மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முதலமைச்சர் பீரன் சிங் ஆட்சி செய்து வருகிறார். இந்த மாநிலத்தில் குக்கி எனும் பழங்குடி மக்களும், மைத்தேயி பிரிவு மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருதரப்புக்கும் பிரச்சனை இருந்து கடந்த மே மாதம் 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டு, வன்முறையாக உருமாறியது. அன்று முதல் கடந்த இரண்டரை மாதமாக மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையில் துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதனால் ஏராளமானவர்கள் பலியான நிலையில் நிறையபேர் வீடுகளை இழந்து தவிக்க தொடங்கினர். தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140-க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர், மாநில காவல்துறை உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இருப்பினும் இன்னும் வன்முறை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலம் பைனோம் கிராமத்தில் உள்ள வீடுகளை எரித்த கும்பல் அதிலிருந்து தப்பியோடிய 2 ஆண்கள், 3 பெண்கள் என ஐந்து பேரை தாக்கி உள்ளனர். இதில் ஒரு ஆண் இறந்த நிலையில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல், இன்னொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. மேலும் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.