சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஒரு யூ டியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் ஜூலை 27-ல் புகார் அளித்திருந்தார்.
அந்த மனுவில், மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி என்பவர் ஒரு யூடியூப் சேனலில், இரு தரப்பு மக்களிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பேசியுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஏளனமாகவும், அவமதிக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருந்தார். எனவே, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இது குறித்து குன்னம் காவல்துறை கடந்த 27-ம் தேதி வழக்குப் பதிவு செய்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்த பத்ரி சேஷாத்ரியை குன்னம் காவல்துறை கைது செய்து, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
பின்னர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, குன்னத்திலுள்ள மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.கவிதா முன்பு காவல்துறை ஆஜர்படுத்தினர். அப்போது, பத்ரி சேஷாத்ரியை ஆக.11 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறை அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் காவல்துறையின் பணியா? என குறிப்பிட்டுள்ளார்.