பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று பிறந்தநாள் கண்டிருக்கிறார். “இந்நாளை கொள்கை நாளாக கொண்டாட வேண்டும்” என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுக்க கழக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கொள்கைகளை பரப்பியும் வருகின்றனர்.

அவ்வகையில், உதயநிதி ஸ்டாலின் முதலாக சென்னை முகாம் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தின் தூண்களாகவும், சமூக நீதி பாதைக்கு வித்திட்டவர்களாகவும் இருந்து, தங்களது வாழ்நாளை பொதுவாழ்விற்காக அர்ப்பணித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று, உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

எச்.ராஜா விமர்சனம்: விஜய் தனது வர்ணத்தை காட்டுகிறார்..!

ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, லண்டனிலிருந்தாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்டவர்களை விஜய் தாங்கிப் பிடிப்பார் என்றால், எவ்வளவு பெரிய தேசவிரோத கும்பலை பின்பற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியட்டும் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன்.

திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான்.

இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. பிரிவினைவாத தேச விரோத தீய சக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியிருக்கிறது. வருமான வரித்துறையினர் தங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவை மீண்டும் பாஜகவுக்கு இழுக்கும் நோக்கத்தில் இந்த சோதனையை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அதுபோன்று மத்திய அரசுக்கு நோக்கம் இருப்பதுபோல ஊடகத்தினர் கற்பிக்க வேண்டாம்.

தேர்தல் நெருங்க நெருங்க திருமாவளவன் போடும் வேஷங்கள் அதிகமாக உள்ளது. திமுக கூட்டணி உறுதியாக இல்லை என்பதை கூட்டணித் தலைவர்கள் பேசுவதிலிருந்தே தெரிகிறது. வருண பகவான் சென்னையை காப்பாற்றிவிட்டார். ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளது என்பது தவறு. காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு 171 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக 71 விபத்துகள் நடந்துள்ளது. கோயில் சொத்துக்களை அபகரிப்பது, ஆக்கிரமிப்பது திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது.

தவெக தலைவர் விஜய் பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், தனது வர்ணத்தை காட்டிக்கொள்கிறார். அதை வரவேற்கிறேன். ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, லண்டனிலிருந்தாவது சென்னை ராஜதானியை ஆள வேண்டும் என தீர்மானம் போட்டவர்களை விஜய் தாங்கிப் பிடிப்பார் என்றால், எவ்வளவு பெரிய தேசவிரோத கும்பலை பின்பற்றுகிறார் என்பது மக்களுக்கு தெரியட்டும்” என எச்.ராஜா தெரிவித்தார்.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.