பிளாட்ஃபார்மில் வைத்து பாலியல் வன்கொடுமை..! சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்..!

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கிய பிரச்னை ஓய்வதற்குள்ளேயே மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பிளாட்ஃபார்மில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரம் ஆன்மிகத்துப் பெயர்பெற்ற நகரமாகும். இந்நிலையில், உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு செப்டம்பர் 4 ஆம் தேதி பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அந்தப் புகாரில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய லோகேஷ் என்பவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு, இரண்டு மணி நேரத்தில் லோகேஷை கைது செய்தனர். லோகேஷிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண்ணை மது அருந்தச் செய்ததாகவும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் பிளாட்ஃபார்மில் நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்காமல், பலரும் வீடியோ எடுத்ததுதான் கொடுமையான சம்பவம்.

மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு ரூ.8 லட்சம் வரை லஞ்சம்..! ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது..!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

சந்தீப் கோஷி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் சந்தீப் கோஷ் கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் மருத்துவ மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை பணம் வசூலித்தார் எனவும் கூறியிருந்தார். மாணவி வழக்குடன் சேர்த்து இந்த ஊழல் புகாரையும் சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைடுத்து சந்தீப் கோஷ் மீது வழக்கு பதிவு செய்து, அவரது வீடு உட்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் இந்நிலையில், கடந்த 2 வாரகால விசாரணைக்குப் பிறகு நிதி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளால் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா போராட்டத்தில் காவல்துறை பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி தேசியக்கொடியுடன் நின்ற முதியவர்..!

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். காவல்துறை பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக நின்று எதிர்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ரது.