மம்தா பானர்ஜி: வங்கதேசத்தை போல மேற்கு வங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தார்கள்..!

பெண் மருத்துவர் கொடூர கொலை விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு பின்னால் பாஜகவின் சதி இருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து, ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிர்வாக ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், இந்த சம்பவத்தில் விசாரணை உட்பட அனைத்தும் முறைப்படி நடந்திருக்கிறது. கொலையான பெண் மருத்துவரின் பெற்றோரை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறியிருக்கிறேன்.

அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொள்ள நான் நிர்பந்தித்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இது முழுக்க பொய் மற்றும் ஆதாரமில்லை இதன் பின்னால் பெரிய சதி உள்ளது. இந்த போராட்டத்தை தூண்டி விடப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதி மற்றும் இடதுசாரிகளின் சதியும் உள்ளது. வங்கதேசத்தை போல மேற்கு வங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என சிலர் நினைத்தார்கள்.

இந்தியாவும் வங்கதேசமும் வேறு வேறு என்பதை அவர்கள் அறிய வேண்டும். ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் எப்போதும் உங்களை வரவேற்கிறேன். விரைவில் துர்கா பூஜை வருகிறது. எனவே திருவிழாக்களை கொண்டாடும் மனநிலைக்கு திரும்புங்கள் என மம்தா பானர்ஜி பேசினார்.

மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு ரூ.8 லட்சம் வரை லஞ்சம்..! ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது..!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

சந்தீப் கோஷி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சந்தீப் கோஷ் கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் மருத்துவ மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பணம் வசூலித்தார் எனவும் கூறியிருந்தார். மாணவி வழக்குடன் சேர்த்து இந்த ஊழல் புகாரையும் சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைடுத்து சந்தீப் கோஷ் மீது வழக்கு பதிவு செய்து, அவரது வீடு உட்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் இந்நிலையில், கடந்த 2 வாரகால விசாரணைக்குப் பிறகு நிதி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா போராட்டத்தில் காவல்துறை பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி தேசியக்கொடியுடன் நின்ற முதியவர்..!

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். காவல்துறை பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக நின்று எதிர்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ரது.

பெண் மருத்துவர் வன்கொடுமை, கொடூர கொலை..! ‘இயர்போன்’ மூலம் கொலையாளி கண்டுபிடிப்பு..!

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 1,500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவக் கல்லூரியில் 250 எம்.பி.பி.எஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.

இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அவர் தூங்க சென்றார். கடந்த 9-ம் தேதி காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறுகையில், சம்பவத்தன்று இரவு மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள் ஒன்றாக இரவு உணவை சாப்பிட்டு உள்ளனர். மற்ற 4 மருத்துவர்களும் வெளியே சென்றுவிட்டனர். பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கருத்தரங்கு கூடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. மருத்துவமனை வளாகத்தின் இதர பகுதி சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தோம். அதில் அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் கருத்தரங்கு கூடத்தில் நுழைந்துள்ளார். அப்போது அவர், ‘இயர்போனை’ காதில் மாட்டியிருந்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு அவர் வெளியேறி சென்றுள்ளார். அப்போது அவரது காதில் ‘இயர்போன்’ இல்லை. பெண் மருத்துவரின் உடல் அருகே ‘இயர்போன்’ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் சஞ்சய் ராயை கைது செய்துள்ளோம். மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் தன்னார்வலராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் சஞ்சய் ராய் பணியில் இருக்கும்போது இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொண்ட ஏராளமான வீடியோக்கள் இருந்தன. அவருக்கு 4 முறை திருமணமாகி உள்ளது. அவரது பாலியல் தொந்தரவை சமாளிக்க முடியாமல் அனைத்து மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர். பாலியல் வன்கொடுமையின்போது சஞ்சய் ராயிடம் இருந்து தப்பிக்க பெண் மருத்துவர் தீவிரமாக போராடி உள்ளார். குத்து சண்டை வீரரான சஞ்சய், பெண் மருத்துவரை மிக பலமாக தாக்கி இருக்கிறார். அவர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் மரணத்துக்கு நீதி கோரி மேற்குவங்கம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியை புறக்கணித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பெண் மருத்துவர் கொலையில் நேர்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உஷாரய்யா உஷாரு: ஆன்லைனில் வேலை… வீட்டிலிருந்தே பல லட்சம் சம்பாதிக்கலாம் என்ற மோசடி வார்த்தையை நம்பாதே…!

