடர் கழக கூட்டத்தில் தான் அப்படி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவரது தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. அவர் அப்படி பேசியதற்காக தண்டிக்கப்பட்டு விட்டார். ஒரு தவறுக்கு ஒரு தண்டனை தான் கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் மற்ற கட்சியினர் அமைச்சர் பொன்முடியை குறிவைத்துள்ளனர் என K.S. அழகிரி தெரிவித்தார்.

சீமான்: அமைச்சர் மீது சேறு வீசியதற்காக காட்டும் வேகம் ..! குடிநீடில் மலம் கலந்தவர்கள் மீது ஏன் காட்டவில்லை..!?

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கை வயலில் குடிநீடில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிறிதும் மனச்சான்றற்ற திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகள், கால்நடைகள், விளைவித்த பயிர்கள் என அனைத்தையும் இழந்து வாழ்வா-சாவா நிலையிலிருந்த மக்களை உரிய நேரத்தில் சந்தித்து துயர்துடைப்பு உதவிகள் செய்யாத தமிழ்நாடு அரசின் மீதான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக யாரோ ஒருவர் அமைச்சர் மீது சேற்றினை வீசியதற்காக, வன்மம் கொண்டு, ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு, அப்பாவி கிராம மக்கள் அனைவரையும், பொங்கல் விழாவினைக்கூட நிம்மதியாக கொண்டாடவிடாமல் குரூர மனப்பான்மையுடன் கைது செய்து சிறையிலடைப்பது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை, அவர்கள் துன்பப்படும் வேளையில் சென்று சந்திக்காது மக்களைத் துயரச்சேற்றில் தள்ளிய அமைச்சருக்கும், திமுக அரசுக்கும் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அமைச்சர் பொன்முடி பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப் புனிதரா? மகளுக்கும் ஆயிரம் – அம்மாவுக்கும் ஆயிரம் என்றும், ஓசி பஸ் என்றும் தமிழ்நாட்டு மகளிரை இழித்துப் பேசியது, மனு கொடுக்க வந்த மூதாட்டியைத் தலையில் அடித்து தாக்கியது என அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது திமுக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க திறனற்ற திமுக அரசு, அமைச்சர் மீது சேறு வீசியதற்காக அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சேறு வீசியவர்களை கைது செய்ய இத்தனை வேகம் காட்டும் தமிழ்நாடு காவல்துறை அதில் நூற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது வேங்கை வயலில் மக்கள் குடிக்க பயன்படுத்திய குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காட்டவில்லை? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? இதுதான் திராவிட மாடல் அரசின் இந்தியா வியக்கும் சாதனையா? ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப்போக்குடன் திமுக அரசு மேற்கொள்ளும் கொடுங்கோன்மைச் செயல்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆகவே, வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி மீது சேறு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூல் வெளியீடு..!

வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலை வெளியிட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.