என்னதான் கல்வி திட்டம்..? எதற்காக படிக்கின்றார்கள் என்று அரசுக்கும் தெரியாது.... எதற்காக படிக்க வைக்கின்றோம் என்று படிக்க வைப்பவர்களுக்கு தெரியாது .... எதற்காக படிக்கின்றோம் என்று படிப்பவர்களுக்கும் தெரியாது.... ஒருவழியாக இது படித்தால் வேலை கிடைக்கும், அது படித்தால் வேலை கிடைக்கும் என்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எதை எதையோ ... குருட்டு வாக்காக படித்துவிட்டு வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதித்து திரும்பி கட்டிவிடலாம் என்ற ஏக்கத்தில் அண்டா, குண்டா , தெரிந்தவர் தெரியாதவர் என்று வட்டிக்கு கடன் வாங்கி படிப்பவர்கள் பலர்.ஆனால் படித்து வேலை தேடினால் படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலை. சரி இந்த வேலையாவது செய்து படிப்பிற்காக பட்டக் கடனை அடைக்கலம் அதற்குள் ஆன்லைனில் வேலை... வீட்டிலிருந்தே பல லட்சம் சம்பாதிக்கலாம்’ என்ற ஆசை வார்த்தைகளைக்காட்டி மோசடி செய்த கும்பல் நாடெங்கும் சுற்றி வருகின்றது. இவர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகும் மக்கள் ஏராளம்.சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்த கோதை என்பவருக்கு கடந்த ஆண்டு வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வர, அதை நம்பி, அதிலிருந்த லிங்கை கோதை பதிவிறக்கம் செய்து இதில் ஒரு வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்தினால் வேலை வழங்கப்படும் என்று நம்பி ஏமாந்தார் என்பது கடந்தகாலம்.வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பகுதி நேர வேலை மற்றும் அதிக சம்பளம் என்று கூறி செய்தியை அனுப்புகின்றனர். அதை நம்பும் இன்றைய தலைமுறையினர் ஏமாற்றப்படுவது வாடிக்கையான ஒன்றாக தொடர்கின்றது. சமீபத்தில் புனேவில் இருந்து இரண்டு வெவ்வேறு நபர்கள் பகுதி நேர வேலை மோசடியில் விழுந்து மொத்தம் ரூ 33 லட்சத்திற்கும் அதிகமாக இழந்துள்ளனர்.ஆன்லைன் பணிகளைச் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற போலி வாக்குறுதியின் பேரில் ஒரு பெண் மருத்துவராகப் பணிபுரியும் ஒருவர், மார்ச் 28 முதல் ஏப்ரல் 22 வரை சைபர் குற்றவாளிகளிடம் ரூ.23.83 லட்சம் பணத்தை இழந்தார்.பெண் மருத்துவருக்கு யூ டியூப் வீடியோக்களில் உள்ள 'லைக்' பட்டனை கிளிக் செய்வது போன்ற எளிய பணிகளை வழங்கினர். இந்த பணிகளை முடித்ததற்காக ஊதியமாக ரூ.10,275 பெற்றுள்ளார். அதன்பின்னர், அவர்களின் கிரிப்டோகரன்சி திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று மோசடி நபர்கள் உறுதியளிக்க அந்த பெண் மருத்துவர் எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில், பணத்தை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டு, இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.23.83 லட்சத்தை மாற்றினார்.பெண் மருத்துவர் தனது கிரிப்டோகரன்சி முதலீட்டை திரும்பப் பெற முடிவு செய்தபோது, மோசடி செய்பவர்கள் கூடுதலாக ரூ.30 லட்சம் கேட்டுள்ளனர், அனால், அவர் பணம் செலுத்த மறுக்க... அதன்பின்னர், மோசடி செய்பவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.. அதன்பிறகே, தான் ஆன்லைன் மோசடியில் சிக்கியதை உணர்ந்தார்.இதே போல் புனேவில் உள்ள தெர்கானைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், 'யூ டியூப் வீடியோவுக்கு லைக் செய்தால் ஒரு லைக்கிற்கு ரூ.50 சம்பாதிக்கலாம் என்றும், ஒரு நாளைக்கு ரூ.5,000 வழங்குவதாக வந்த செய்தி மற்றும் ப்ரீபெய்டு பணிகளில் முதலீடு செய்தால், 30 சதவீதம் லாபம் ஈட்டலாம் என்றும் கூறப்பட்டது. அதிக பணம் சம்பாதிக்கும் என்ற ஆசையில் அந்த நபர் வழிமுறைகளைப் பின்பற்றி, சில மணிநேரங்களில் 500 ரூபாய் சம்பாதித்தார்.பின்னர் பொறியாளருக்கு ஒரு இணைப்பு அனுப்பப்பட்டு, அந்த இணைப்பு வழியாக வீடியோக்களை விரும்புமாறு கூறப்பட்டது. அவர்களை நம்பி, பொறியாளர் அவருக்கு வழங்கப்பட்ட UPI ஐடிக்கு ரூ.12,000 பரிமாற்றம் செய்தார். அவர் ரூ.16,000 சம்பாதித்தார். அவர் ஏப்ரல் 14 அன்று மூன்று பரிவர்த்தனைகள் மூலம் ரூ.5 லட்சத்தை அனுப்பினார். பின்னர், தனது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், மேலும் பணம் அனுப்ப வேண்டும் என்று மோசடி நபர்கள் கூறினர். தனது பணத்தை மீட்பதற்கான நம்பிக்கையில், பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 19 ஆம் தேதி புதிய குழுவில் சேர்ந்து, ஏப்ரல் 20 ஆம் தேதி 7பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 3.96 லட்சத்தை மாற்றினார். மொத்தம் ரூ.8.96 லட்சத்தை மோசடி செய்தவர்களிடம் இழந்தார் என்பது வேதனையான விஷயம். என்று தெரிவித்துள்ளனர்.இந்த 2 சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மோசடி செய்பவர்களால் தொடர்பு கொள்ளப்பட்டனர். அனைத்து தகவல்தொடர்புகளும் மெசேஜிங் செயலிகள் மூலம் செய்யப்பட்டன. இந்த மோசடி வேகமாக அதிகரித்து வருகிறது. சைபர் மோசடி மூலம் சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கான பணத்தை திருடி வருகின்றனர். எனவே மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.